

முத்திரைத்தாள்/வில்லைகள் பற்றிய வரலாறு விசித்திரமானது. நீதிமன்ற கட்டணங்களுக்குப் பயன்படுபவையும், பதிவுத்துறையில் ஆவணங்களுக்கு உண்டான கட்டணங்களுக்கு பயன்படுபவையும் என இரு வகைப்படும். காலனி ஆதிக்கத்தின் போது மக்களிடமிருந்து நிதி வசூலிக்க முத்திரைத்தாள்களும் முத்திரை வில்லைகளும் அரசால் விற்பனை செய்யப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து முழுக்கட்டணத்தையும் உரிமம் பெற்ற முகவர் செலுத்தி அவற்றை விற்பனை ஏஜெண்டுகள் மூலம் நீதிமன்ற வளாகங்களிலும் பிற இடங்களிலும் விற்பனை செய்வதில் கிடைக்கும் கமிஷன் தொகையை பெற்றுக் கொள்வர்.
பதிவுத்துறையில் ஆவணங்களுக்குரிய முத்திரைக் கட்டணங்களை செலுத்தினால் மட்டுமே அவை பதிவு செய்யப்படும். குறைவான கட்டணங்களுடன் தாக்கலாகும் ஆவணங்கள் பறிமுதலுக்குள்ளாகும். வழக்குகளுக்கு உண்டான கட்டணங்களை முத்திரைத்தாள்கள்/ வில்லைகளை செலுத்தியே நீதிமன்றங்களில் தாக்கல் செய்யமுடியும். நீதிமன்ற சாட்சியங்கள் விசாரிக்கும்போது குறிப்பிடும் ஆவணங்களிலோ (அ) வழக்கு மனுவுடன் தாக்கல் செய்யப்படும் ஆவணங்களிலோ சட்டப்படி முத்திரைக் கட்டணம் செலுத்தப்பட்டிருக்காவிட்டால் அந்த ஆவணங்களை நீதிமன்றங்கள் கையகப்படுத்தி (impound) உரிய முத்திரைக் கட்டணம் செலுத்தும்வரை நீதிமன்றத்தின் வசமேயிருக்கும். முத்திரைக் கட்டணம் செலுத்தாத ஆவணங்களை சாட்சியமாக ஏற்றுக்கொள்ள நீதிமன்றங்களுக்கு தடையுண்டு.
140 வருடங்களுக்கு முன்னால் உருவான முத்திரைச் சட்டம், நீதிமன்றக் கட்டணம் மற்றும் வழக்கு மதிப்பீடு சட்டம் என்ற இவ்விரு சட்டங்களும் சில திருத்தங்களுடன் இன்னும் சுதந்திர இந்தியாவில் தொடரப்பட்டு வருவதுதான் வேதனை.
முகவர்கள் முழுப்பணத்தையும் அரசாங்க கஜானாவில் செலுத்தி முத்திரைத்தாள்களை வாங்குவதால் அரசுக்கு எவ்வித நட்டமுமில்லை. வாங்கிச் சென்ற முத்திரைத்தாள்கள்/வில்லைகள் மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்பட்டால் ஏற்படும் நட்டங்களைத் தவிர்க்கவே கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஐந்து ரூபாய் வில்லைத்தாளை ஒட்டி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும் மனு, இரண்டு அலுவலர்கள், ஒரு உதவியாளர், ஒரு அலுவலக உதவியாளர் கைவழியாக சென்ற பின்னரே உரிய வழக்கெண் தரப்பட்டு பதிவு செய்யப்படும். அவ்வில்லையின் மீது ரப்பர் ஸ்டாம்ப் முத்திரையிட்டு, முத்திரைப் பதிவேட்டு எண்ணுடன் பதிவேட்டில் வரவு வைக்கப்பட்டு, பின்னர் அலுவலர் ஒருவர் அவ்வில்லையை பேனாவால் கோடிட்டவுடன் அதை துளைபோடும் இயந்திரத்தில் துளையிட்டு அதன்பின் ஒரு அலுவலர் அவ்வில்லை சிதைக்கப்பட்டது (defaced and defiled) என்று கையெழுத்திட்ட பின்னரே வழக்காவணம் முறையான அலுவலரால் பரிசீலிக்கப்படும். வில்லையிலுள்ள அரசு இலச்சினையின் மேல் துளை போட்ட பின் விழுந்த காகிதங்களை எரித்துவிட வேண்டுமாம். ஐந்து ரூபாய் வில்லைக்கான பணத்தைக் காக்க இத்தனை கெடுபிடியா என்று வியக்க வேண்டாம்.
கர்நாடகா நீதிமன்றங்களில் வங்கி வரைவோலை மூலமும் மத்திய நிர்வாகத் தீர்ப்பாயங்களில் போஸ்டல் ஆர்டர்கள் மூலமும் நீதிமன்றக் கட்டணங்கள் பெறப்படுவது போல ஏற்பாடுகளை செய்ய அரசு தயங்குவது ஏன் என்று புரியவில்லை. 21-ம் நூற்றாண்டிலும் 19-ம் நூற்றாண்டு நடைமுறைகளைக் கையாண்டு வருவதில் பொருட்சேதமும் மனித ஆற்றல் விரையமும்தான் மிஞ்சுகின்றன.
முத்திரைத்தாள்கள் மறுசுழற்சிக்கு வருவதைத் தடுக்க விழையும் சட்டங்களால் தேல்கியின் முத்திரைத்தாள் மோசடிகளைத் தடுக்க முடியவில்லை என்பதே உண்மை.