Published : 17 Aug 2017 09:12 AM
Last Updated : 17 Aug 2017 09:12 AM

மாநிலங்களின் நிதி உரிமைகளுக்கு மங்களம்பாடிய ஜிஎஸ்டி!

டந்த ஜூலை 1 நள்ளிரவில் ‘ஜிஎஸ்டி’ எனப்படும் ‘பொதுச் சரக்கு - சேவை வரி’யைக் கொண்டுவந்த மகிழ்ச்சியை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் மத்திய அரசு கோலாகலமாகக் கொண்டாடியது. அப்போது, உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தன்னுடைய பாணியில் ‘ஜிஎஸ்டி’ என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கத்துக்கு, ‘குட் அண்டு சிம்பிள் டாக்ஸ்’ என்று விளக்கம் அளித்து மகிழ்ந்திருக்கிறார். இந்தியாவில் ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ நிலவுகிறது என்பதற்கு இது நல்ல உதாரணம் என்றும் பாராட்டியிருக்கிறார். வரி தொடர்பாகச் சட்டம் இயற்ற அரசியல் சட்டம் தங்களுக்கு அளித்த உரிமைகளை மாநில அரசுகள் தாங்களாகவே மத்திய அரசின் வசம் ஒப்படைத்துவிட்டன என்கின்றனர்.

பாராட்டுரைகள் காதுக்கினியதாக இருக்கலாம்; பொதுச் சரக்கு - சேவை வரியால் உண்மையிலேயே நன்மைகள்தான் விளையும் என்று எவருக்குமே நிச்சயமாகத் தெரியாது. நாடு முழுவதற்கும் ஒரே மாதிரி வரி விகிதம், நாடு முழுவதுமே ஒரே சந்தை என்ற உற்சாக உணர்வு மட்டுமே போதுமானதல்ல. பொது வரி விகிதங்களால் மகிழ்ச்சி எப்படி அதிகமாகும், சமத்துவமும் விடுதலையும் எப்படி மேலும் வலுப்பெறும் என்று புரியவில்லை. கூட்டுறவுக் கூட்டாட்சிக்கு வித்தி டும் என்பதைவிட மாநிலங்களின் நிதி நிர்வாகத்தில் அப்பட்டமாகத் தலையிட்டு, அவற்றின் உரிமைகளை மத்திய அரசு பறித்துவிட்டது என்பதே உண்மை. நிதி நிர்வாகத்தில் மாநிலங்களுக்கு இருந்த சுயேச்சையான உரிமையை, வேறு யாராலும் பறிக்க முடியாது என்று அரசியல் சட்டம் தீர்மானமாகச் சொல்கிறது.

வரி நிர்வாகத்தில் கூட்டாளிகள்

நாடு சுதந்திரம் அடைந்தபோது இயற்றப்பட்ட அரசியல் சட்டம் தெளிவான கூட்டரசைத்தான் உருவாக்கித் தந்தது. மத்திய அரசில் ஒன்று, மாநிலங்களில் ஒன்று என்று இரு நிலைகளிலான அரசுகளை அரசியல் சட்டம் பரிந்துரைக்கிறது. ராணுவம், வெளியுறவுத் துறை போன்ற தேசிய முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் மத்திய அரசுக்கு மட்டுமே தரப்பட்டன. கல்வி, சுகாதாரம், சட்டம் - ஒழுங்கு, வேளாண்மை, தண்ணீர் வளம், நில நிர்வாகம் போன்றவற்றை நிர்வகிக்கும் பொறுப்பு மாநில அரசுகளுக்கு மட்டுமே தரப்பட்டது.

மாநில அரசுகளை மத்திய அரசின் சம கூட்டாளிகளாகவே அரசியல் சட்ட நிபுணர்கள் கருதியுள்ளனர். எனவே, வரி வசூலிக்கும் அதிகாரத்தையும் வரி வசூலிப்பதற்கான இனங்களையும் கவனமாகப் பிரித்து ஒதுக்கியிருக்கின்றனர். மத்திய அரசுக்குத் தனியாகவும், மாநிலங்களுக்குத் தனியாகவும் வரி இனங்கள் பிரிக்கப்பட்டன. விவசாய வருமானம் தவிர்த்து, இதர இனங்களிலிருந்து கிடைக்கும் வருமானங்கள் மீதான வரி, சுங்க வரி, உற்பத்தி (கலால்) வரி ஆகியவற்றை மத்திய அரசு வசூலித்துக்கொள்ளலாம் என்றும், விற்பனை வரி, சரக்குகளைக் கொண்டுவரும்போது நுழைவு வரி போன்றவற்றை மாநிலங்கள் வசூலித்துக்கொள்ளலாம் என்றும் பிரித்துத் தந்தனர். வருமானத்தில் தன்னிறைவு காண வேண்டும், தங்களுடைய மாநிலத்தின் நிலைமைக்கேற்ப வரி விகிதங்களையும் வரி விதிப்பையும் தீர்மானித்து, மக்களின் தேவைக்கேற்பச் செயல்பட வேண்டும் என்பதற்காகவே பொது நிதி நிர்வாகத்தை அமைத்துக் கொடுத்தனர்.

அரசியல் சட்டத்தில் இது தொடர்பான விவாதம் நடந்தபோது, மாநிலங்கள் விதிக்கும் விற்பனை வரிக்கு உச்ச வரம்பு கொண்டுவர நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் தர வேண்டும் என்று ஒரு யோசனை கூறப்பட்டது. “விற்பனை வரி நிர்வாகத்தை மாநிலங்களிடம் ஒப்படைத்த பிறகு, அதற்கு நாடாளுமன்றம் (மத்திய அரசு) உச்ச வரம்பு நிர்ணயிப்பது மாநிலங்களின் வரி நிர்வாகத்தை நிலைமைக்கேற்ப சுதந்திரமாகச் செய்ய முடியாமல் தடுத்துவிடும். மாநிலங்களின் வரிச் சுதந்திரத்தில் அது தலையிடுவதாக அமையும்” என்று பதில் அளித்து அதை நிராகரித்துவிட்டார் அரசியல் சட்ட சபையின் தலைவர் பி.ஆர். அம்பேத்கர்.

ஜிஎஸ்டி பேரவையால் குழப்பம்

‘இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்’ என்று அரசியல் சட்டத்தின் முதல் கூறு (1-ம் எண்) தெரிவிக்கிறது. இந்தப் பரந்த நோக்கத்துக்கு முரணாக ஜிஎஸ்டி இருக்கிறது. நாடு முழுவதையும் ஒரே சந்தையாக்க வேண்டும் என்பதற்காக எல்லா மறைமுக வரிகளையும் விதிக்கவும் வசூலிக்கவும் மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் அதிகாரம் வழங்குகிறது. இதற்காக ‘பொதுச் சரக்கு-சேவை வரி பேரவை’ என்ற அமைப்பை யும் ஏற்படுத்தியிருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிதித் துறையில் வருவாய்ப் பிரிவுக்கான மத்திய இணையமைச்சர், மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் இதன் பதவி வழி உறுப்பினர்கள். இதுதான் வரி நிர்வாகம் தொடர்பான மைய அமைப்பாகச் செயல்படும்.

பொதுச் சரக்கு - சேவை வரிக்குள் எந்தப் பழைய வரிகள் சேரும், எந்தெந்த சரக்குக்கு அல்லது சேவைக்கு இந்த வரி விதிப்பிலிருந்து விலக்கு தரப்படும், வரி எந்த விகிதத்தில் விதிக்கப்படும் போன்றவற்றை இதுதான் தீர்மானிக்கும். இந்தப் பேரவையில் ஒரு முடிவு எடுக்கப்படுவதற்கு அதில் பங்கேற்பவர்களில் முக்கால் பங்கினரின் ஆதரவு அவசியம். ஆனால், மத்திய அரசுக்குரிய வாக்குகளின் பலம் மூன்றில் ஒரு பங்கு! அதாவது, மத்தியில் ஆளும் கட்சிக்கு இந்தப் பேரவையில் தீர்மான முடிவில் கணிசமான பலம் இருக்கும். இந்த வாக்குரிமையை, ரத்து அதிகார உரிமை (வீட்டோ) என்றுகூடக் கருதலாம்.

முடிவுகளா.. பரிந்துரைகளா?

ஜிஎஸ்டி பேரவையின் முடிவுகள் மாநில அரசுகளைக் கட்டுப்படுத்துமா என்ற குழப்பம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. ‘279 -ஏ’ என்ற சட்டக்கூறின்படிதான் ‘பொதுச் சரக்கு - சேவை வரி பேரவை’ ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பேரவையின் முடிவுகளை அது பரிந்துரைகள் என்கிறது. பரிந்துரைகளை அமல்படுத்தும்போது சிக்கல்கள் தோன்றினால், அதைத் தீர்த்து வைக்கும் அதிகாரத்தையும் பேரவைக்கு அது அளிக்கிறது. இதன் முடிவுகள் வெறும் பரிந்துரைகள்தான் என்றால், பூசல்களைத் தீர்க்கும் அமைப்பை ஏன் உருவாக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது.

புதிய சட்டத்தை எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் அரசியல் சட்டத்தை வகுத்தவர்கள் மிகக் கவனத்துடன் மாநிலங்களுக்கு அளித்த வரி விதிப்பு உரிமைகளையும், நிதி நிர்வாகத்தில் அளித்த சுதந்திரத்தையும் குறைத்திருப்பது தெரிகிறது. எனவே, பேரவையின் பரிந்துரையை மீறி ஏதாவது ஒரு மாநிலமோ, சில மாநிலங்களோ - சில சரக்குகளுக்கு அல்லது சேவைகளுக்கு - கூடுதலாக வரி விதிக்கவும் எதிர்காலத்தில் வாய்ப்பு இருக்கிறது. அத்தகைய நிலை, மத்திய அரசுக்கே இருந்த தனிப்பட்ட வரிவிதிப்பு உரிமையில்கூட குறுக்கிடுவதுதான். இந்தப் பேரவை யின் பரிந்துரைகள் ஏற்கப்பட வேண்டிய கட்டாயமான பரிந்துரைகள் என்றால், மாநில அரசுகள் தங்களுடைய பொது நிதி நிர்வாக உரிமைகள் அனைத்தையும் மத்திய அரசிடம் ஒப்படைத்துவிட்டன என்றே பொருள். எந்த மாநிலமும் தன்னுடைய மாநிலத்தின் தனித் தன்மைக்கு ஏற்பவோ, மக்களுடைய தேவைகளுக்காகவோ இனி வரிவிதிக்க முடியாது.

-ஷுரித் பார்த்தசாரதி,

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.

தமிழில்: சாரி, ©: ‘தி இந்து’ ஆங்கிலம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x