Published : 19 Jul 2016 09:26 AM
Last Updated : 19 Jul 2016 09:26 AM

தேவை காஷ்மீருக்கான கொள்கை!

காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளால் 21 வயது புர்ஹான் வானி கடந்த ஜூலை 8 அன்று கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டது, காஷ்மீர் மக்களிடையே பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சோகம் மக்கள் பங்கேற்கிற ஆர்ப்பாட்டங்களாகப் பிறகு மாறியது.

இந்தப் போராட்டங்களை அரசாங்கம் வன்முறையால் எதிர்கொண்டது. நான் இதை எழுதிக்கொண்டிருக் கும்போது 38 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். வன்முறைகளின் விளைவால் ஏற்பட்ட மோதல்களில் 1,500 பேர் வரை காயமடைந்திருக்கின்றனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அடக்கும் கொள்கை

போராட்டம் நடத்துபவர்களின் வன்முறையாலும் அவர்களுக்கு எதிராக அரசுப் படைகள் நடத்துகிற வன்முறைகளாலும் காஷ்மீர் எரிகிறது. மத்திய அரசின் கையை விட்டுப் போகுமளவுக்கு காஷ்மீரில் போராட்டம் எதுவும் நடக்கவில்லை என்று மறுப்பதற்குப் பொதுவாக மத்திய அரசு முயலும். இந்த முறை அத்தகைய மனநிலைகூட இல்லாமல் வெறுமனே உணர்ச்சியற்ற நிலையில் மத்திய அரசு இருக்கிறது.

காஷ்மீர் பிரச்சினைக்காகத் தற்போது பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள உயர் கமிட்டியில், காஷ்மீரைச் சேர்ந்த எந்தவொரு வகையான அரசியல் கட்சிக்கும்கூடப் பிரதிநிதித்துவம் இல்லை என்பதும் அரசின் இந்த மனநிலையைத்தான் காட்டுகிறது.

ஆனால், இத்தகைய அசாதாரணமான சூழ்நிலைகளில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதிலும் மத்திய அரசு உறுதியாகத்தான் இருக்கிறது. காஷ்மீர் மக்களிடையே தொடர்ந்து நடைபெறுகிற வன்முறைகள் ஒரு நிர்வாகப் பிரச்சினைதான். மக்களிடையே நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதால் பிரச்சினைகள் உருவாகியுள்ளன என்று மத்திய அரசு பார்க்கிறது.

மத்திய அரசின் பிடியில் இறுக்கமாக நெருக்கிப் பிடித்து வைக்கப்பட்டுள்ளது காஷ்மீர். அதனால் இந்த மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்த வன்முறைகள் காலப்போக்கில் பலவீனமடைந்துவிடும் என்று அரசு கணிக்கிறது. இப்படிப்பட்ட கணிப்பும் மக்களிடையே நம்பிக்கையில்லா தன்மையை வளர்த்திருக்கலாம். மத்திய அரசின் இத்தகைய கணிப்புகள்தான் காஷ்மீர் பிரச்சினை பற்றிய ஒரு குறுகிய காலக் கொள்கையாக வெளிப்படுகின்றன. மக்களிடம் உள்ள முரண்பாடுகளையும் அவர்களிடமிருந்து வெளியாகும் வன்முறைகளையும் புரிந்துகொள்ளாத அரசின் அணுகுமுறையாகவும் அவை வெளிப்படுகின்றன. தன்னிடம் அதிகாரமும் படைபலமும் இருக்கிறது. அதைக் கொண்டு இந்தப் பிரச்சினையை அடக்கிவிடலாம். அடக்குவதால் வருகிற விளைவுகளையும் சமாளித்து விடலாம். இதுதான் காஷ்மீர் பிரச்சினைக்கான தீர்வு என்று மத்திய அரசு கருதுகிறது. எத்தகைய தரவுகளை வைத்துக்கொண்டு இத்தகைய முடிவுக்கு வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.

இது அரசியல் பிரச்சினை

மத்திய அரசின் இத்தகைய அணுகுமுறைகள் தவறானவை என்பதைத்தான் நவீன காலத்து காஷ்மீரின் வரலாறு தெரிவிக்கிறது. வரலாற்றுரீதியாக ஆராய்ந்து பார்த்தால், காஷ்மீரில் ஆயுதம் தாங்கிய போராட்டம் தொடங்கியதற்கு மத்திய அரசின் குளறுபடிகளும் மோசடிகளும் ஒரு முக்கியமான காரணம்.

ஆயுதம் தாங்கிய போராட்டத்துக்கு எதிரான மனநிலையிலிருந்தும் நாம் இதைப் பார்க்கலாம். ஒருவேளை, காஷ்மீரில் உள்ள போராட்டம் பலவீனமடைந்துவிடலாம். அப்போதும்கூட அத்தகைய போராட்டத்தை அவசியப்படுத்துகிற யதார்த்தமான சூழ்நிலைகள் மாறாமல் காஷ்மீரில் அப்படியே நீடிக்கின்றன என்பதுதான் உண்மையான நிலை.

காஷ்மீரில் உள்ள இந்த யதார்த்தமான சூழல் ஒரு சட்ட - ஒழுங்கு பிரச்சினையோ அல்லது ராணுவம் கையாள வேண்டிய பிரச்சினையோ அல்ல. அவை எல்லாவற்றுக்கும் மேலாக, இது ஒரு அரசியல் பிரச்சினை. ஆனால், கடந்த காலத்திலும் சரி, தற்போதைய நடைமுறையிலும் சரி, அதை நம்புவதற்கு மத்திய அரசு தயாராகவே இல்லை.

காஷ்மீரத்தின் பிரச்சினை பல அடுக்குகளில் சிக்கலாகிக் கிடக்கிற ஒரு அரசியல் பிரச்சினை. அத்தகையதாக காஷ்மீர் பிரச்சினையை மத்திய அரசு பார்த்திருந்தால், பலம் கொண்டு அடக்க வேண்டிய, சமாளிக்க வேண்டிய ஒரு பிரச்சினையாக இதைப் பார்த்திருக்காது.

போராட்டம் பலவீனமாகும்

காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளால் கொல்லப் பட்டுள்ள புர்ஹான் மரணத்தைத் தொடர்ந்து, தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் அவரது மரணத்துக்கான எதிர்வினை மட்டுமல்ல. மத்திய அரசும் காஷ்மீர் மாநிலத்தில் அமைந்த மாநில அரசுகளும் குறிப்பான எந்த நோக்கமும் இல்லாதமுறையிலான அரசியலை பல வருடங்களாகச் செய்துவந்துள்ளன. அவற்றின் விளைவாக காஷ்மீர் மாநிலம் முட்டுச்சந்து போன்ற ஒரு அரசியல் சூழலில் போய் முட்டிக்கொண்டு நிற்கிறது. அதோடு தொடர்புடையதுதான் புர்ஹான் மரணம் தொடர்பாக மக்களிடம் எழுகிற போராட்டங்கள்.

கடந்த 2014-ல் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, காஷ்மீரில் அரசியல் அணி சேர்க்கைகள் உருவாகியுள்ளன. அவற்றின் காரணமாக மாநிலத்தில் புதிதான நிலைமை உருவாகியுள்ளது. இந்த நேரத்தில் நிகழ்ந்துள்ள இந்த மரணம் மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சோகம் இந்த அரசியல் சூழலில் ஒரு கூடுதல் விளைவை ஏற்படுத்தும். பாஜகவும் மக்கள் ஜனநாயகக் கட்சியும் இணைந்துள்ள இந்தக் கூட்டணியினர், காஷ்மீரிகளின் உணர்ச்சிகளைத் தவறான முறையில் கையாண்டு கிளறிவிட்டிருகிறார்கள் என்பதைக் குறிப்பாக இங்கே சொல்ல வேண்டும்.

புர்ஹான் கொல்லப்பட்டது வெகுகாலமாக வளர்ந்து வருகிற காஷ்மீரிகளின் மனக் காயங்களையும் கவலைகளையும் முடுக்கி அதிகரித்துவிடுவதற்கான காரணமாக ஆகிவிட்டது. அதனால் மத்திய அரசு கணிப்பதைப் போலவே, தற்போது நடைபெறுகிற போராட்டங்கள் குறிப்பிட்ட காலம்தான் நீடிக்கும். நீண்ட காலத்துக்கு நீடிக்க முடியாது. குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு, படிப்படியாக அது பலவீன மடைந்து மங்கிவிடும் என்பது உண்மைதான். ஆனாலும், இது மத்திய அரசின் கொள்கைகளையோ அல்லது கொள்கைகளே இல்லாமல் இருப்பதையோ அவர்களின் அணுகுமுறைகளையோ சரியானது என்று ஆக்கிவிடாது.

காஷ்மீரில் உள்ள போராட்டக்காரர்களுக்கு நமது முன்னேற்றத்துக்காக எதையும் நாம் செய்யலாம் என்ற உணர்வைத் தற்போது நடைபெறுகிற போராட்டங்கள் ஏற்படுத்தும். புர்ஹானின் மரணம் காஷ்மீர் இளைஞர்களுக்கு மனக்கிளர்ச்சியூட்டும் ஒரு சின்னமாக மாறும்.

காஷ்மீர் இளைஞர்கள் அவரைத் தங்களின் வழிகாட்டியாக ஏற்று அவரின் வழியில் நடக்க வாய்ப்புள்ளது. படித்தவர்களும் சிந்தாந்தரீதியாக மேலும் இத்தகைய போக்கை நோக்கித் தள்ளப்படலாம். பிரிவினை எண்ணங்களுக்கு மக்கள் ஆட்படக் கூடாது என்பதற்காக அரசாங்கங்கள் தரும் ஆசை வார்த்தைகளையும் அரசாங்கம் தருகிற மற்ற வகையான அழுத்தங்களையும் எதிர்ப்பவர்களாக அவர்கள் மாறலாம்.

பொறுப்பேற்க வேண்டும்

தொலைநோக்குடன் கூடிய கொள்கைகள் காஷ்மீரில் செயல்படுத்தப்படவில்லை என்றால், இத்தகைய இளைஞர்கள் அதிகரிக்கவே செய்வார்கள். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதம் தாங்கிய கிளர்ச்சியும் வேதனையான நிகழ்ச்சிப் போக்குகளும் மீண்டும் ஒருமுறை அதிகரிக்கவே செய்யும். காஷ்மீர் தொடர்பான மோசமான, தவறான கொள்கைகளை உருவாக்கியுள்ள அதிகார வட்டங்கள்தான் இதற்கான பொறுப்பு முழுமையும் ஏற்க வேண்டும்.

இந்த நெருக்கடியான நேரத்திலிருந்து மீள்வதற்கு ஒரு காரியம் செய்யலாம். காஷ்மீர் தொடர்பான கொள்கைகளை முழுமையாக மறுவார்ப்பு செய்ய வேண்டும். யாருக்கும் இழப்பு இல்லாத வகையில் எல்லாத் தரப்பினரையும் இந்த அமைதியை உருவாக்குவதற்கான வழிமுறைகளில் இணைக்க வேண்டும். அதன் மூலமாகவே காஷ்மீரில் நடைபெறும் மோதல்களுக்குத் தீர்வுகாண முடியும்.

இத்தகைய கொள்கை மாற்றம் உருவாகாத வரையில், காஷ்மீர் புர்ஹான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து எரிவதைப் போலவே எப்போதும் எரியும். கடந்த காலக் கொள்கைகளையும் கணிப்புகளையும் தூக்கி எறிய வேண்டிய நேரம் இது. காஷ்மீர் தொடர்பான புதிய அணுகுமுறை தேவைப்படும் நேரம் இது. இதைச் செய்யாமலிருப்பதோ அதைத் தாமதப்படுத்துவதோ பின்னர் நாம் மிகவும் தாமதித்துவிட்டோம் என்று வருந்தும் நிலையை ஏற்படுத்தும்.

- தன்வீர் சாதிக், காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கான அரசியல் ஆலோசகராகப் பணியாற்றியவர்.

-© ‘தி இந்து’ ஆங்கிலம், தமிழில்: த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x