Last Updated : 09 Sep, 2016 09:23 AM

 

Published : 09 Sep 2016 09:23 AM
Last Updated : 09 Sep 2016 09:23 AM

உற்பத்தியை அல்ல, உழவரை மையப்படுத்துங்கள்!

விவசாயம் வெறும் தொழில் மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறை



வானம் பொய்த்துவிட்ட நிலையில் காவிரியும் கைவிடுமோ என்றிருக்கிறது இன்றைய நிலை. பெரிய பதற்றம் வந்துவிடாது. தண்ணீர் வந்தால்தான் என்ன வந்துவிடப்போகிறது என்ற மனநிலையில் உழவர்கள். காவிரிப் படுகையில் விவசாயிகளின் சராசரி நிலவுடைமை இரண்டு ஏக்கர். ஆண்டுக்கு உங்களுக்கு என்ன மிச்சம் என்று கேட்டால், வைக்கோல்தான் மிச்சம் என்பார்கள். பரிகாசமல்ல, வேதனையை முந்திக்கொண்டு முன்னே வந்து நிற்கும் முறுவல். காவிரிக் கரையின் உணர்வு நுணுக்கமே அந்த உழவர்களின் மனத்தெம்பு.

கடனாளி உழவர்களை அதிகமாக உடைய ஆந்திரத்துக்கும், தெலங்கானாவுக்கும் அடுத்த இடத்தில் இருப்பது தமிழகம். தமிழகத்தில் 100-க்கு 80 விவசாயிகளுக்கு மேல் கடனாளிகள் என்றால், காவிரிப் படுகையில் இந்த விகிதம் குறைவாக இருக்க வாய்ப்பில்லை. ஆண்டுக்கு ஆண்டு மொத்த நெல் உற்பத்தி கூடிக்கொண்டே போவதற்கு இலக்கு வைத்து எட்டிவிடுகிறோம். ஏக்கருக்கு, இந்த ஆண்டு இத்தனை மூட்டை விளைச்சல் என்றால், மறு ஆண்டு கண்டுமுதல் அதைவிடக் கூடுதலாக இருக்கும்படி பார்த்துக்கொள்கிறோம். இருந்தாலும், உழவர்களின் கடன் சுமையும் மூன்று, நான்கு பங்கு கூடிவிடுவதுதான் எளிதில் புரிபடுவதாக இல்லை. நாட்டின் வளமும், உழவர்களின் நலிவும் ஒன்றாகவே சேர்ந்து நிகழ்வது ஒரு விந்தை.

சலித்துப்போன சாகுபடி

கிராமத்தை விட்டுக் குடிபெயர்ந்தவர்களின் மூன்றாவது தலைமுறை, நாட்டின் விவசாய வளர்ச்சிக்குத் திட்டமிடும் பொறுப்பில் இருக்கிறது. உற்பத்தியின் உயர்வு உழவர்களின் வளமாக உருமாறாமலாபோகும் என்று அனுமானித்துக்கொள்கிறார்கள். தமிழகத்தில் நெல் விளையும் மொத்தப் பரப்பில் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இருப்பது மட்டும் கால் பங்குக்குக் கொஞ்சம்தான் குறைவு. மொத்த நெல் உற்பத்தியில் இவற்றின் பங்களிப்பு கால் பங்குக்கு மேல். இந்த நெற்களஞ்சியத்தில் விவசாயத்தைச் சலித்துக்கொள்ளும் சூழலும், அதை வெறுத்துப் பேசும் நிலைமையும் சமுதாயம் மிகவும் கவலைப்பட வேண்டியவை. காவிரிப் படுகையில் கிராமத்தை விட முடிந்தவர்கள் நகரங்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டார்கள். அவர்களை, ஏதோ பாழுங்கிணற்றிலிருந்து தப்பித்தவர்களைப் போல் கரையேறிவிட்டார்கள் என்று சொல்வது வழக்க மாகிவிட்டது. தென்னை விவசாயிகள் ஆதரவு விலை கோரிப் போராடுகிறார்கள். தங்களைப் பாதுகாக்க எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கக் கோருகிறார்கள். ஆலைக்கு விற்ற கரும்புக்கு நிலுவைத் தொகை கிடைக்காத அவதி. நெருக்கி ரூ.5,800 கோடி பயிர்க் கடன்களை அரசு தள்ளுபடி செய்திருக்கிறது. இருந்தாலும், எல்லாக் கடன்களையும் எல்லா விவசாயிகளுக்கும் தள்ளுபடி செய்யும்படி கோர வேண்டிய நிலைமை. இடர் களையவும், துயர் துடைக்கவும் இலவசம், மானியம் என்று குறுவைக்கும் சம்பாவுக்கும் தொகுப்புத் திட்டங்கள். உற்பத்தி இலக்குக்காக வகுக்கும் திட்டங்கள், உழவர்களைக் கடனிலிருந்தும் மீட்குமா என்றும் பார்க்க வேண்டும்.

நமது புரிதலின் போதாமை

கிராமங்களையும் உழவர்களையும் நாம் புரிந்து கொள்வதில் ஒரு போதாமை உள்ளது. விவசாயம் வெறும் தொழில் மட்டுமல்ல, ஒரு வாழ்க்கை முறை. அக்கரைப் பச்சைக்கு ஆசைப்படுவதுபோல் சிலர் அதற்கு ஆசைப்படுவதற்கும், அதிலேயே இருப்பவர்கள் அதை வெறுப்பதற்கும் இதுவே காரணம்.

40 ஆண்டுகளுக்கு முன்பு இருக்கலாம். சென்னை தீவுத்திடலில் நடந்த பொங்கல் வணிகக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். கிராமம் என்று எழுதிய பலகையோடு ஒரு இடம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. முண்டாசு கட்டி, முழங்கால் அளவு வேட்டி உடுத்தி, குத்துக்கால் வைத்து ஒருவர் உட்கார்ந்திருந்தார். அருகே ஒரு மண் சட்டியைத் துழாவும் பாவனையில் அவரது மனைவி. வைக்கோலைக் கடித்துக்கொண்டு இரண்டு கொம்பு மாடுகள். கரும்புத் தோகையால் கூரை வேய்ந்த குடிசை. கிராமத்தைப் பற்றி சமுதாயத்துக்கு உருவாகியிருக்கும் இந்தப் பிம்பமும் ஒரு விமர்சனம். இப்படி ஒன்றைச் சித்தரித்துத் தன்னை அதற்கு வேறாகக் காட்டிக்கொள்கிறது சமுதாயம். சமுதாயத்தின் ஒரு பக்கம் மற்றொரு பக்கத்தைத் தானே தூக்கிச் சுமக்கும் சுமையாகச் சித்தரிக்கிறது. தன் குழந்தைகளைக் கிராமத்துக்கு அழைத்துவந்து அங்கே முணுக் முணுக்கென்று குடிசைகளில் எரியும் விளக்கைக் காட்ட வேண்டும் என்றார் ஒரு மருத்துவ நண்பர். இருளை விரட்டத் திராணி இல்லாத விளக்குகளும், இல்லாமையை விரட்ட இயலாத மக்களுமே கிராமம்! கிராம மேம்பாட்டுக்கான எத்தனையோ திட்டங்கள் இந்தப் பிம்பங்களால் உந்தப்பட்டவையாக இருக்கும்.

வரவும் செலவும்

திருவாரூருக்கும் கிழக்கே, காவிரியின் கடைமடையில் இருக்கும் ஒருவர் விவசாயத்துக்கான செலவைக் கூறினார். எருவடி, புழுதி உழவு, நாற்றங்கால் உழவு, அதற்குச் சேறு குழப்புவது, விதை கிரயம், விதை தெளி, நடவு வயல் உழவு, வயல் நிரவ, அண்டை போட ஆள் செலவு, நாற்றுப் பறி, நடவுச் சம்பளம், அடி உரம், மேல் உரம், பூச்சி மருந்து, இவற்றுக்குத் தெளிப்புக் கூலி, களை துவைப்பு, இயந்திர அறுவடை, தலையாரிச் சம்பளம், தூக்குக் கூலி, வண்டிச் சத்தம், பிறகு கொள்முதல் நிலைய உபரிச் செலவாக எழுத வேண்டிய செலவு - எல்லாமாக ஒரு ஏக்கருக்கு ரூ.17,000 செலவாகிறது என்றார். நல்ல கண்டுமுதல் என்றால், இரண்டு ஏக்கருக்கு 57 கிலோ கொண்ட 48 மூட்டை அவருக்குக் கிடைக்கலாம். பொருளாதார வல்லுநர்கள் அடுத்த ஆண்டுக்கான செலவைக் கழித்து, நிகரத்தைச் சொல்லுங்கள் என்பார்கள். அவ்வாறே அடுத்த ஆண்டுக்கான தரிசுக் கூலிச் செலவுபோக அவருக்கு மிஞ்சுவது 6,000-க்கும் குறைவு. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உளுந்தோ பயறோ நல்ல கண்டுமுதலானால் அதுதான் சொல்லிக்கொள்ளும்படியான வருமானமாக இருக்கும். இவ்வாண்டு இதுவரை வராத தண்ணீர் இனிமேல் வந்தாலும் நிலமில்லாத் தொழிலாளிக்கு முழுமையாக 50 நாட்கள் வேலை கிடைப்பது அரிது. அடுத்த ஆண்டுக்கான தரிசுக் கூலியைத் தனியாக வைத்துக்கொள்வதற்கு ஒருவராலும் முடிவதில்லை.

விவசாயச் செலவை ஆராய்ந்து, கொள்முதல் விலையை நிர்ணயிக்கும் இந்திய ஆணையம், இந்த ஆண்டுக்கு நெல் விலையைத் ‘தாராளம் காட்டி’ கிலோவுக்கு 60 பைசா உயர்த்தியுள்ளது. தீவிர சாகுபடி வந்தது. பிறகு, அதுவே இயந்திரமயமானது. இரண்டும் நாட்டின் மொத்த உற்பத்தியை உயர்த்தியது உண்மைதான். ஆனால், ஒரு வாழ்க்கைமுறையாக இருந்த விவசாயத்தின் தன்மையும் மாறியது. அந்த வாழ்க்கைமுறையின் மையக் கூறாக இருந்த விவசாயிகளின் தற்சார்பும் முற்றாக அழிந்தது. விதை, உரம், களைக்கொல்லி, பூச்சிமருந்து, வண்டிச் சத்தம் என்று ஒன்றுவிடாமல் எல்லாவற்றுக்கும் ரொக்கம் கொடுக்க வேண்டும். இப்போது வண்டி ஏது? மாடு ஏது? எருக்குழிதான் ஏது? விளையும் நெல்லையும் விற்றுவிட்டு அரிசியாக வாங்குகிறார்கள். விவசாயத்துக்கான அரசின் திட்டங்களும் செலவினங்களுமே தங்கள் தன்மையை மாற்றிக்கொண்டன. பாசனம், வடிகால், மதகு போன்ற பொதுச் சொத்துகளை உருவாக்கும் செலவுக்குச் சமமாகத் தனி விவசாயிகளை உதிரி உதிரியாக ஊக்குவிக்கவும் நிதி வேண்டும்.

சுற்றுச்சூழலைக் கருதி, காவிரிப் படுகையைப் பாது காக்கப்பட்ட விவசாயப் பகுதியாக அறிவிக்கக் கோரு கிறார்கள். 1986 வாக்கில் காவிரிப் படுகை மேம்பாட்டுக்காகத் தனி ஆணையம் உருவாக்கப்போவதாகச் செய்திகள் வந்தன. மாவட்ட நிர்வாகங்களும் மாநிலத் துறைகளும் செய்துவரும் பணிகளைத் தானே செய்யும் இவ்வகை ஆணையம்பற்றி இன்றைக்காவது சிந்திக்கலாம். உற்பத்திக்கு இலக்கு வேண்டியதுதான் என்றாலும், உழ வரை மையப்படுத்தும் திட்டங்களும் வேண்டும். 1938-ல் விவசாயிகளின் கடன்களை ரத்துசெய்து ராஜாஜி ஒரு சட்டம் கொண்டுவந்தார். 1976-ம் ஆண்டிலும் ஒரு சட்டம் வந்தது. அப்போதுபோல் இப்போதும் கடன் சுமையி லேயே நெரிந்துபோகிறார்கள் விவசாயிகள். நடுத்தர விவசாயிகள்கூட நடவுக் காலத்தில் பண்டம் பாத்திரங்களை அடகு வைத்துப் பார்த்திருக்கிறேன். உழவர்கள் நலிய நலிய உற்பத்தி பெருகுவதில் என்ன மகிழ்ச்சி?

- தங்க.ஜெயராமன், ஆங்கிலப் பேராசிரியர், மொழிபெயர்ப்பாளர்.

தொடர்புக்கு: profjayaraman@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x