Last Updated : 17 Jul, 2016 12:38 PM

 

Published : 17 Jul 2016 12:38 PM
Last Updated : 17 Jul 2016 12:38 PM

தீர்ப்பை ஏற்க சீனா மறுக்கலாம்... ஆனால் அதற்குப் பின்னடைவுதான்!

முடிவு என்னாகுமோ என்று மூன்று ஆண்டுகள் காத்திருந்த பிறகு தென் சீனக் கடலில் சீனாவுக்குத்தான் உரிமை என்ற வழக்கில் பிலிப்பின்ஸுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தபோது, தலைநகர் மனிலாவில் மக்கள் குடும்பம் குடும்பமாக விருந்துண்டு ஆடிப் பாடி கொண்டாடினர்.

சர்வதேச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தென் சீனக் கடல் பரப்புக்கு மட்டுமல்ல; உலகின் பல்வேறு பகுதிகள் பாரம்பரியமாகவே தன்னுடையதுதான் என்று சீனா உரிமை பாராட்டும் பல பகுதிகளுக்கும் பொருந்தக்கூடியவைதான். இந்த நீதிமன்றத்தின் விசாரணைக்கு உள்படவும் தீர்ப்பை ஏற்கவும் மறுத்த சீனாவுக்கு நிச்சயம் இது பின்னடைவுதான்.

பிலிப்பின்ஸுக்கு ஆதரவாகத் தீர்ப்பு வரும் என்று சிலர் எதிர்பார்த்தனர், ஆனால் இந்த அளவுக்குத் தெளிவாகும் திட்டவட்டமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. சீனத்துடன் நமக்கு ஏன் வம்பு என்று நினைத்து நடுவர் மன்றம் வழக்கை விசாரிக்காமல் விட்டுவிடலாம் அல்லது விசாரணையை இழுத்துக்கொண்டே போகலாம் என்றே பலர் நினைத்தனர். பிலிப்பின்ஸ் மட்டுமல்ல; தென் கிழக்கு ஆசியாவில் உள்ள வேறு சில நாடுகளுக்கும் இக்கடல் பகுதியைப் பயன்படுத்த உரிமை உண்டு என்று நடுவர் மன்றம் உறுதிசெய்திருக்கிறது.

தென் சீனக் கடல் பரப்பைச் சுற்றி 9 கோடுகளை வரைபடத்தில் வரைந்துகொண்டுவிட்டதாலேயே அந்த இடங்கள் சீனத்துக்கு மட்டும் உரிய இடங்களாகிவிட்டன. சர்வதேசக் கடல் பரப்பில் வரலாற்று பூர்வமாக சீனம் மட்டுமே அங்கு கோலோச்சியதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. எனவே சீனத்தின் வாதத்தை இப்போதுள்ள சர்வதேச சட்டப் பின்னணியில் ஏற்கவே முடியாது என்றிருக்கிறது நடுவர் மன்றம். கடல் வாணிபப் பரப்பில் தனக்கென்று மட்டும் வழித்தடங்களை ஒதுக்கிக்கொள்ள எத்தனித்த சீனத்தின் முயற்சி முளையிலேயே கிள்ளி எறியப்பட்டிருக்கிறது.

உலகிலேயே அதிக வாணிபம் நடைபெறுவதும், சரக்குகள் போய் வருவதும், அதிகக் கடல் வளங்களைக் கொண்டதுமான பகுதியை சீனம் வளைத்துக் கொள்வதற்கு உறுதியான தடை ஏற்பட்டிருக்கிறது. பிலிப்பின்ஸ் நாட்டு மக்கள் ஆடிப் பாடி விருந்துண்டு இத் தீர்ப்பைக் கொண்டாடினாலும் அரசு நிதானமாக நடந்துகொண்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை அமல் செய்யும் அதிகாரமோ, நடைமுறை ஏற்பாடுகளோ சர்வதேச நீதிமன்றம் வசம் இல்லாததால் சற்றே அடக்கமாக இருங்கள் என்று தன் நாட்டு மக்களை பிலிப்பின்ஸ் கேட்டுக்கொண்டிருக்கிறது. கடல் உரிமை குறித்து சீனத்துடன் பேச பிலிப்பின்ஸ் தன்னைத் தயார்படுத்திவருகிறது.

இந்தத் தீர்ப்பானது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற வலிமையான கடற்படை நாடுகள் இப்பகுதியில் பயணிப்பதற்கான சட்டப்பூர்வ வழியை இத்தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. அடுத்து, பிலிப்பின்ஸைப் போல வியத்நாம், இந்தோனேசியா போன்ற நாடுகளும் சீனத்தின் கடல் எல்லை ஆக்கிரமிப்புக்கு எதிராக வழக்கு தொடர வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

சீனத்தைச் சுற்றியுள்ள நாடுகள் அதன் மீது சட்டபூர்வமாக வழக்கு தொடுக்க வழியேற்பட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பை மதித்து நடக்க சீனா தவறினால் அது சட்டத்துக்குப் புறம்பான நாடாகக் கருதப்படும். இந்தப் பிராந்தியத்துக்கு பொறுப்புள்ள தலைவர் என்ற தலைமைப் பதவியை அதனால் வகிக்க முடியாது. பிலிப்பின்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே இனி அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று பார்க்க வேண்டும்.

© தி கார்டியன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x