Published : 13 Jul 2016 09:21 AM
Last Updated : 13 Jul 2016 09:21 AM

மாணவர் ஓரம்: திட்டமிடலை வெறுக்கும் உலகமயம்!

சுதந்திர இந்தியாவின் பொருளாதாரத்தில் ஐந்தாண்டுத் திட்டங்கள் முக்கியமானவை. 1951-56 காலகட்டத்துக்கான முதல் ஐந்தாண்டுத் திட்டத்தின் அறிக்கை ‘மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும், சமமான பொருளாதார வளர்ச்சியை அடையவும், பொருளாதாரம் ஒரே இடத்தில் குவிவதைத் தடுக்கவும், நாட்டின் வளங்களைப் பல்வேறு துறைகளுக்குப் பங்கிட்டு மேலே கூறிய குறிக்கோள்களை அடையத் திட்டமிட வேண்டும்’ என்கிறது.

பொருளாதாரத் திட்டமிடல் பற்றிய இந்தப் பார்வை 1991-ல் முற்றிலும் மாறியது. எட்டாவது ஐந்தாண்டுத் திட்ட அறிக்கை (1992-97) ‘திட்டமிடப்பட்ட பொருளாதாரத்திலிருந்து சந்தைப் பொருளாதாரத்துக்கு மாறும்போது நமது சமூக-கலாச்சார அமைப்பை நசுக்காத வண்ணம் மாற்றத்தை மேலாண்மை செய்வதற்கான திட்டம்’ பற்றிப் பேசுகிறது.

எட்டு முதல் பன்னிரண்டாம் ஐந்தாண்டுத் திட்டங்கள் வரை, அரசின் திட்டச் செலவுகள் குறைந்துள்ளன. அரசின் கவனம் தொழில் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத் துறைகளில் முதலீடு செய்வதிலிருந்து விலகியது. அதே நேரத்தில் கல்வி, சுகாதாரம், குடிநீர், கிராமப்புற வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் செலவுகள் அதிகரித்தாலும், கூடவே தனியார் துறையும் இதில் ஊக்கப்படுத்தப்பட்டது. பொருளாதார முழுமைக்குமான திட்டமிடல் என்பது ஒரு சில துறைகளுக்கு மட்டுமே என்று சுருங்கியது. இனிமேல் அந்தத் திட்டமிடலும் கிடையாது.

தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசு, திட்டக் குழுவைக் கலைத்துவிட்டு, நிதி ஆயோக் என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளது. திட்டமிடல் என்பது அரசியல்ரீதியாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தது. மாநில அரசுகளும் இந்த மாற்றத்தை ஒப்புகொண்டன. ஆனால், திட்டமிடலை உள்ளாட்சி அமைப்புகள் வரை பரவலாக்க வேண்டும் என்பதுதான் சிறந்த அணுகுமுறையாக இருந்திருக்கும். ஆனால், அது நடைபெறவில்லை. அதற்குப் பதிலாகத் திட்டமிடலையே கைவிடுவதால் பொருளாதாரத்தை வழிநடத்துவதில் அரசுக்கு இருந்த பிடிப்பும் அதிகாரமும் கைநழுவிப் போகிறது. இதனை மீண்டும் அடைவது சிரமம். திட்டமிடலை வெறுப்பதுதான் உலகமயம் போலிருக்கிறது!

- இராம.சீனுவாசன், பேராசிரியர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x