Published : 11 Jul 2019 08:53 AM
Last Updated : 11 Jul 2019 08:53 AM

அமெரிக்க உறவுக்கு இந்தியர்கள் கொடுக்கும் விலை

பெரும் எரிபொருள் நெருக்கடியை நோக்கி இந்தியா சென்றுகொண்டிருக்கிறது; அமெரிக்காவுடனான உறவின் காரணமாக, ஈரானிடமிருந்து வழக்கமாக வாங்கும் எண்ணெயை இறக்குமதி செய்யப்போவதில்லை என்ற இந்திய அரசின் முடிவு, இந்த நெருக்கடியைத் துரிதப்படுத்திவிடும் என்கிறார்கள். எரிபொருள் எண்ணெய் நுகர்வில் உலகிலேயே இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது; ஆனால், 80% எண்ணெயை இறக்குமதி மூலமாகவே பெறுகிறது. இப்படி இந்தியா இறக்குமதிசெய்யும் எண்ணெயில் 10% ஈரானிலிருந்து வந்துகொண்டிருந்தது; இதன் மதிப்பு 8.9 லட்சம் கோடி; ஈரான் நமக்கு மலிவு விலையில் எண்ணெயைக் கொடுத்துவந்தது. எண்ணெய்க்கான தொகையை டாலராக அல்லாமல், ரூபாயாகவே பெற்றுவந்த ஈரான், இந்தத் தொகையைச் செலுத்த 60 நாட்கள் அவகாசமும் தந்திருந்தது; மற்றவர்கள் 30 நாட்கள் மட்டுமே அவகாசம் தந்திருந்தார்கள்; டாலராகப் பணத்தைப் பெற்றுவந்தார்கள்.

தங்கள் தொழிலுக்கு சரக்குப் போக்குவரத்தை எண்ணற்ற நிறுவனங்கள் நம்பியிருக்கின்றன. ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதி நிறுத்தப்பட்டுவிட்ட நிலையில், எரிபொருள் செலவு இனி எவ்வளவு எகிறும் என்று பயந்துபோயிருக்கின்றன அவை; லிட்டருக்கு ரூ.3 முதல் ரூ.5 வரை வரவிருக்கும் மாதங்களில் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோலியப் பொருட்கள் விலை உயரலாம் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் இருக்கிறது. விலைவாசி உயர்வுக்கும், அந்நியச் செலாவணி கரைவுக்கும் இது வழிவகுக்கும்; கூடவே பொருளாதார வளர்ச்சியிலும் பாதிப்பு உண்டாகும். இவ்வளவு விலையையும் அமெரிக்க உறவுக்காக நாம் கொடுக்கிறோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x