Last Updated : 17 Feb, 2015 09:35 AM

 

Published : 17 Feb 2015 09:35 AM
Last Updated : 17 Feb 2015 09:35 AM

சமூக ஊடக நண்பர் இறந்துவிட்டால் எப்படித் துக்கிப்பது?

மெய்நிகர் உலகத்து நட்புக்கு முகமும் கிடையாது, உணர்வும் கிடையாது என்றே தோன்றுகிறது.

இணையதளம் போன்ற சமூக ஊடகங்கள் வழியாக, நேரில் பார்த்திராத பலரை நாம் நண்பர்களாக்கிக்கொள்கிறோம். அவர்கள் மரணம் அடையும்போது அவர்களுடைய மறைவுக்கு எப்படி துக்கம் தெரிவிப்பது, அந்தத் தொடர்பை மரபார்ந்த வழியில் எப்படி முடித்துக்கொள்வது என்பதற்கு இன்னும் வழி காணப்படவில்லை.

கடந்த வாரம், எனக்குத் தனிப்பட்ட முறையில் தெரிந்திராத ஒரு சிநேகிதியை இழந்துவிட்டேன். நிஜ வாழ்க்கையில் அவரை நான் சந்தித்ததில்லை அல்லது சந்தித்ததே இல்லை என்றும் கூறிவிடலாம். நான் விரும்பியிருந்தால் சந்தித்திருக்கலாம். எங்கள் இருவருக்கும் பொதுவான நண்பர்களும் அறிமுக மானவர்களும் பலர் இருக்கிறார்கள். அவர்களிலும் சிலரைத்தான் நான் நேரில் சந்தித்திருக்கிறேன். பலரைச் சந்தித்ததில்லை. நாங்கள் இருவரும் வசித்த உண்மை உலகும், மெய்நிகர் உலகும் பிரிவு காண முடியாத வகையில் பின்னிப்பிணைந்துள்ளன. உண்மையான உலகிலிருந்து அவர் விலகிவிட்டார் என்பதை நான் கவனிக்கவே இல்லை. மெய்நிகர் உலகில் அவர் இல்லாதபோதுதான் உண்மை அறிந்தேன். இப்படி ஒருவர் இருக்கிறார் என்று அரூபமாக மட்டுமே தெரிந்துகொண்ட நிலையில், அவர் மறையும்போது அதற்காக எப்படி இரங்குவது?

போன தலைமுறையும் இந்தத் தலைமுறையும்

என்னுடைய பெற்றோரைவிட நான் அதிக இரங்கல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றாக வேண்டும். ஏனென்றால், அவர்களைவிட எனக்கு நிறையப் பேரைத் தெரியும். இதுவரை நான் நினைவுகூர்ந்திராதவர்கள், என்னுடைய தலைமுறைக்கு முந்தையவர்கள் என்னுடைய நினைவிலிருந்து நழுவியிருந்தாலும், என்னுடைய சமூக வலையமைப்பில் நிச்சயம் இருந்து கொண்டிருக்கிறார்கள். இதோ, இது ஒரு திருமண ஆல்பம். இது பிறந்த நாள் ஆல்பம். அடுத்தது, தவிர்க்க முடியாதது. ஆம் - இது ஒரு இரங்கல் நிகழ்ச்சி.

1990-களில் பிரிட்டனைச் சேர்ந்த மானுடவியல் ஆய்வாளர் ராபின் டன்பார் ஒரு மாதிரிக் கணக்கிட்டு, நம்முடைய மூதாதையரின் மூளையின் உருவத் துக்கும் வாழ்க்கையில் அவர்கள் அதிகபட்சம் பழகி யிருக்கக்கூடிய மக்கள் எண்ணிக்கைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது என்று கூறினார். உறவினர்கள், நண்பர்கள் என்று ஒருவருக்கு சுமார் 150 பேர் வரை தொடர்புள்ளவர்களாக இருக்க முடியும் என்றார்.

ஃபேஸ்புக், ட்விட்டர் போன்றவை புழக்கத்துக்கு வந்த பிறகு, மூளையின் அளவுக்கேற்பத் தொடர்புள்ளவர்களின் எண்ணிக்கையும் இருக்கும் என்ற பழைய கருதுகோள் பொருத்தமற்றதாகிவிடுகிறது. இப்போது என்னால் நட்பு முறையில் ஏராளமானவர்களுடன் ஒரே சமயத்தில் பேச முடியும். அவர்களுடைய பெயர், படிப்பு, தொழில், வயது, சமூக அந்தஸ்து போன்றவற்றின் அடிப்படையில் அவர்களை வகைப்படுத்தவும், இனம் பிரிக்கவும் முடியும். இசை, நாட்டியம், பெருவிருந்து, மதுவிருந்து, கேளிக்கைகள் போன்றவற்றின்போது எத்தனை பேருடன் மகிழ்ச்சியாகக் கழிக்க முடியுமோ அதற்கு இணையாகவோ அதைவிட அதிகமாகவோகூட நட்பு வட்டத்தில் திளைக்க முடியும்.

ஒரே அறையில் அல்லது ஒரே அரங்கில் சந்திக்கக் கூடியவர்களைவிட, அதிக எண்ணிக்கையில் இணையம் (ஆன்-லைன்) வழியாகச் சந்தித்துவிட முடியும். நேரில் வந்து சந்திக்கிறவர்களோடுதான் நாம் நெருக்கமாக இருக்க முடியும் என்பதில்லை. நமக்கு முந்தைய தலை முறையைக்கூட மீண்டும் கண்டுபிடித்து அவர்களை நம் அருகில் கொண்டுவந்து உறவையோ நட்பையோ புதுப்பித்துக்கொள்ள முடியும்.

டன்பார் தனது ஆய்வில் கூறினாரே அதிகபட்சம் 150 பேருடன் ஒரு மனிதரால் தொடர்புகொள்ள முடியும் என்று. அந்த காலகட்டத்தில்கூட அவர்கள் அனைவருமே தங்களுக்குள் உள்ள உறவுகளைப் புரிந்துகொள்வதிலும் நினைவில் வைத்துக்கொள்வதிலும் சிக்கல்கள் இருந்திருக்கும்.

குளிர்நீர்த் தொட்டி

இணையதளம் என்பது அதிக எண்ணிக்கையிலானவர் களுடன் சமூகத் தொடர்புகொள்ள உதவியாக இருப்பது. இதுவரை பார்த்தேயிராதவர்களுடன் நட்புகொள்ளலாம். ட்விட்டர் என்பது உரையாடல் செய்யும் களம் என்பதற்கும் மேலே. அது பள்ளிக்கூட வளாகம், மதிய உணவுக்கூடம், தாகசாந்தி செய்துகொள்வதற்கான குளிர்நீர்த் தொட்டி. ஃபேஸ்புக்கில் கிடைக்கும் நண்பர்களைப் போலவேதான் மற்ற சமூக ஊடக நண்பர்களும்.

என்னுடைய சிநேகிதியின் மறைவு பற்றி அறிந்ததும் அவருடைய சிநேகிதருக்கு நேரடியாகத் தகவல் அனுப்பினேன். தவறு செய்துவிட்டேனோ என்று அடுத்த நாள் கருதினேன். ஏனென்றால், அவரை எனக்கு நேரடியாகத் தெரியாது. அந்தப் பெண்ணும் நானும் என்ன பேசிக்கொண்டோம் என்பதெல்லாம் அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. அப்படியிருக்க, அவரை நான் நேரடியாகத் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவித்திருக்க வேண்டுமா? இது சரியா? அந்தப் பெண்ணின் மறைவு என்பது என்னைப் பொறுத்தவரை எப்படிப்பட்ட துயரம்? அதை ஏன் அவருடைய நண்பருடன் நான் பகிர்ந்துகொள்ள வேண்டும்? அந்த இரங்கலை அவர் ஏற்பாரா, நிராகரிப்பாரா? நம்முடைய வாழ்க்கையில் இதைப் போன்ற அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.

ட்விட்டர் என்பது அடுத்தவர்களுடைய வாழ்க்கையை அன்றாடம் நாம் பார்க்க உதவும் ஜன்னல். அதன் மூலம் அவர்களுடைய அன்றாடப் போராட்டங்களில், புகார்களில், நகைச்சுவையான பேச்சில், அவர்களுடைய கொண்டாட்டங்களில் நாமும் பங்கேற்கிறோம். இது ஒரு மாயை. இந்த மாயையால்தான் நான் அந்தப் பெண்ணின் மரணத்தை உணர்ந்தேன். இது ஒரு வினோதமான உணர்வு. யாருடைய துயரத்தையோ (அவரில்லாமலே) இன்னொருவரிடம் இணையதளம் வழியாகப் பகிர்ந்துகொள்கிறோம்.

நேரில் பார்த்திராத ஒருவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவிக்கவோ, சோகத்தைப் பகிர்ந்துகொள்ளவோ இதுவரையில் ஒரு மரபோ வழிமுறையோ ஏற்பட்டிருக்க வில்லை. இன்னும் சிறிது காலத்தில் அந்த மரபுகள்கூட உருவாகிவிடும். அப்படி ஏற்படும்வரை இப்போதைக்கு நாம் நம்முடைய உள்ளத்தில் இருப்பதை இப்படி இறக்கிவைப்போம்.

© ‘தி கார்டியன்’, தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x