Last Updated : 05 Jul, 2016 09:26 AM

 

Published : 05 Jul 2016 09:26 AM
Last Updated : 05 Jul 2016 09:26 AM

ஜனநாயகப் பரவலை முடக்குவதா?

தவிர்க்க முடியாத, நீக்க முடியாததாகப் பஞ்சாயத்து ராஜ் வளர்ந்திருக்கிறது



பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தை மூட பிரதமர் நரேந்திர மோடி முடிவெடுத்திருப்பது உண்மை என்றால், அடித்தள வளர்ச்சிக்கான அடித்தள ஜனநாயகத்தை அவரது அரசு அணுகும் விதம் பற்றிய அச்சம் உறுதிப்படுத்தப்படுகிறது என்று அர்த்தம்.

தற்போது மத்திய அரசின் செயல்பாடுகளில் வெளிப்படும் இந்தக் கோளாறு வெகுகாலத்துக்கு முன்பே ‘குஜராத் மாதிரி வளர்ச்சி’யில் இருந்தது என்பதற்கான ஆதாரம் இது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முதலாம் ஆட்சியின்போது, மாநிலங்கள் பிரத்யேகமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக உரையாற்றுவதற்காக அனைத்து மாநிலங்களுக்கும், ஒன்றியப் பிரதேசங்களுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் முயற்சியில் இருந்தேன். அப்போது என்னைத் தனது மாநிலத்துக்குள் அனுமதிக்க மறுத்த ஒரே முதலமைச்சர், நரேந்திர மோடிதான்.

அதிகாரப் பகிர்வுக் குறியீட்டெண்

பஞ்சாயத்துகளுக்கு அதிகாரம் அளித்தலை வலுப்படுத்துவதற்காக நாங்கள் எடுத்த முன்னெடுப்புகளில் ஒன்று, ‘அதிகாரப் பகிர்வுக் குறியீட்டெண்’. அமைப்புசாரா நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட அந்தத் திட்டம், அரசியல் சட்டத்தின்படியும், தங்கள் மாநிலச் சட்டங்களின்படியும் அதிகாரப் பகிர்வு விஷயத்தில் முந்தைய ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்களுக்கு ஊக்கம் தரும் வகையில் உருவாக்கப்பட்டது. இவ்விஷயத்தில், மிக மெதுவாகச் செயல்படத் தொடங்கிய பிஹார், திரிபுரா, சத்தீஸ்கர், ஹரியாணா, ராஜஸ்தான் போன்ற பல மாநிலங்கள், பின்னர் நல்ல முன்னேற்றம் அடைந்ததுடன் முறையான அங்கீகாரத்தையும் பெற்றன. இதில் குஜராத் மட்டும் ஒருபோதும் இடம்பெறவில்லை. ஏனெனில், அதிகாரப் பகிர்வு எனும் விஷயத்தில் அம்மாநிலம் உறைநிலையிலேயே இருந்தது. மோசமான விஷயம் என்னவென்றால், குஜராத்தில் போட்டியின்றித் தேர்வுசெய்யப்பட்ட, நிதி அடிப்படையில் இயங்கும் பஞ்சாயத்துகளால் கிராம அளவிலான ஜனநாயகம் மறுக்கப்பட்டதுதான்.

உள்ளூர் சுய அதிகார நிர்வாகத்தின் தேவையை, மாநில முதல்வர்களிடமும், மாநிலங்களின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்களிடமும் எடுத்துச் சொல்ல மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் முன்வரவில்லையென்றால், உள்ளூர் நிர்வாகத்தின் ஜனநாயகத்தன்மையைச் சிதைக்கும் வேலைகள் அதிகரிக்கும். அரசியல் சட்டத்தின் ஒன்பதாவது பகுதியாகத் தற்போது இணைந்திருக்கும் 73-வது சட்டத் திருத்தம், மத்திய - மாநில அரசுகளின் கூட்டுப் பொறுப்புதான். அரசியல் சட்டத்துக்கு இதுவரை இல்லாத அளவில் நீண்ட, விரிவான திருத்தத்தை மேற்கொள்வதற்கான வழிகளை முன்னெடுத்துச் செல்வதிலும், பாதுகாப்பதிலும் இந்தக் கூட்டுப் பொறுப்பு தேவையாக இருந்தது.

நீர்த்துப்போகும் நோக்கங்கள்

1992 டிசம்பரில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டத் திருத்தம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையிலான ஒருமித்த கருத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்தது. மாநில அமைச்சர்களை ஒன்றிணைப்பது, கல்விசார் அறிஞர்கள், களச் செயல்பாட்டில் ஈடுபட்டி ருக்கும் தொண்டு நிறுவனங்களை ஒன்றிணைப்பது, தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து பிரதிநிதிகளிடையே சிறப்பான செயல்பாடுகளை வளர்த்தெடுப்பது, பெண்கள், தலித்துகள் மற்றும் பழங்குடியின பிரதிநிதிகள் மீது சிறப்புக் கவனம் செலுத்துவது, பஞ்சாயத்து ராஜ் தொடர்பான தரவுகளைக் கொண்ட தகவல் களஞ்சியத்தைப் பராமரிப்பது போன்றவற்றின் மூலம் இந்த ஒருமித்த நடவடிக்கை நீடிக்க வேண்டும். இந்த அமைச்சகம் முன்னெடுக்க வேண்டிய முக்கியமான நடவடிக்கைகள் இவை. இந்நிலையில், அகில இந்திய அளவில் இப்படியான பார்வையை மத்திய அரசு அளிப்பது, இந்த நோக்கங்களை நீர்த்துப்போகச்செய்துவிடும் என்பதுடன், இதற்கான தனி அமைச்சகமே இல்லாமல் செய்துவிடும்.

மேலும், தேசிய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சகத்துடன், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தை இணைப்பது அல்லது அதன்கீழ் கொண்டுவருவது என்பது அரசியல் சட்டத்தைச் சரியாகப் புரிந்துகொள்ளாத தன்மையைக் காட்டுகிறது.

சுயசார்பு நிறுவனம்

பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தை ஊரக வளர்ச்சி அமைச்சகத்துடன் இணைப்பது என்பது ஒரு மீறல்; பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அரசியல் சட்ட பங்கைச் சிதைக்கும் செயல். பஞ்சாயத்து அமைப்புகள், ஒரு சுயசார்பு அரசின் நிறுவனமாகச் செயல்படும் அளவுக்கு அவற்றுக்கு அதிகாரம் வழங்கும் அதிகாரப் பகிர்வு தருவதற்காக 73-வது சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது.

இங்கு ‘சுயசார்பு அரசு’ என்பது முக்கியமானது. இது ‘சுயசார்பு நிர்வாகம்’ அல்ல. அதாவது, மாநில அரசுத் துறைகள் அல்லது மத்திய அமைச்சகங்களின் திட்டங்களை அமல்படுத்தும் நிறுவனமாக அல்லாமல், பஞ்சாயத்து ராஜ் அமைப்பை அரசின் மூன்றாவது அடுக்காக உருவாக்குவதுதான் இந்தச் சட்டத் திருத்தத்தின் முக்கிய நோக்கம். இதன்படி, சுயசார்பு நிறுவனமாக இயங்க பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்குத் தேவையான செயல்பாடுகள், நிதி உள்ளிட்டவற்றை வழங்க வேண்டியிருந்தது.

தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் அரசு அதிகாரிகளுக்கும் மாநில அரசியல் செயற்பாட்டு முறைக்கும் இடையிலான இதுபோன்ற புரட்சிக்கு, நேரமும் பொறுமையும் அவசியம். 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சியில் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம், கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக இதைத்தான் வலியுறுத்திவருகிறது. இதுபோன்ற ஆலோசனைப் பணிகளில் ஈடுபடுவதுதான் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் முதன்மையான கடமை.

நிர்வாகத்தில் மாற்றங்கள்

மாநிலப் பட்டியலில் பஞ்சாயத்து ராஜ் நீடிக்கிறதுதான் என்றாலும், அரசியல் சட்டத்தின் 73-வது சட்டத் திருத்தத்தின்படி, அரசியல் சட்ட விதிகளின் நோக்கங்களை நிறைவேற்ற மாநிலங்களுடன் சேர்ந்து பணியாற்றுவது மத்திய அரசின் பொறுப்பு. இந்தப் புரட்சிகரப் பணிக்கு, தனி அமைச்சகம் அவசியம். குறிப்பாக, நல்ல செல்வாக்குள்ள அமைச்சரின் தலைமையில் அந்த அமைச்சகம் இயங்குவது அவசியம். இல்லையெனில், பஞ்சாயத்து ராஜ் செயல்படாமல் முடங்கிவிடும்.

மத்திய அரசால் வழங்கப்படும் திட்டங்களுக்கான இந்த மேற்பார்வை நடவடிக்கைகளுக்கான உத்தரவை, 2004 நவம்பர் முதல், 2013 ஆகஸ்ட் வரை, சம்பந்தப்பட்ட அனைத்து அமைச்சகங்களின் துறைச் செயலாளர்களுக்கும், அமைச்சரவைச் செயலாளர் மூலம் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் வழங்கினார். உள்ளாட்சி அமைப்புகளில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பழங்குடியினப் பிரதிநிதிகளுக்கு அதிகாரப் பகிர்வு செய்யும் வகையில் இதற்கு மாவட்ட மற்றும் துணை மாவட்ட அளவிலான நிர்வாகத்தில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டியிருந்தது.

உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 5,000 எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களுடன், சுமார் 28 லட்சம் கிராமப்புறப் பிரதிநிதிகள், சுமார் 14 லட்சம் நகர்ப்புறப் பிரதிநிதிகள் உள்ளனர். 14 லட்சம் பேர் கிராமப்புற மற்றும் நகர்ப்புறப் பெண்கள். இவர்கள் இணைந்துதான், உலகின் மிகப் பெரிய பிரதிதித்துவ ஜனநாயகமாக இந்தியாவை உருவாக்குகிறார்கள். இந்தியாவில், தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை, உலகில் உள்ள மொத்த பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கையைவிட அதிகம். அத்துடன் பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்தவர்களுக்கு நாம் சரிசமமான பிரதிநிதித்துவத்துக்கு உத்தரவாதம் அளிக்கிறோம்.

இந்தச் சாதனைகள் அனைத்தும் வரலாற்றிலோ அல்லது சமகாலத்திலோ முன்னுதாரணமற்றவை. சமூக மாற்றத்துக்கான இந்தப் பிரம்மாண்ட அமைப்பு ஒரு மத்திய இணையமைச்சர் வசம் ஒப்படைக்கப்படுகிறது என்றால், என்ன மோசமான பின்னடைவு இது!

அதிகாரமளித்தலின் விளைவாகப் பல தடைகளுக்கு மத்தியில், வெவ்வேறு வேகத்தில், பன்முகத்தன்மையுடன், சந்தேகமில்லாமல் குறிப்பிட்ட இலக்கை நோக்கி நாடு முன்னேறிக்கொண்டிருக்கிறது.

கடந்த 25 ஆண்டுகளில் கணிசமான பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. தவிர்க்க முடியாத, நீக்க முடியாததாகப் பஞ்சாயத்து ராஜ் வளர்ந்திருக்கிறது. அதன் வளர்ச்சி இன்னும் முழுமையடையவில்லை. இந்நிலையில், பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தை வேறு அமைச்சகத்தின் கீழ் கொண்டுவருவது, ஜனநாயகப் பரவலில் கடந்த கால் நூற்றாண்டில் நடக்காத மிகப் பிற்போக்கான நடவடிக்கை. உண்மையில் திருவாளர் மோடி விரும்புவது இதைத்தானா?

- மணிசங்கர் அய்யர், மத்திய பஞ்சாயத்து ராஜ் முன்னாள் அமைச்சர், காங்கிரஸ் தலைவர்.

‘தி இந்து’(ஆங்கிலம்) தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x