Published : 16 Aug 2016 09:17 am

Updated : 14 Jun 2017 17:44 pm

 

Published : 16 Aug 2016 09:17 AM
Last Updated : 14 Jun 2017 05:44 PM

சமூக நீதியை மறுக்கும் கல்விக் கொள்கை!

நம் கல்வி... நம் உரிமை! - 2*

ஒரு தேசத்தின் எதிர்காலம் அதன் கல்விச்சாலைகளிலேயே நிர்ணயிக்கப்படுகிறது. ஒரு அரசு முன்வைக்கும் கல்விக் கொள்கையின் மீதே அந்த எதிர்காலம் கட்டமைக்கப்படுகிறது. மோடி அரசு கொண்டுவரவிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை முழுமையாக உணர்ந்திருக்கும் ‘தி இந்து’, இது தொடர்பிலான விவாதத்தை நம்முடைய பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் கொண்டுசெல்ல வேண்டியதன் பொறுப்பையும் உணர்ந்திருக்கிறது. இதன் நிமித்தம் இந்த வாரம் முழுவதும் நடுப்பக்கத்தில் இது தொடர்பிலான கல்வியாளர்களின் கட்டுரைகள், பேட்டிகள் வெளியாகவிருக்கின்றன. தொடக்கக் கல்வியில் புதிய கல்விக் கொள்கை ஏற்படுத்தப்போகும் தாக்கம் பற்றி இன்றைக்குப் பார்ப்போம்.


புதிய கல்விக் கொள்கையைக் கொண்டுவரும் முயற்சியில் முனைப்புடன் ஈடுபட்டிருக்கிறது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு. மாநிலங்களவையில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. பாஜக அரசின் இந்த முயற்சி, குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றத்துக்கு வழிவகுப்பதற்குப் பதிலாக, ஏற்றத்தாழ்வு மிக்க கல்வி முறைக்கே வழிவகுக்கும் என்ற அச்சம் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், பெற்றோர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் விமர்சனங்களை மத்திய அரசு புறந்தள்ளிவருகிறது.

“தரம், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையிலேயே புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. சிலர் குற்றம்சாட்டுவதுபோல் அரசமைப்புச் சட்டத்துக்கு முரணான எந்த அம்சமும் இந்த கல்விக் கொள்கையில் இல்லை” என்று விளக்கம் தந்திருக்கிறார் மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்.

உண்மையில், இந்தப் புதிய கல்விக் கொள்கை என்னதான் சொல்கிறது?

நியாயமற்ற மாற்றங்கள்

மனித வள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ள ‘தேசியக் கல்விக் கொள்கை 2016 வரைவுக்கான சில உள்ளீடுகள்’ எனும் ஆவணம் கல்வியின் பொருளையும் வரையறையையும் மாற்றுகிறது. கல்வி என்பதே வேலைவாய்ப்புக்கான திறன் வளர்ச்சி, வாழ்வாதாரத்தைத் தேடுவதற்கான திறன் வளர்ச்சி என்கிறது இந்த ஆவணம். அதுமட்டுமல்லாமல், குழந்தைப் பருவத்தின் காலத்தை 14-ஆகக் குறைத்து 15 வயதுக்கு மேற்பட்டோரைப் பெரியவர்கள் என அறிவிக்கிறது. குழந்தைத் தொழிலை அங்கீகரிக்கும் விதமாக குழந்தைத் தொழிலாளர்களுக்குத் திறந்த வெளிப் பள்ளி என்கிறது. வேலைக்குச் செல்லும் குழந்தைகள் பள்ளிக்கு வராமலேயே படிக்கலாம் என்கிறது. அத்தனை எளிதாக எடுத்துக்கொள்ள முடியுமா இந்த மாற்றங்களை?

கல்வி என்பது குழந்தைகளின் பிறப்புரிமை. இந்திய அரசமைப்புச் சட்டம் தொடக்கக் கல்வியை அடிப்படை உரிமையாக்கியுள்ளது. இந்நிலையில், தொழிலில் ஈடுபடும் குழந்தை களை மீட்டுப் பள்ளியில் சேர்க்க வேண்டிய அரசு, அவர்கள் பள்ளிக்கு வராமலேயே படிக்கலாம் என்று சொல்வது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. மேலும், தொடக்கக் கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் சமமாகக் கிடைக்காது என்பது எவ்வாறு ஒரு தேசத்தின் கொள்கையாக இருக்க முடியும்?

கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து, வாய்ப்பு மறுக்கப்பட்ட, குடிபெயர்ந்து வாழும் குடும்பங்களைச் சேர்ந்த, இக்கட்டான சூழலில் வாழ்கின்ற குழந்தைகளுக்கு மாற்றுப் பள்ளி மூலம் கல்வியில் தலையீடுகள் செய்யப்படும் என்று சொல்வது ‘சமவாய்ப்பு’ என்ற அரசமைப்புச் சட்ட அடிப்படை உரிமைக்கு எதிரானது. நாட்டின் 70-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருக்கும் வேளையில், சமூகத்தின் கடைக்கோடிக் குடிமகனுக்கு, அனைவருக்குமான பள்ளி கிடையாது என்பது சகித்துக்கொள்ள இயலாத கொள்கை முன்மொழிவு.

முன்னோடிகளின் முயற்சிகள்

ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளில், கல்வியில் பலவீனமாக உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தொழில்பயிற்சி அளிக்கப்படும் என்கிறது இந்த ஆவணம். ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி என்பது விடுதலைக்கு முன்னும், விடுதலைக்குப் பின்னும் இந்தியாவில் நடைமுறையில் இருந்துவந்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் 1920-ல் இயற்றப்பட்ட சட்டம் அதை உறுதிப்படுத்தியது.

அரசிடம் பணமே இல்லை என்றாலும், அரசுதான் தொடக்கக் கல்வியைத் தர வேண்டும் என்பதில் உறுதி யுடன் இருந்தார் காமராஜர். அயோத்திதாசர் கர்னல் ஆல்காட்டுடன் இணைந்து ஒதுக்கப்பட்டோர் கல்வி பயிலப் பள்ளி திறந்தார். கேரளாவில் அய்யங்காளி தனது பெரு முயற்சியால், தாழ்த்தப்பட்ட, ஏழைக் குழந்தைகளுக்காகப் பள்ளிகள் திறக்கச் செய்தார். இப்படி எத்தனையோ முன்னோடிகள், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைய தொலைநோக்குடன் செயல்பட்டிருக்கிறார்கள்.

இரண்டு நூற்றாண்டு சமூக நீதியின் பயனாகக் கிடைத்திருக்கும் தொடக்கக் கல்வியை, எதிர்காலத்தில் அனைத்துக் குழந்தைகளும் முழுமையாகப் பெற இயலாத நிலையை உருவாக்கும் முயற்சியாகத்தான் மத்திய அரசு கொண்டுவர நினைக்கும் புதிய கல்விக் கொள்கையைப் பார்க்க முடிகிறது.

முடிவுசெய்வது யார்?

புதிய கல்விக் கொள்கை மூலம் பத்தாம் வகுப்பில் பிரிவு ‘அ’, பிரிவு ‘ஆ’ என இரண்டு தேர்வு முறைகளைக் கொண்டுவரத் திட்டமிடுகிறது மத்திய அரசு. பல்வேறு விதமான சமூக, பொருளாதாரப் பின்னணியில் இருந்து வந்து, பல தடைகளைக் கடந்து இடைநிலைக்கு வரும் மாணவர்களை உயர் கல்வி தொடர விடாமல் செய்யும் சூழ்ச்சி இது.

எந்த மாணவர் உயர் கல்வியில் கணிதம், ஆங்கிலம் தொடர்ந்து படிக்கப்போவதில்லையோ, அவர் பிரிவு ‘ஆ’வைத் தேர்வு செய்துகொள்ளலாம். மற்றவர்கள் பிரிவு ‘அ’ வைத் தேர்வுசெய்வார்கள் என்கிறது புதிய கல்விக் கொள்கை ஆவணம். அதாவது, பிரிவு ‘ஆ’வைத் தேர்வு செய்பவர்கள் உயர் கல்வியில் கணிதம், அறிவியல் படிக்க இயலாது. 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு 14 வயதுதான் ஆகியிருக்கும். இந்த வயதில் உயர் கல்வியில் என்ன படிக்கப்போகிறோம் என்பதை அவர்களால் எவ்வாறு தீர்மானிக்க முடியும்? மாணவர்களை 10-ம் வகுப்பிலேயே கணிதம், அறிவியல் போன்ற பாடங்களை உயர் கல்வியில் படிக்கத் தகுதியற்றவர்களாக்கும் கல்விக் கொள்கை முற்போக்கானதா? பிற்போக்கானதா?

இவ்வளவு வடிகட்டலுக்குப் பிறகு, மிச்சம் மீதி இருக்கும் 10-ம் வகுப்பு முடித்த மாணவர்கள், தேசிய அளவில் நடத்தப்படும் திறன் அறியும் தேர்வில் பங்கேற்று, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்குத் தகுதி அடிப்படையில் கல்வி உதவித்தொகை என்கிறது இந்த ஆவணம்.

ஒரே பாடத்திட்டம்

தேசிய அளவில் கணிதம், அறிவியல் பாடங்களுக்கு ஒரே பாடத்திட்டம் என்கிறது இந்த ஆவணம். இது சாத்தியமற்றது. கணிதத்திலோ, அறிவியலிலோ குறிப்பிட்ட கோட்பாட்டை, ஒரு மாணவர் குறிப்பிட்ட வகுப்பில் அறிந்திருக்க வேண்டும் என்று அறிவித்துவிட்டால், அந்தக் கோட்பாட்டை மாணவர்க ளுக்கு எவ்வகையில் வழங்கலாம் என்பதை மாநில அளவில் வகுக்கப்படும் பாடத்திட்டம் தீர்மானிக்கும். மண் சார்ந்து, மக்கள் சார்ந்துதான் கணிதம், அறிவியல் போன்ற பாடங்கள் உருப்பெறுகின்றன; வளர்கின்றன. ஒரே மாதிரி யான பாடத்திட்டத்தை இந்தியா போன்ற பன்முகப் பண்பாட்டை, பல தேசிய இனங்களைக் கொண்ட நாட்டில் புகுத்த முடியாது; புகுத்தவும் கூடாது.

அந்தந்த மாநிலத்தின் ஆசிரியர்கள்தான் அந்தந்த மாநிலத்தில் பாடத்திட்டத்தை உருவாக்க முடியும். சம்பந்தமே இல்லாமல் பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் இருந்து சிலர் தயாரிக்கும் பாடத்திட்டத்தை அனைத்து ஆசிரியர்களும் நடத்த வேண்டும் என்பது ஆசிரியர்களைப் பாடத்திட்ட உருவாக்கத்திலிருந்து விலக்கி வைப்பதாகும். மாணவர்களின் சமூக, பொருளாதாரப் பின்னணியையும், அவர்களின் புரிதல் திறனையும் அறிந்தவர்களே உள்ளூர் அளவில் பாடத்திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் எனும் அக்கறையான குரல்கள் எழுந்திருக்கும் காலத்தில், மாநில அளவில்கூடப் பாடத்திட்டம் தயாரிக்கப்படாது; தேசிய அளவில்தான் அது இருக்கும் என்பது நிச்சயம் மாணவர்களின் நலன் சார்ந்தது அல்ல.

அப்படியே தேசிய அளவில் கல்விக் கொள்கை உருவானாலும், மொழி, கல்வி ஆகியவற்றில் கொள்கை முடிவு எடுக்கும் அதிகாரத்தை மாநில அரசிடமிருந்து பறிக்கக் கூடாது. பாடத்திட்டம் மாநில அரசால் உருவாக்கப்பட வேண்டும்.

18 வயதுக்கு உட்பட்டவர் அனைவரும் குழந்தைகள் என்பதை ஏற்று, குழந்தைப் பருவத்தில் அனைவரும் கல்வி கற்க பள்ளி செல்வதை உறுதிப்படுத்த வேண்டும். குழந்தைத் தொழிலாளர் முறை தேசத்தின் அவமானம். குழந்தைகள் தொழிலாளர் ஆக்கப்படுவதைத் தடை செய்யும் கொள்கை வேண்டும். ஆனால், கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குழந்தைத் தொழிலாளர் (தடை செய்தல், முறைப்படுத்தல்) திருத்தச் சட்டம் நம்பிக்கையிழக்க வைத்திருக்கிறது. குழந்தைத் தொழிலாளர் முறையை மறைமுகமாக ஊக்குவிப்பதுபோல் அமைந்திருக்கிறது இந்தச் சட்டத் திருத்தம்.

அருகமைப் பள்ளி அமைப்பில், வயதுக்கேற்ற பன்மொழி கற்கும் வாய்ப்போடு கூடிய தாய்மொழி வழியில், பொதுப்பள்ளி முறைமையை உருவாக்கி, அரசின் செலவிலும் பொறுப்பிலும், 18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் மேல்நிலைப் பள்ளிக் கல்விவரை அடிப்படை உரிமையாக்கி வழங்குவது அரசின் கடமை. கற்றல் தாய் மொழியில்தான் நிகழும் என்பதால், பள்ளிக் கல்வியைத் தாய் மொழிவழியிலேயே தர வேண்டும் என சுப்பிரமணியன் குழு அறிக்கை பரிந்துரைத்திருப்பதை மறந்துவிடக் கூடாது.

கற்றல் வாய்ப்பு அனைவருக்கும் சமமாகக் கிடைக்க பொதுப் பள்ளி முறைமைதான் ஏற்றது என்பது உலக அனுபவம். இந்தியாவில் உருவான அனைத்துக் குழுக்களும் இதையே பரிந்துரைத்திருக்கின்றன. எனவே, மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து, தவறான கொள்கை முன்மொழிவுகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். மக்களாட்சியின் உண்மையான அடையாளம் அதுதான்!

- பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர்,

பொதுப் பள்ளிக்கான மாநில மேடை

தொடர்புக்கு: spcsstn@gmail.com


சமூக நீதிமறுக்கும் கல்விக் கொள்கைபுதிய கல்விக் கொள்கை

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x