Last Updated : 04 Feb, 2014 10:06 AM

 

Published : 04 Feb 2014 10:06 AM
Last Updated : 04 Feb 2014 10:06 AM

‘இங்க என்ன சொல்லுது’ விஜயகாந்த் அவர்களே?

தே.மு.தி.க-வின் உளுந்தூர்பேட்டை மாநாட்டை ஜெயலலிதா நீங்கலாகப் பெரும்பாலான அரசியல் தலைவர்கள் நேரடி ஒளிபரப்பில் பார்த்திருப்பார்கள் அல்லது முடிவாக விஜயகாந்த் என்னதான் சொன்னார் என்பதைத் தங்கள் கட்சியின் இதர தலைவர்களிடம் கேட்டிருப்பார்கள். “கூட்டணி வேணாம்னு சொல்றாங்க...” என்று தன் முடிவைத் தொண்டர்கள் மீது விஜயகாந்த் போட்டதைப் பார்த்த பெரும்பாலானோர் இப்படித்தான் சொல்லியிருக்க வேண்டும்: “பாருங்க… நான் அப்பவே சொல்லலே?!”

என்னதான் பாஸ் சொன்னார்?

ஒருபக்கம் தி.மு.க-வும் அதன் தலைவர் கருணாநிதியும் கன்னத்தில் கை வைத்துக் காத்திருக்க, இன்னொரு புறம் பா.ஜ.க-வும் தமிழருவி மணியனும் வழி மேல் விழி வைத்துக் காத்திருக்க, கடைசியில் விஜயகாந்த் கொடுத்த ‘ட்விஸ்ட்’ மாநாட்டுக்கு வந்த தொண்டர்களே எதிர்பாராதது.

அப்படி என்ன சொன்னார் விஜயகாந்த்? தொண்டர்களைப் பார்த்து ‘இதுவா? அதுவா?’ பாணியில் “கூட்டணி வேணுமா… வேணாமா?” என்ற கேள்வியைக் கேட்டார். கூட்டத்தில் இருந்தவர்கள் “வேணாம்… வேணாம்” என்று கையசைத்தனர். உடனே, தொண்டர்களின் முடிவை ஏற்றுக்கொண்டு “பாருங்க, வேணாம்னு சொல்றான் என் தொண்டன்” என்றார். ஆஹா, இப்படித் தொண்டர்களைக் கேட்டு கூட்டணி முடிவை எடுக்கும் ஒரு தலைவரை இந்தியாவில் நாம் பார்க்க முடியுமா என்று வியப்பில் ஆழ்த்திய அடுத்த நொடி, “என் தொண்டர்கள் சொல்றதுதான் எனக்கு முக்கியம். அதேசமயம், கட்சித் தலைமை என்ன முடிவு செய்யுமோ அதைத் தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்கள்” என்று போட்டாரே ஒரு போடு, ‘ஐயையோ! மறுபடியும் மொதல்ல இருந்தா?’ என்று திகைத்துவிட்டனர் யாவரும்.

இன்னொரு கணக்குக்கு உதவி

எப்படியும் இது இறுதி முடிவல்ல என்று அவருடைய கட்சியினரே கருதும் நிலையில், விஜயகாந்த் முன்பு இப்போது உள்ள வாய்ப்புகள் என்ன? தே.மு.தி.க-வைப் பொறுத்தவரை தற்போது நான்கு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று, தி.மு.க-வுடன் கூட்டணி. இரண்டாவது, பா.ஜ.க-வுடன் கூட்டணி. மூன்றாவது, காங்கிரஸுடன் கூட்டணி. நான்காவது, தனித்து அல்லது புதிய கூட்டணி. இவற்றில் உள்ள சாதக பாதகங்கள் என்னென்ன?

தி.மு.க. கூட்டணியின் சாதக பாதகங்கள்

சாதகம்: தி.மு.க-வுக்கு அடுத்துப் பெரிய கட்சி எதுவும் இல்லை. இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்து தே.மு.தி.க-வுக்குக் கிடைக்கும். விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, புதிய தமிழகம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு 4-5 சீட்டுகளைத் தி.மு.க. ஒதுக்கினால்கூட, மீதி 35 தொகுதிகள் இருக்கும். கொஞ்சம் அழுத்திக் கேட்டால் 12-15 தொகுதிகள் வரை தே.மு.தி.க. பெற முடியும். தி.மு.க-வின் 25-30% வாக்கு வங்கியுடன் தே.மு.தி.க-வின் 8-10% வாக்கு வங்கி சேர்ந்தால் அ.தி.மு.க. கூட்டணிக்குக் கடும் சவாலைக் கொடுக்கலாம்.

பாதகம்: தி.மு.க. தலைமையின் குடும்பச் சண்டை, அந்தக் கட்சியையும் அதன் கூட்டணிக் கட்சிகளையும் பாதிக்கலாம். தி.மு.க. மீதான ஊழல் புகார்கள், இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க-வின் அணுகுமுறை போன்ற காரணங்களால் இளைய தலைமுறையினரின் வாக்குகளைப் பெறுவதில் பின்னடைவைச் சந்திக்கலாம். அ.தி.மு.க-வைத் தொடர்ந்து தி.மு.க-வுடன் கூட்டணி வைப்பதன் மூலம் வைகோ, ராமதாஸ் போலத் தனித்தன்மையை (?!) விஜயகாந்த் இழக்கலாம்.

பா.ஜ.க. கூட்டணியின் சாதக பாதகங்கள்:

சாதகம்: பா.ஜ.க. கூட்டணியில் அதிக வாக்கு வங்கி உள்ள கட்சி என்ற அந்தஸ்து தே.மு.தி.க-வுக்குக் கிடைக்கும். தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் ஒருசேர விமர்சித்து வாக்குகள் சேகரிக்கலாம். அகில இந்திய அளவில் இருப்பதாகக் கூறப்படும் ‘மோடி அலை’ இந்தக் கூட்டணிக்கு உதவலாம். இந்தக் கூட்டணி கணிசமாக வெற்றிபெற்றால், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை இதே கூட்டணியை வைத்துக்கொண்டு விஜயகாந்த் சந்திக்கலாம்.

பாதகம்: யார் பெரியவர் என்ற எண்ணம் கூட்டணிக்குள் பூதாகாரமாகலாம். தே.மு.தி.க. விரும்பும் பல தொகுதிகளைப் பா.ம.க., ம.தி.மு.க. குறிவைக்கும் என்பதால், தொகுதிகளைப் பிரித்துக்கொள்வதில் பிரச்சினை வரலாம். பா.ஜ.க-வுக்கு எதிரான சிறுபான்மையினர் ஓட்டுகளை விஜயகாந்த் இழக்க நேரிடலாம். இந்தக் கூட்டணிக்கு ஏறத்தாழ 20% வாக்குகள் கிடைக்கலாம். இந்த வாக்குகள் குறிப்பிட்ட சில தொகுதிகளில் வெற்றிபெற உதவினாலும் வாக்குப் பிரிப்பு அ.தி.மு.க-வுக்கோ தி.மு.க-வுக்கோ சாதகமாகலாம்.

காங்கிரஸ் கூட்டணியின் சாதக பாதகங்கள்:

சாதகம்: விஜயகாந்தும் இல்லாவிட்டால், தனித்து விடப்படும் நிலையில் இருக்கும் காங்கிரஸிடம் எவ்வளவு வேண்டுமானாலும் பேரம் பேசலாம்.

பாதகம்: காங்கிரஸ் மீதான ஊழல் எதிர்ப்பு அலை தே.மு.தி.க-வையும் சேர்த்துச் சுருட்டலாம்.

நான்காவது முடிவின் சாதக பாதகங்கள்:

சாதகம்: 2011 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, இழந்த ‘தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு மாற்று’என்ற முழக்கத்தை மீண்டும் எழுப்பிப் பிரச்சாரம் செய்யலாம். ஊழல் எதிர்ப்பு முழக்கத்தை வலுவாக எழுப்ப வாய்ப்பு கிடைக்கும்.

பாதகம்: 2006 சட்டப்பேரவைத் தேர்தல், 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வாக்குப் பிரிப்பு மூலம் அப்போது தி.மு.க. பயனடைந்தது. இப்போது தே.மு.தி.க-வின் முக்கிய எதிரிக் கட்சியான அ.தி.மு.க. லாபம் அடையலாம். நாடாளுமன்றத்துக்குள் தே.மு.தி.க. அடியெடுத்து வைக்கும் வாய்ப்பு மங்கிவிடலாம். வெற்றி கிடைக்காது என்பதால், தே.மு.தி.க. தொண்டர்கள் அதிகம் சோர்வடையலாம்.

கண்ணைக் கட்டுதே!

தே.மு.தி.க-வை வைத்து யார் போட்டுப்பார்த்தாலும் இந்தக் கணக்குகள்தான் வரும். ஆனால், விஜயகாந்த் போடும் கணக்கு என்ன என்று தெரியவில்லையே?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x