Last Updated : 21 Nov, 2015 08:13 AM

 

Published : 21 Nov 2015 08:13 AM
Last Updated : 21 Nov 2015 08:13 AM

களத்தில் தி இந்து: உதவும் கரங்கள் ஒன்றுசேர்கின்றன!

மழை, வெள்ளத்தால் வீடிழந்து நிலைகுலைந்திருக்கும் நம்முடைய சகோதர, சகோதரிகளுக்கு உதவ அழைப்பு விடுத்திருந்தோம். அவர்களது உடனடித் தேவை ஒரு புதுப் பாயும் போர்வையும் என்றும் குறிப்பிட்டிருந்தோம். துயர் துடைக்க அணிவகுப்பதில் ‘தி இந்து’ வாசகர்கள் ஒரு மக்கள் இயக்கம் என்பதை நிரூபிக்கும் வகையில் ஏராளமானோரிடமிருந்து குவிய ஆரம்பித்திருக்கின்றன உதவிகள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பாய்கள், போர்வைகள் மட்டும் அல்லாமல் லுங்கிகள், பனியன்கள் என்று பல்வேறு உதவிகளை கே.பி.என். போக்குவரத்து நிறுவனம் மூலமாக அனுப்பத் தொடங்கியிருக்கிறார்கள் நம் வாசகர்கள்.

சென்னையில் வி.எஸ்.ஜி. லுங்கி நிறுவனத்திடமிருந்து முதல் உதவி வந்தது. 2,000 பேருக்கான ‘நண்டு’ மார்க் கைலிகளை கேபிஎன் நிறுவனம் மூலமாக அனுப்பிவைத்திருந்தார்கள். கோவையில் டாடாபாத் மின் வாரிய அலுவலகத்தில் பணியாற்றிவரும் ஊழியர்கள் சுமார் 70 பேர் ரூ. 15 ஆயிரம் திரட்டி, போர்வை, பாய்களோடு ஓடி வந்தனர். திருப்பூரில் தொழில் துறை சார்பில், ஸ்ரீபுரம் அறக்கட்டளை உறுப்பினர் அபிராம் நிட்டர்ஸ் கொண்டசாமி முதல் ஆளாக 300 பேருக்கான பனியன்களை அனுப்பிவைத்தார். சேலத்தில் அம்மாபேட்டையைச் சேர்ந்த வாசகர் செந்தில்குமார் 50 பாய்கள், போர்வைகளோடு வந்து சேர்ந்தார். ஈரோடு அனைத்துத் தொழில் வணிகச் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச்செயலரான வாசகர் வி.கே.ராஜமாணிக்கத்திடமிருந்து முதல் அழைப்பு வந்தது. முதலில் தனிப்பட்ட வகையிலான உதவியை உடனடியாக அனுப்பிவிடுகிறேன் என்றவர், ரூ.5,000-க்கான போர்வைகளை அனுப்பிவைத்தார். அடுத்து, ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர் சண்முகனும் செயலர் திருமூர்த்தியும் 100 போர்வைகள், 25 துண்டுகள் அடங்கிய பெட்டியைக் கொண்டுவந்து கொடுத்தனர். இன்னும் மதுரையில், வேலூரில், திருச்சியில், தஞ்சாவூரில், திருவண்ணாமலையில், சிதம்பரத்தில், நாகர்கோவிலில், புதுக்கோட்டையில், புதுச்சேரியில், வேலூரில், திண்டுக்கல்லில் என்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வாசகர்களிடமிருந்து தொடர்ந்து உதவிகள் வந்துகொண்டேயிருப்பதாக கேபிஎன் நிறுவனத்தார் தெரிவித்தவண்ணம் இருக்கிறார்கள். முதல் நாள் உதவியவர்களில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் நடராஜனும் தஞ்சாவூர் மாணவர் கார்த்திகேயனும் நெகிழவைத்தவர்கள். நன்றி வாசகர்களே… உதவிகள் தொடரட்டும்!

வீட்டோடு சேர்த்து தங்கள் மொத்த உடமைகளையும் பறிகொடுத்து அகதிகளைப் போல நிற்பவர்களுக்கு நாம் செய்ய வேண்டியவை நிறைய. வாசகர்களோடு கை கோத்து அடுத்தடுத்து, செய்ய வேண்டிய உதவிகளைத் தொடர்ந்து யோசிக்கிறோம். சேர்ந்தே திட்டமிடுவோம். இணைந்த கைகள் ஆறுதல் தரட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x