Published : 23 Jun 2017 09:27 AM
Last Updated : 23 Jun 2017 09:27 AM

மோடி அரசால் முற்றுகையிடப்படுகின்றனவா ஊடகங்கள்?

கிருஷ்ண பிரசாத், ‘அவுட்லுக்’ பத்திரிகையின் முன்னாள் தலைமை ஆசிரியர், இந்திய பிரஸ் கவுன்சில் உறுப்பினர்.

ஒரு செய்தி ஊடகத்தில் ஆசிரியராக இருந்த ஒருவரை, நிர்வாகம் திடீரென வீட்டுக்குப் போகச் சொல்லிவிட்டது. அதற்கும் சில மாதங்களுக்கு முன்னால் ஒரு ஊடக உரிமையாளருக்கும் அப்படி ஒரு நெருக்கடி வந்தது. இருவரும் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தற்செயலாகச் சந்தித்துக்கொண்டனர். “யார் தொலைபேசியில் பேசியது?” என்று பின்னவர் கேட்டார். சில மத்திய அமைச்சர்களின் பெயர்களை முன்னவர் கூறினார். “பாஜகவில் இருக்கும் அந்த ஆர்எஸ்எஸ்காரரா?” என்று சற்றே கோபத்துடன் கேட்டார். அங்கே பேசப்பட்டது தவறான அனுமானத்தில்கூட இருக்கலாம்; பிரதான ஊடகங்கள் நெடிய மயக்கத்தில் ஆழ்த்தப்பட்டுள்ளன. மேலிட அழுத்தம் காரணமாக மூச்சுத் திணறுகின்றன. நெருக்கடிநிலை என்ற இருண்ட காலத்தில்கூட இப்படி இருந்ததில்லை. அப்போது தணிக்கை அதிகாரிகள் பத்திரிகை அலுவலகத்திலேயே அமர்ந்து, ‘இந்திரா காந்தி விரும்ப மாட்டார்’ என்று தாங்கள் கருதிய செய்திகளையெல்லாம் நீக்கினார்கள். இப்போதோ செய்தித் தணிக்கைகளில் யாருடைய கைரேகைகளையும் பார்க்க முடியாமல் உள்ளுக்குள் இருந்தே செயல்படுகின்றனர். செய்தித் தலைப்புகளைத் திருத்தியதல்ல, நிர்வாகிகள் குழுவில் இடம்பெற்றே சாதிக்கின்றனர். இதனால் ஊடகம் மட்டுமல்ல, இந்தியா என்ற எண்ணமே முற்றுகைக்கு உள்ளாகியிருக்கிறது. செல்வாக்குள்ள பத்திரிகை அதிபர்கள், விவாத நடுவர்கள், ஆசிரியர்கள் அனைவருமே காஷ்மீரில் ராணுவ ஜீப்பின் முன்பக்கத்தில் உட்கார வைக்கப்பட்ட காஷ்மீரியைப் போலத் தவிக்கின்றனர். எதிர்க் கருத்துகள் இருந்தால் அவற்றை நசுக்கவும், ஒப்புதலை உற்பத்திசெய்யவும் செயல்திட்டங்களை ஏற்படுத்தவும், ஆதரவைப் பெருக்கவும், அச்சத்தையும் நஞ்சையும் வெறுப்பையும் பிற மத வெறுப்பையும் பரப்பவும் அனுப்பப்பட்டவர்கள், சில வேளைகளில் மவுனமாக இருந்தும் செயல்பட வைக்கின்றனர்.

காற்றலைகளைக் காவிமயமாக்கியிருப்பது மலைப்பை ஏற்படுத்துகிறது. எனவே, என்.டி.டிவி. ஊக்குவிப்பாளர்களின் அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்திய நாளிலிருந்து தான் நெருக்கடி என்று தவறாகக் கருத வேண்டாம். என்.டி.டி.வி. ஆசிரியர் குழுவில் இணை உறுப்பினராகத் தங்களவரைச் சேர்க்க முயன்று, அதில் தோற்று, ஒத்துழைக்குமாறு கேட்டு, அதுவும் ஏற்கப்படாததால் கையை முறுக்கும் வகையில் அரசு அதிகாரிகளை விட்டு திடீர் சோதனைகளை நடத்தியுள்ளனர்.

என்.டி.டி.வி.க்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான கண்டனப் பேரணியில் கலந்துகொண்ட பத்திரிகையாளர்களின் பட்டியலை அரசு வைத்திருப்பதென்பது மோடியின் ‘புதிய இந்தியா’வில் ஆச்சரியப்படுவதற்கான விஷயம் இல்லை. அதில் நாங்கள் சேரவில்லை என்று வெளிநாட்டு நிருபர்கள் சங்கத்தினர் அறிவித்ததும் அப்படித்தான். தொலைக்காட்சித் துறையில் இனி அரசுக்கு எதிராக எழுந்து நிற்கவே பெரும்பாலானவர்கள் அச்சப்படுவார்கள் என்று ஒரு டி.வி. நிறுவனத்தின் தலைமை நிர்வாகி கூறியதும் அப்படித்தான்.

எல்லாத் தொலைக்காட்சி அலைவரிசைகளையும் ‘பெரியண்ணன்’ பார்த்துக்கொண்டேயிருக்கிறார், ஒவ்வொரு ட்வீட்டும் ஊன்றிப் படிக்கப்படுகிறது, ஒவ்வொரு வார்த்தையும் கவனிக்கப்படுகிறது. ‘கூண்டில் அடைக்கப்பட்ட கிளி’(சிபிஐ) தன்னுடைய இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும்போது ஊடக அதிபர்கள் யார்தான் வம்பை விலைக்கு வாங்குவார்கள்? 2014-ல் நிதித் துறைக்கும் செய்தி - ஒலிபரப்புத் துறைக்கும் ஒருவரையே அமைச்சராக நியமித்தது மிகப் பெரிய சாணக்கியத்தனம். அரசாங்கம்தானே பெரிய விளம்பரதாரர்? “தேசத்தின் இருப்பே கேள்விக்குறியாகிவிட்டிருக்கிறது. அச்சம், கோபம், பதற்றம், பீதி ஆகியவை அன்றாட அம்சங்களாகிவிட்டன. யாரும் யாரையும் நம்புவதில்லை. யாரும் பாதுகாப்பாக உணர்வதில்லை. பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட பலரும் அரசிடம் தங்கள் சகாக்களைப் பற்றியும் அண்டை அயலார் பற்றியும் கோள் சொல்லித் தங்களுடைய விசுவாசத்தை வெளிப்படுத்துகின்றனர்” என்று பிரபல துருக்கி நாவலாசிரியை எலிஃப் சபக் சொல்லியிருப்பது இந்தியாவுக்கும் பொருந்தும். இப்போது இங்கே நடப்பவையெல்லாம், சுதேச தேசியவாதிகளுக்குப் பித்துப் பிடித்துள்ள அமெரிக்கா, ஜப்பான், துருக்கி, பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் நடக்கின்றன. பத்திரிகையாளர்களை வசைபாடுவது, இணையகளத்தில் பின்தொடர்வது, கைது செய்வது, கொல்வது, வீடுகளில் அதிகாரிகளைக் கொண்டு சோதனை போடுவது, வீட்டுக்குள் செல்ல அல்லது வீட்டிலிருந்து வெளியேற அனுமதி மறுப்பது என்று பல வழிகள் கையாளப்படுகின்றன. பத்திரிகைச் சுதந்திரத்தை அனுமதிப்பதில் இந்தியா 136-வது இடத்தில் இருப்பதில் வியப்பு ஏதும் இல்லை.

ஊடகங்களின் இந்த நிலைமைக்கான பழி அனைத்தையும் அரசியல்வாதிகளின் தலையில் மட்டும் போடுவது புத்திசாலித்தனமில்லை. கொள்கையில் உறுதியாக இல்லாத முதலாளிகள், பணம் சம்பாதிப்பது மட்டுமே குறியாக உள்ள வர்த்தகச் செயல்பாடு, விளம்பர விற்பனை வரவுகளில் சரிவு, உருவாகும் புதிய தொழில்நுட்பங்கள் என்று பிற காரணங்களும் உண்டு. பத்திரிகைச் சுதந்திரம் என்ற கொள்கை கலங்கரை விளக்கத்தைப் போல ஜனநாயகத்துக்கு இன்றியமையாதது. அரசில் நேரடியாக இடம்பெறாத அமைப்புகள் இந்தியாவின் அடிப்படை நன்னெறிகளை பட்டப்பகலில் குலைத்துக்கொண்டிருக்கின்றன. ஊடகங்களில் பெரும்பான்மையானவை அரசை ஊக்குவிக்கும் கோமாளிகளாக ஆடிக்கொண்டிருக்கின்றன. எதிர்கால வரலாற்றாசிரியர்கள் இந்த நிலை குறித்து நிச்சயம் அதிசயிப்பார்கள்.

சந்தன் மித்ரா, ‘தி பயனீர்’ நாளிதழ் ஆசிரியர்.

சமீப காலம் வரை இந்திய முஸ்லிம் மதகுருக்கள், ‘இஸ்லாத்துக்கு ஆபத்து’ என்று போர்ப் பரணி பாடுவார்கள். படிப் பறிவில்லாத மக்களை ஓரணியில் திரட்டவும் அவர்களை இன்னொரு சமூகத்துக்கு அல்லது அரசுக்கு எதிராக மோத விடவும் இப்படிச் செய்வார்கள். கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் ஒரு பிரிவினரும் இப்படித்தான் நடந்துகொள்கின்றனர்.

டெல்லியில் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி ஏற்பட்டது முதல் பத்திரிகையாளர்களில் இடதுசாரிகள், சுதந்திரச் சிந்தனையாளர்கள் அதிலும் குறிப்பாக ஆங்கிலப் பத்திரிகைகளைச் சேர்ந்தவர்கள் இந்திய ஊடகங்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாகக் கூரை மீதிருந்து கூவிவருகின்றனர். மோடியைக் கட்டோடு பிடிக்கவில்லை என்பதால் ஏற்பட்ட வெறுப்பு இது. இடதுசாரி சுதந்திரச் சிந்தனையாளர்கள் இதுவரை அனுபவித்துவந்த சலுகைகளுக்கு பாஜக முற்றுப்புள்ளி வைத்துவிட்டது உண்மை. தங்களுக்குக் கவனிப்பு குறைந்துவிட்டது என்பதற்காக, ‘ஊடகங்கள் முற்றுகையிடப்படுவதாக’க் கூறுவது விஷமத்தனமானது, சித்தாந்த உள்நோக்கம் கொண்டது. இந்தக் குற்றச்சாட்டுக்குச் சிறிதும் ஆதாரம் இல்லை. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு ஊடகங்களின் கைகள், வாய், கால்கள் அனைத்தும் கட்டப்பட்டது ஒரே முறை, அது காங்கிரஸ் ஆட்சி கொண்டுவந்த நெருக்கடி நிலையின்போது.

2002-ல் மோடிக்கு எதிராக அவிழ்த்துவிட்ட விஷமப் பிரச்சாரத்தின் நெடிதான் இடதுசாரி ஊடகங்களின் விமர்சனங்களில் தொடர்கிறது. அச்சுப் பத்திரிகை, காட்சி ஊடகங்கள், சமூக ஊடகங்கள் என்று எல்லாவற்றிலும் இன்றைய அரசு - அதிலும் குறிப்பாக பிரதமர் - அன்றாடம் பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்ந்து பகடி செய்யப்படுகிறார். மாட்டிறைச்சியை விற்றவர் அல்லது சாப்பிட்டவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான செய்திகள், வகுப்புக் கலவரத்தைத் தூண்டும் அளவுக்கு தேசிய அளவில் பெரிதாக எழுதப்படுகின்றன. மக்களைத் தூண்டிவிட்டு, அரசைச் சீர்குலைக்கும் முயற்சி இது. இந்தப் பிரச்சாரங்களையெல்லாம் அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கியிருக்கிறதா?

உத்தரப் பிரதேச சட்டப் பேரவை பொதுத்தேர்தலின்போது இடதுசாரி சார்புள்ள செய்தி ஊடகங்கள் அனைத்தும், பாஜகவின் செல்வாக்கு 2014 மக்களவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு வெகுவாகச் சரிந்துவிட்டதாக எழுதின. 403 தொகுதிகளில் பாஜக கூட்டணி 325 இடங்களில் வென்ற பிறகும், முதல் நாளிலிருந்தே முதல்வர் ஆதித்யநாத்துக்குக் கட்டளையிடும் தொனியில்தான் பத்திரிகைகள் எழுதிவருகின்றன. இந்தப் பத்திரிகைகளின் விளம்பரத்தை அரசு குறைத்ததா, நிறுத்திவிட்டதா? அரசுக்கு எதிராக எழுதியதற்காக எந்தப் பத்திரிகையாளராவது அலைக்கழிக்கப்படுகிறாரா? யாரையாவது கைது செய்திருக்கிறார்களா, அரசை விமர்சித்து ஏன் எழுதினீர்கள் என்று கேள்வியாவது கேட்டார்களா? இப்படி எதுவும் நடக்காதபோது, ஊடகங்கள் முற்றுகையிடப்படுவதாகக் கூறுவதற்கு என்ன அடிப்படை?

சமீபத்தில் என்.டி.டி.வி. ஊக்குவிப்பாளர்கள் வீடுகளில் மத்திய அதிகாரிகள் சோதனை நடத்தியதும், ஊடகங்கள் அச்சுறுத்தப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு வலுவடைந்துள்ளது. ஊடகங்களின் அலுவலகங்களில் சோதனையிடுவது விரும்பத்தக்கதல்ல. ஆனால், இந்தச் சோதனை அந்த ஊடகத்தின் கருத்துகளுக்கு எதிராகவா, நிதி நிர்வாகச் சீர்கேட்டுக்கு எதிராகவா என்பதில் தெளிவு வேண்டும். நிதி நிர்வாக முறைகேட்டுக்காகத்தான் இந்த சோதனை என்று சிபிஐ கூறியிருக்கிறது. தன்னுடைய செயலை அது நீதிமன்றத்தின் முன் நியாயப்படுத்த வேண்டும். உண்மை தெரிவதற்கு முன்னால் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிடக் கூடாது. இந்தியாவின் ஜனநாயக மரபுகள் வலுவானவை; செய்தி ஊடகங்கள் தாங்கள் விரும்பும் அளவுக்கு, சுதந்திரமாக இருந்துகொள்ளலாம்.

லாரன்ஸ் லியாங், டெல்லி அம்பேத்கர் பல்கலைக்கழக சட்டக் கல்லூரிப் பேராசிரியர்

என்.டி.டி.வி. நிறுவன அலுவலகங்கள் மீது சிபிஐ நடத்திய சோதனைகள் சில கேள்விகளை எழுப்புகின்றன. அந்த நிறுவனத்தின் நிதி நிர்வாகம் மற்றும் நிறுவனங் களுக்கு இடையிலான பரிமாற்றங்கள் காரணமாகத்தான் திடீர் சோதனை நடந்திருக்கிறது. இதில் பத்திரிகைச் சுதந்திரம் மீதான தாக்குதல் என்ற அம்சம் குறைவு, நிதி நிர்வாகரீதியாகப் பதில் அளிக்க வேண்டிய பொறுப்பு நிறுவனத்துக்கு இருக்கிறது. இருந்தாலும், நிதி நிர்வாகத்துக்காக எல்லா ஊடக நிறுவனங்களும் சோதனைக்கு உள்ளாகாதபோது, ஒருசிலர் மட்டும் குறி வைத்து நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படும்போது அரசின் நோக்கம், செயல்கள் குறித்துச் சுதந்திரச் சிந்தனையாளர்கள் கேள்வி எழுப்புவது நியாயமே. என்.டி.டி.வி. நிறுவனத்தின் மீது நடந்த சோதனைகளை வைத்து செய்தி ஊடகங்கள் அரசால் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாக உறுதியான முடிவுக்கு வந்துவிட முடியுமா?

ரோஹித் வெமுலா பற்றியும் காஷ்மீர் பற்றியும் எடுக்கப்பட்ட குறும்படங்கள் திரையிட அனுமதி மறுப்பு போன்ற அடக்குமுறைகளுக்கு, என்.டி.டி.வி. மீது நடந்த சோதனைக்குக் கிடைத்த கவனிப்பு கிடைக்கவில்லை. என்.டி.டி.வி. மீதான சோதனைக்காகக் குரல்கொடுப்பது நியாயம்தான்; யார் குரல் கொடுக்கத் தகுதியான அப்பாவி, யார் பாதிக்கப்பட்டால் குரல் கொடுக்க அவசியமில்லை என்றெல்லாம் இந்த நேரத்தில் வாதாடக் கூடாது. என்.டி.டி.வி. வலிமைவாய்ந்த, செல்வாக்குமிக்க ஊடக அமைப்பாக இருப்பதால் சாமானியப் பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர், வலைதள எழுத்தாளர்கள் என்று எல்லோரும் அதற்காகக் கவலைப்படுவது இயல்பாக இருக்கிறது.

ஒரு கொலை வழக்கில், யூத வெறுப்பாளரும் மேட்டுக்குடியைச் சேர்ந்தவருமான வான் புலாவுக்கு ஆதரவாக மனித உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் ஆலன் டெர்சோவிட்ஸ் வாதிட முன்வந்தார். இவருக்காக ஏன் வாதாடுகிறீர்கள் என்று சகாக்கள் கேட்டார்கள். இவர் பிரபலமான மேட்டுக்குடி என்பதால்தான் வாதாடுகிறேன், இவரையே அரசு அலைக்கழிக்க முடியும் என்றால், சாமானியர்களின் நிலை எப்படியிருக்கும் என்று மற்றவர்கள் புரிந்துகொள்ளத்தான் என்றார்.

ராணுவத்தில் புழங்கும் ‘முற்றுகை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதில் பிரச்சினை இருக்கிறது. ஊடகத்தை மட்டுமே அரசு அச்சுறுத்துவதைப் போன்ற எண்ணமும் ஏற்படுத்தப்படுகிறது. பெரும்பாலான முற்றுகைகள் அரசுடன் ஊடகங்களும் கூட்டாளியாகச் சேர்ந்து செயல்படும்போதுதான் அரங்கேறுகின்றன. ஜீப்பின் முன்பகுதியில் ஒருவரை அமரவைத்து ஓட்டிச் சென்றதை நியாயப்படுத்தினார் தரைப்படைத் தலைமைத் தளபதி.

அதற்காக அவரை ஜாலியன் வாலாபாக் படுகொலையை நிகழ்த்திய ஜெனரல் டயருடன் ஒப்பிட்டார் கல்வியாளர் பார்த்த சாட்டர்ஜி. இதற்காக அவரைக் கடுமையாக வலைதளத்தில் விமர்சித்தனர்; ‘தி வயர்’ இணையதளத்துக்கு எதிராக ‘டைம்ஸ் நவ்’ இடைவிடாமல் கருத்து மோதல்களில் ஈடுபடுகிறது. ஊடகங்கள் நடுநிலையானவையா, கருத்துகள் எல்லாம் நியாயமானவையா என்று அரசு கேட்க அவசியமில்லாமல், தங்களுக்குள்ளே சண்டையிட்டுக்கொள்வதன் மூலம் அவையே வெளிப்படுத்திவிடுகின்றன.

செய்தி ஊடகங்கள் என்பவை உண்மையில் என்ன நடக்கிறது என்பதைக் கண்காணித்துச் சொல்ல வேண்டியவை; அரசுக்கு லாலி பாடுவதற்காக ஏற்பட்டவை அல்ல. முற்றுகை என்பது உள்நாட்டுப் போரைப் போல ஊடகங்களுக்கு உள்ளேயே நடக்கும் போட்டியையும் குறிக்கும். அதே வேளையில், ஊடகங்கள் அரசின் அச்சுறுத்தலுக்கும் ஆளாகுபவைதான்.

© ‘தி இந்து’ ஆங்கிலம்,

சுருக்கமாகத் தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x