Published : 08 Aug 2016 09:50 AM
Last Updated : 08 Aug 2016 09:50 AM

மோடியும் தலித்துகளும்

தி நியூயார்க் டைம்ஸ் அமெரிக்க நாளிதழில் 3.8.2016 அன்று வெளியான தலையங்கம்

குஜராத்தின் அகமதாபாத் நகரில் சமீபத்தில் ஆயிரக்க ணக்கான தலித் மக்கள் நடத்திய போராட்டம், இந்தியாவின் அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சி என்று பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்த வாக்குறுதிக்கும், வலதுசாரி இந்துத்துவக் கொள்கையின் அடிப்படையிலான பிரிவினைவாத அரசியலுக்கும் இடையிலான முரண்பாட்டை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.

குஜராத்தின் உனா நகரில் ஜூலை 11-ல், இறந்த பசுவின் தோலை உரித்த நான்கு தலித்துகள் மீது, பசுவைக் காப்பதாகக் கூறிக்கொள்ளும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய தாக்குதலைக் கண்டித்தே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. தலித்துகளின் மேலாடையைக் கழற்றி, அவர்களை காருடன் பிணைத்துக் கட்டி, போலீஸ் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் பல மணி நேரம் தாக்கியிருக்கிறார்கள்.

மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில், இந்துக்களால் புனிதமாகக் கருதப்படும் பசு, வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளால் ஒரு கவசமாகப் பயன்படுத்தப்படுகிறது. மோடியே பல கூட்டங்களில் பசுவதை தொடர்பாகப் பேசியிருக்கிறார். “எங்கெல்லாம் பாஜக ஆட்சி செய்கிறதோ அங்கு மாட்டிறைச்சிக்குத் தடை இருக்கும்” என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா பெருமிதத்துடன் கூறியிருக்கிறார். “தலித்துகளுக்குத் தக்க பாடம் கற்பித்தவர்கள் அனைவருக்கும் எனது முழு ஆதரவு உண்டு” என்று பாஜக எம்.பி. ராஜா சிங் கூறியிருக்கிறார்.

கடந்த செப்டம்பரில், மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி முஸ்லிம் ஒருவர் ஒரு கும்பலால் அடித்துக்கொல்லப்பட்டார். மார்ச் மாதம், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாடு வியாபாரிகள் இருவர் அடித்துக்கொல்லப்பட்டார்கள்.

தங்களைத் தாக்கக் கூடாது; தங்கள் மீது பல ஆண்டுகளாகத் தொடரும் அடக்குமுறைக்குத் தீர்வு காண வேண்டும். அதுவரை இறந்த பிராணிகளின் உடல்களைத் தொடப்போவதில்லை என்று தலித் மக்கள் கூறியிருக்கிறார்கள். கல்வி உள்ளிட்ட பல விஷயங்களில் தலித் மக்கள் முன்னேறியிருந்தாலும் இதுபோன்ற கொடுமையான பாரபட்சத்தை அவர்கள் எதிர்கொள்ள நேர்கிறது. கடந்த ஜனவரி மாதம், சாதி அடிப்படையிலான புறக்கணிப்பின் காரணமாக தலித் சமூகத்தைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆய்வு மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.

குஜராத்தில் 12 ஆண்டுகள் ஆட்சிசெய்த மோடி, 2014-ல் நடந்த பொதுத் தேர்தலில், குஜராத் பொருளாதார வளர்ச்சி மாதிரியின் அடிப்படையில் மொத்த இந்தியாவையும் மாற்றப்போவதாக வாக்குறுதி அளித்து, பெரும் வெற்றி பெற்றார். கடந்த செப்டம்பரில், நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த படேல் சமூகத்தினர், தங்களுக்குப் போதுமான வேலை இல்லை என்று சொல்லிப் போராட்டம் நடத்தினர்.

மோடி தனக்குப் பிறகு, குஜராத் முதல்வர் பதவிக்காகத் தேர்ந்தெடுத்த ஆனந்திபென் படேல் ராஜினாமா செய்திருக்கிறார். குஜராத்தில் ஏற்பட்டிருக்கும் இந்தக் குழப்பம், அம்மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலிலும், 2019-ல் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தலிலும் பாஜகவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாஜக கவலைப்படுகிறது.

மோடி மாட்டிறைச்சி விவகாரத்தில் வெட்ககரமான தனது மெளனத்தைக் கலைக்கவில்லை என்றாலோ, பொருளாதார வாய்ப்புகள், கண்ணியம் மற்றும் நீதியின் அடிப்படையில் தனது அரசியல் பாதையை மாற்றியமைக்காவிட்டாலோ பாஜகவுக்குப் பின்னடைவு நிச்சயம்!

தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x