Last Updated : 16 Jul, 2016 09:00 AM

 

Published : 16 Jul 2016 09:00 AM
Last Updated : 16 Jul 2016 09:00 AM

காஷ்மீர்: மூன்று நடவடிக்கைகள்

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கொந்தளிப்பான நிலையில் இருக்கிறது காஷ்மீர்

துயரத்தில் மூழ்கியிருக்கிறது ஜம்மு-காஷ்மீர் மாநிலம். புர்ஹான் வானி எனும் இளைஞரின் மரணத்தைத் தொடர்ந்து, தெற்கு காஷ்மீரில் வன்முறைப் போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. 21 வயதான புர்ஹான் வானி சமூக வலைதளங்களின் மூலம் ஒரு முக்கிய ஆளுமையாக உருவாகியிருந்தார். அவர் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த போராட்டங்களில் இதுவரை 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கிறார்கள். போலீஸார் உட்பட நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருக்கிறார்கள்.

அவரது இறுதிச் சடங்கில் சுமார் 30,000 முதல் 1,50,000 வரையிலான மக்கள் திரண்டிருந்தார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த கொந்தளிப்பான நிலையில் தற்போது காஷ்மீர் இருக்கிறது. அன்றைக்கு, காஷ்மீர் அரசும் மத்திய அரசும் இதுபோன்ற நிலையை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. இப்போதும் அதே நிலைதான்.

பொதுச் சமூகக் குழுக்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹ்பூபா முஃப்தி, வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர உதவுமாறு மத அமைப்புகளிடமும், எதிர்ப்பாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தத்தம் தொகுதிகளுக்கு உடனடியாகச் செல்லுமாறு தனது கட்சியின் சட்டசபை உறுப்பினர்களுக்கும் அவர் உத்தரவிட்டிருக்கிறார். அம்மாநிலத்துக்குத் தேவையான அடிப்படைத் தேவைகள் விரைந்து அனுப்பப்பட்டிருக்கின்றன. பிரதமர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், உள்துறை அமைச்சர் போன்றோர் நிலவரங்களை உன்னிப்பாகக் கவனித்துவருகிறார்கள். இந்தப் போராட்டங்களின்போது உயிரிழந்த பொதுமக்கள் மற்றும் போலீஸ்காரரின் குடும்பத்தினரிடம் அரசு சார்பில் யாரேனும் பேசியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

பாதுகாப்பு விஷயத்தில் சீர்திருத்தம்

பாதுகாப்புப் படையினரைப் பொறுத்தவரை நிலைமை மிகவும் சிக்கலாகவே இருக்கிறது. கையில் போதுமான சாதனங்கள் இல்லாமல், நிலைமையைக் கட்டுப்பாட்டில் கொண்டுவர பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. போராட்டக்காரர்கள் காவல் நிலையங்களுக்குத் தீ வைப்பதுடன், பாதுகாப்பு மையங்கள் மீது தாக்குதல் நடத்திவருகிறார்கள். அவர்களைத் தடுத்து நிறுத்த, கண்ணீர்ப் புகைக்குண்டுகளையோ தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் கருவிகளையோ பயன்படுத்தும் நிலையில் போலீஸார் இல்லை. உயிருக்குச் சேதம் விளைவிக்காதவை என்று 2010-11-ல் வாங்கப்பட்ட, உலோக உருண்டைகளை உமிழும் ‘பெல்லட்’ ரகத் துப்பாக்கிகளே வன்முறையை எதிர்கொள்ள அவர்கள் கையாளும் ஆயுதமாக இருக்கின்றன. அருகில் இருந்து சுட்டால் இந்தத் துப்பாக்கிகளாலும்கூட மரணம் ஏற்படும். அப்படித்தான் நிறைய மரணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உயிரிழப்புகள் ஏற்படுவதையும், பலர் காயமடைவதையும் தவிர்க்கும் வகையில் வேறு வழிமுறைகளைக் கையாள்வது பற்றி மத்திய, மாநில அரசுகள் மிகுந்த கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும்.

தாக்குதல்களைத் தடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளில் போலீஸாருக்கு ராணுவத்தின் உதவி கைகொடுக்குமா அல்லது அதுபோன்ற ஒரு நடவடிக்கை, மக்களின் போராட்டத்தை மேலும் வலுப்படுத்துமா என்பது முக்கியமான கேள்வி. உள்ளூர் பாதுகாப்பு தொடர்பான பொறுப்பிலிருந்து ராணுவம் விடுவிக்கப்பட்டதுடன், அந்தப் பொறுப்பு போலீஸாரிடம் அளிக்கப்பட்டது என்பது நீண்ட காலத்துக்குப் பின்னர் பாதுகாப்பு விஷயத்தில் எடுக்கப்பட்ட முக்கியமான சீர்திருத்தம். துரதிர்ஷ்டவசமாக, இந்தப் புதிய பொறுப்பை அரசியல், நிர்வாக வெற்றிடம் இருக்கும் சூழலில் போதுமான வசதியில்லாமல் கையாள்வது போலீஸாருக்குக் கடினமான விஷயம். தற்போதைய சூழலை மட்டும் சமாளிக்கும் வகையில் போலீஸாருக்குத் தேவையான ஆலோசனைகளையும் உதவிகளையும் ராணுவம் வழங்குவது குறித்துப் பரிசீலிக்கலாம்.

போராட்டம், மரணம், காயம் என்று தொடரும் இந்தச் சூழலைத் தடுத்து நிறுத்துவதில் பொதுமக்களின் பங்கேற்பைக் கோருவது மிக முக்கியமான நடவடிக்கை. முதல்வர் மெஹ்பூபா முஃப்தி தற்போது அதைச் செய்துகொண்டிருக்கிறார். அதேசமயம், பொதுமக்களின் கோபத்தைத் தணிப்பதுதான் இன்னும் முக்கியமானது. 2010-ல் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெவ்வேறு அமைப்புகளைச் சார்ந்த சமூக நலப் பிரதிநிதிகளின் குழு அமைக்கப்பட்டு, மாநிலத்தில் அமைதியை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. அக்குழுவில் நானும் உறுப்பினராக இருந்தேன். ஆனால், 2011 இறுதிக்குப் பின்னர் அம்முயற்சி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லப்படாததால் நிலைமை மீண்டும் மோசமடைந்தது.

தொடர்ந்து நேரிட்ட இயற்கைச் சீற்றங்கள், எல்லையில் நடந்த குண்டுவீச்சுகள், பயங்கரவாதத் தாக்குதல்கள், மதரீதியான பதற்றங்கள் என்று பல்வேறு பிரச்சினைகளை மாநிலம் எதிர்கொள்ள நேர்ந்தது. 2014 தேர்தலுக்குப் பின்னர், ஜம்மு-காஷ்மீரில் பாஜக - மக்கள் ஜனநாயகக் கட்சி இணைந்து அமைத்த கூட்டணி அரசு, நிலைமையைச் சரிசெய்வதில் தோல்வி அடைந்துவிட்டது. தாங்கள் அறிவித்த குறைந்தபட்சச் செயல்திட்டத்தை அமல்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு, மாட்டிறைச்சிக்குத் தடை என்று பல்வேறு பிரச்சினைகளில் இரு கட்சிகளும் மோதிக்கொண்டன.

எதிர்கொள்ளும் சவால்கள்

வன்முறைச் சம்பவங்களைத் தற்காலிகமாகவாவது முடிவுக்குக் கொண்டுவர ஜம்மு-காஷ்மீர் அரசு விரும்பினால், இதுபோன்ற பிரச்சினைகளை இரு கட்சிகளும் கடந்துவர வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களின் துயரத்தையும், மக்களிடம் ஏற்பட்டிருக்கும் கோபத்தையும் பிரதமர் மோடியும் முதல்வர் மெஹ்பூபாவும் உணர வேண்டியது அவசியம். நாடாளுமன்றக் கூட்டத் தொடர் விரைவில் தொடங்கவிருக்கும் நிலையில், காஷ்மீர் விவகாரம் நிச்சயம் அதில் எதிரொலிக்கும். அதேசமயம், காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக தத்தமது கட்சி எம்.பி.க்கள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றி அவர்களிடம் மோடியும், மெஹ்பூபாவும் பேசுவதற்கு ஒரு வாய்ப்பாகவும் இதைக் கருதலாம்.

இரண்டு மாதங்களுக்கு முன்னர் குப்வாரா, ஹந்த்வாரா மாவட்டங்களில் நிகழ்ந்த வன்முறைச் சம்பவங்கள், கொல்லப்பட்ட போராட்டக்காரர்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்கும் பொதுமக்களின் எண்ணிக்கை அதிகரித்துவருவது, காஷ்மீரில் ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பு மேலும் தீவிரமடைந்துவருவது, புதிய தலைமுறை காஷ்மீர் இளைஞர்கள், போராட்டக்காரர்களாக மாறிவருவது போன்ற சம்பவங்கள் மாநிலம் எதிர்கொண்டிருக்கும் பெரும் சவால்களை உணர்த்தும்.

பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

2010-ல் நடந்த வன்முறைச் சம்பவங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளைத் தொடர்ந்து, தேவையான நடவடிக்கை களை அரசு எடுத்தது. ரங்கராஜன் கமிட்டியின் பரிந்துரைகளின்படி, காஷ்மீர் இளைஞர்களுக்குப் பயிற்சியும், வேலைவாய்ப்புத் திட்டங்களும் பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், காஷ்மீர் மாநிலத்தின் கலாச்சார, அரசியல் பின்னணி தொடர்பான புரிதல் இல்லாமல் இந்தத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதால் இம்முயற்சி பெரும் தோல்வியடைந்தது. அத்துடன், தாங்கள் மேலும் தனிமைப்படுத்தப்படுவதாகக் காஷ்மீர் மக்கள் உணரத் தொடங்குவதும் பெருமளவில் அதிகரித்தது.

கடந்த 15 ஆண்டுகளின் நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கும்போது, மூன்று முக்கிய விஷயங்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. முதலில், வாஜ்பாய் பிரதமராக இருந்த காலகட்டத்தில் காஷ்மீர் விஷயத்தை அணுகுவதில் காட்டப்பட்ட பரிவு, நல்ல பலனைக் கொடுத்தது. இரண்டாவதாக, மன்மோகன் சிங் காலத்தில் அமைதி முயற்சிகள் தொடர்பாகப் பெரிய அளவில் எழுந்த எதிர்பார்ப்பு பின்னர் தோல்வியடைந்தது. இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. மூன்றாவதாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்சினையில் காட்டப்பட்ட புறக்கணிப்பு.

இந்தப் பாடங்களின் அடிப்படையில், காஷ்மீரின் தற்போதைய சூழலை இந்த மூன்று முறைகளில் அணுகலாம். முதலாவதாக, பிரதமர் மோடி தனது மனதின் உள்ளிருந்து அக்கறையுடன் ஒரு அறிக்கை விடலாம். இரண்டாவது, மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி தனது குறைந்தபட்சச் செயல்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும். மூன்றாவதாக, காஷ்மீர் பிரச்சினையில் தீர்வை நோக்கிய செயல்பாடுகளை வெளிப்படையாகவும், ஒத்துழைப்புடனும் இரு கட்சிகளும் மேற்கொள்ள வேண்டும். இந்த முயற்சிகள் அனைத்திலும் தடங்கலை ஏற்படுத்தும் முயற்சியை பாகிஸ்தானைச் சேர்ந்த குழுக்கள் தொடர்ந்து மேற்கொள்ளும் என்றாலும், இவ்விஷயத்தில் மத்திய அரசு உறுதியுடன் தனது பணியைத் தொடரும்பட்சத்தில் அத்தகைய குழுக்கள் நாளடைவில் பலவீனமடையும். அரசு இம்முறை இதையெல்லாம் சாதித்துக் காட்டுமா?

-ராதா குமார், எழுத்தாளர், கொள்கை ஆய்வாளர்.

‘தி இந்து’(ஆங்கிலம்), தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x