Published : 20 Jun 2016 09:56 AM
Last Updated : 20 Jun 2016 09:56 AM

சகாக்கள் செயல்பாடு எப்படி?

பியூஷ் கோயல், நிலக்கரி, மின்சார உற்பத்தித் துறை அமைச்சர்.



*

மோடியின் சகாக்களில் எதிர்க்கட்சிகளாலும் மதிப்போடு உற்றுநோக்கப்படுபவர் பியூஷ் கோயல். “தமிழ்நாட்டு மின்திட்டங்கள் தொடர்பாக விவாதிக்க முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்கவே முடியவில்லை” என்று கூறிச் சர்ச்சையை உருவாக்கியவர்.

நாடு முழுக்கப் பரவலான மின்வெட்டு, மின்உற்பத்தியில் பாதிப்பு, அனல் மின்நிலையங்களில் போதிய நிலக்கரி கையிருப்பின்மை, நிலக்கரி உற்பத்தியில் தேக்க நிலை இப்படியான சூழலில் துறைக்குப் பொறுப்பேற்றார் பியுஷ் கோயல். முதலாண்டிலேயே நிலக்கரி உற்பத்தியை அதற்கு முந்தைய ஆண்டைவிட 8.3% அதிகரிக்கச் செய்தார். 22,000 மெகா வாட் மின்உற்பத்தித் திறன் அதிகமானது. ஊழலுக்குப் பேர் போன நிலக்கரி ஏலத்தை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டலில் வெளிப்படையாக்கினார். அதில் ரூ.3.35 லட்சம் கோடி அரசுக்கு வருவாய் கிடைத்தது. நிலக்கரி உற்பத்தி அதிகரிக்கப்பட்டது. நிலக்கரிப் போக்குவரத்து துரிதப்படுத்தப்பட்டது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதியாகும் நிலக்கரியின் அளவு பெருமளவு குறைந்தது. இதனால் மட்டும் ஆண்டுக்கு ரூ.30,000 கோடி மிச்சப்பட்டிருக்கிறது. 4% ஆக இருந்த மின்பற்றாக்குறை இப்போது 2.3% ஆகக் குறைந்திருக்கிறது. மின்இணைப்பே இல்லாத 18,452 கிராமங்களில் 4,319 கிராமங்களுக்கு (25%) ஒரே ஆண்டில் மின்இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 5 கோடி எல்இடி பல்புகள் மானிய விலைக்கு ஏழைக் குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. மின்சார வாரியங்களை வருவாய் இழப்பிலிருந்து மீட்கவும், மின் உற்பத்தி, விநியோகம் ஆகியவற்றைச் சீரமைக்கவும் இவர் கொண்டுவந்துள்ள ‘உதய்’ திட்டத்தைத் தமிழகம் தவிர்த்த ஏனைய எல்லா மாநிலங்களும் ஏற்றுள்ளன. இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் வந்திறங்கும் நிலக்கரியை நாட்டின் கிழக்கில் உள்ள அனல் மின்நிலையங்களுக்கும், கிழக்கில் உள்ள நிலக்கரி வயல்களிலிருந்து மேற்கில் இருக்கும் அனல் மின்நிலையங்களுக்கும் அனுப்பிவந்ததை நிறுத்தி, அந்தந்தப் பகுதியில் உள்ளதையே பயன்படுத்துமாறு உத்தரவிட்டதன் மூலம் மட்டும் ஆண்டுக்கு ரூ.5,000 கோடி போக்குவரத்துச் செலவை மிச்சப்படுத்தியிருக்கிறார். மின்சார உற்பத்திச் செலவும் கணிசமாகக் குறைந்திருக்கிறது.

சுஷ்மா ஸ்வராஜ், வெளியுறவுத் துறை அமைச்சர்.



*

ஒரு காலத்தில் பாஜகவின் அடுத்த பிரதமர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர். இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் யார் என்று கேட்டால், மோடி என்று சொல்லிவிடக் கூடிய அளவுக்குச் செயல்பாடே தெரியாமல் முடங்கிக் கிடப்பவர் அல்லது லலித் மோடி விவகாரம் போன்ற தவறான செயல்பாடுகளுக்காகச் செய்திகளில் அடிபடுபவர். பெரிய நாடுகள், பக்கத்தில் உள்ள சின்ன நாடுகள் என்று வித்தியாசம் இல்லாமல் பெரும்பாலான பயணங்களில் மோடியே முன்னிற்கும் சூழலில் முன்னேற்பாடுகள், ராஜிய உறவு வியூகங்கள் தீர்மானித்தலிலும்கூட சுஷ்மாவுக்குப் பெரிய அளவில் இடம் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. வெளியுறவுத் துறையின் பெரும்பாலான முடிவுகளை அதிகார வட்டமே தீர்மானிக்க, பின் பேச்சுவார்த்தைகளிலும் சங்கப் பரிவாரங்களைச் சேர்ந்த ராம் மாதவ் போன்றவர்களே பங்கேற்கிறார்கள் என்கின்றன சவுத் பிளாக் வட்டாரங்கள். சுதந்திரம் அடைந்த காலத்தில் தொடங்கி முன்னெப்போதையும்விட, இந்திய வெளியுறவுக் கொள்கையில் பெரிய மாற்றங்கள் நடந்துகொண்டிருக்கும் சூழலில், அதற்கான அமைச்சர் பொறுப்பில் இருப்பவர் அடிச்சுவடே தெரியாத அளவுக்கு மறைந்திருப்பது முரண்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x