Last Updated : 09 Jul, 2016 09:46 AM

 

Published : 09 Jul 2016 09:46 AM
Last Updated : 09 Jul 2016 09:46 AM

நசுக்கப்படும் நடுத்தர வர்க்கம்

கோடிக்கணக்கானவர்களின் வருமான இழப்பைத் தடுக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?



எதிர்காலம் பற்றிய நிச்சயமற்ற நிலை பாட்டாளி வர்க்கக் குடும்பங்களுக்கு மட்டும் உரியது அல்ல; அமெரிக்காவில் வாழும் பள்ளி - கல்லூரி ஆசிரியர்கள், இடைநிலை நிர்வாகிகள், நூலகர்கள், பத்திரிகையாளர்கள், கணினிகளுக்குத் தேவைப்படும் ஆணைத் தொடர்களை எழுதுகிறவர்கள் என்ற நிலையில் உள்ள நடுத்தர வர்க்கத்தவர்களுக்கும்கூட அதே நிலைதான். பாட்டாளி வர்க்கம் என்பது மேலும் பல உயர் வருவாய்ப் பிரிவினரைச் சேர்த்துக்கொண்டு வளர்கிறது. ‘நிலையற்ற வேலை, போதாத வருவாய்’ என்ற இலக்கணத்தில் இப்போது நடுத்தர வர்க்கமும் இணைகிறது. பொருளாதாரத்தில் வசதியான, பாதுகாப்பான வர்க்கம் என்ற நிலை மாறிவிட்டது!

அமெரிக்காவில் ஃபுளோரிடாவைச் சேர்ந்த அந்தக் கணவன், மனைவி இருவருமே சட்டப் பட்டதாரிகள், நன்றாகச் சம்பாதிக்கும் நிலையில் இருப்பவர்கள். அவர்களால் சொந்தமாக வீட்டையோ காரையோ வாங்க முடியாததால், அந்தப் பெண்ணின் பெற்றோருடன் சேர்ந்து வாழ்கின்றனர். பல பள்ளிக்கூட ஆசிரியர்கள் தங்களுடைய வேலை முடிந்தவுடன் இன்னொரு பகுதி நேர வேலைக்கு ஓடுகின்றனர். வீடுகளில் பெருக்குவது, பாத்திரம் துலக்குவது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது என்று கூடுதலாக ஒரு வேலையைச் செய்கின்றனர். ஒரு ஆசிரியை வீட்டு வாடகை செலுத்துவதற்காக மட்டுமே இப்படி வேலை பார்க்கிறார்.

முடிந்தால் செய்யுங்கள்...

பலருடைய வேலை நிரந்தரமானதாக இருந்தாலும், பத்தாண்டுகளுக்கு முன்னால் தரப்பட்ட மதிப்புக்கே ஊதியம் இருப்பதால், கூடுதல் வேலைக்குச் செல்கின்றனர். நடுத்தரக் குடும்பங்களின் வீட்டுச் செலவு 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுடன் ஒப்பிடும்போது 30% அதிகரித்துவிட்டது. கூடுதல் வேலையின் தன்மையும் கடினமாக இருக்கிறது. சில நாட்களுக்கு மட்டுமே வேலைக்கு வரச் சொல்கின்றனர் அல்லது இரண்டாவது ஷிஃப்ட்டுக்கு வாருங்கள் என்கின்றனர். கூடுதல் நேரம் வேலை செய்ய நேர்ந்தால், அதற்குப் பணம் தர முடியாது என்று முதலிலேயே கூறிவிடுகின்றனர். சம்பளம் போதவில்லை என்றாலோ வேலையைப் பற்றிக் குறை சொன்னாலோ, “முடிந்தால் செய்யுங்கள், இல்லாவிட்டால், வேறு ஆள் பார்த்துக்கொள்கிறோம்” என்று முகத்தில் அடிப்பதுபோலக் கூறிவிடுகின்றனர்.

சமீபத்தில் ஒரு சட்டத் துறைக் கண்காட்சிக்குச் சென்றிருந்தேன். தங்களுடைய சொத்து, குடும்ப விவகாரங்கள் தொடர்பான வழக்குகளில் ஆலோசனை பெற ஆயிரக்கணக்கில் மக்கள் வந்து சென்றனர். ‘சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை ஆராய்ந்து ஆலோசனை கூறும் மென்பொருள் விற்பனைக்குத் தயார்’ என்று சில அரங்குகளில் விளம்பரத் தட்டி வைத்திருந்தார்கள். எனவே, இன்னும் சில நாட்களில் வழக்கறிஞர்களுக்குச் சட்ட ஆலோசகர் வேலைகூட அதிகம் கிடைக்காது என்று தெரிகிறது.

வழக்கறிஞர்களைப் போலவே சொந்தமாகத் தொழில் செய்யும் மற்றவர்களும், பலசரக்குக் கடைப் பையன்களைப் போலவே குறிப்பிட்ட வேலை நேரம் என்றில்லாமல் வேலைபார்க்க வேண்டியிருப்பதாக வருத்தப்பட்டனர். பலர் இரவிலும் வார விடுமுறை நாட்களிலும்கூட இடைவிடாமல் வேலை செய்வதால் வீட்டில் குழந்தைகளைக்கூடப் பார்க்க முடியவில்லை என்று ஆதங்கப்பட்டனர். இந்தக் கூடுதல் வருமானத்தால் குடும்பம் நடத்த முடிந்தாலும், கல்லூரியில் படிக்கும்போது வாங்கிய கடனைக்கூட அடைக்க முடியாமல் அவதிப்படுவதாகக் கூறினர்.

ஆண்டுக்கு 48,000 டாலர்கள் முதல் 2,50,000 டாலர்கள் வரையில் சம்பாதிக்கும் குடும்பங்கள் தங்களை நடுத்தரக் குடும்பங்கள் என்று அழைத்துக்கொள்ளலாம் என்றாலும், ஒன்றுக்கும் மேற்பட்ட வேலைகளைக் குடும்பத்தில் உள்ள சிலர் செய்து மொத்தமாக இத்தொகையை ஈட்டும்போது நடுத்தரக் குடும்பமாக எப்படிக் கருத முடியும் என்ற கேள்வி எழுகிறது.

கலிஃபோர்னியாவில் ஒரு தொழில்நுட்பப் பட்டதாரி இரண்டு வெவ்வேறு வேலைகளை ஒரே நாளில் செய்கிறார். இரண்டு வேலைகளுக்கும் செல்வதற்கே அவருக்குத் தனித்தனியாக ஒரு மணி நேரம் பிடிக்கிறது. வேலை பார்க்கும் இரண்டு இடங்களில் ஏதாவது ஒன்றின் அருகில்கூட வசிக்க முடியாதபடிக்கு வாடகை மிகமிக அதிகமாக இருக்கிறது. நாட்டிலேயே சான்பிரான்சிஸ்கோ நகரில்தான் வீட்டு வாடகை அதிகம். கடந்த ஏப்ரல் நிலவரப்படி இரு படுக்கை அறைகள் உள்ள தனி போர்ஷன் என்றால், மாதம் மூன்று லட்ச ரூபாய் தேவைப்படுகிறது.

நான் சந்தித்த பல நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை ‘பூர்ஷ்வா’ என்றுதான் அடையாளமிட முடியும். ஆனால், அந்தப் பிரிவினருக்குக் கிடைத்துவந்த பல சலுகைகள், வசதிகள் இவர்களுக்கு இல்லை. கடையில் வைக்கும் அடமானத்தைத் திரும்ப மீட்கும் அளவுக்குக்கூட வருவாய் இல்லை. குழந்தைகளைப் பகல் நேரக் காப்பகத்தில் சேர்க்கப் பணம் இல்லை. குழந்தைகளைக் கல்லூரியில் சேர்த்துப் படிக்கவைக்கவோ, மருத்துவக் காப்புறுதிக்கு உட்படுத்தவோ முடிவதில்லை. பதவியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு ஓய்வூதியத்துடன் நிம்மதியாக வாழ்நாளைக் கழிக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இப்போது பல குடும்பங்கள், கூடுதல் ஊட்டச்சத்து உணவுக்கு அரசு அளிக்கும் மானிய உதவியைப் பெறத் தொடங்கியிருக்கின்றன. இதற்கு ‘ஸ்னாப்’ என்று பெயர்.

இரு வித ஆபத்துகள்

2014-ல் 64% சட்டப் பட்டதாரிகளுக்கு மட்டும்தான் அவர்களுடைய படிப்புக்கேற்ற வேலை கிடைத்தது. 2013-ல் வேலையில்லாத் திண்டாட்டம் 11.2% ஆக இருந்தது. படிப்புக்கேற்ற வேலை கிடைக்காமல் அதைவிடக் கீழ்நிலையில் வேலை செய்வோரின் எண்ணிக்கை இதைவிட அதிகம். 1985-ல் 81% முழு நேர வேலைவாய்ப்பு பெற்றனர். அப்போது 7% மட்டுமே வேலையில்லாத் திண்டாட்டம் இருந்தது. பத்திரிகையாளர்களும் இப்போது பாதுகாப்பாக இல்லை. கடந்த மாதம் ‘டிரான்க்’ என்ற செய்தித்தாள் நிறுவனம் (டிரிப்யூன் பத்திரிகைக் குழுமத்துடையது) புகைப்பட நிருபர்கள், வழக்கமான நிருபர்களைவிட செயற்கை நுண்ணறிவு கொண்ட ரோபாட்டுகள் எப்படி நன்றாக வேலை செய்கின்றன என்று ஒரு காட்சி விளக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இது காட்சி விளக்கம் மட்டுமல்ல, இனி வரவிருக்கும் நடை முறைக்கான முன்னோடி என்று கலங்கியவர்கள் பலர்.

ஆலோசகர்கள் அதிகரிப்பு

செவிலியர்களும் இந்த வரிசையில் விரைவில் சேரவிருக்கின்றனர். கடுமையாக நோய்வாய்ப்பட்ட நோயாளியை அலாக்காகத் தூக்கி, மேசை மீது படுக்க வைத்து நாடித்துடிப்பு, இதயத்துடிப்பு, வெப்பநிலை, சர்க்கரை அளவு போன்றவற்றைச் சோதித்து மருத்துவருக்குத் தகவல் தரும் ரோபாட்டை உருவாக்க, ‘தேசிய அறிவியல் அறக்கட்டளை’ என்ற அமைப்பு லட்சக்கணக்கான டாலர்களைச் செலவிட்டு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறது. செவிலியர்கள் மட்டுமல்ல… ரோபாட் சர்ஜன்கள் (அறுவை சிகிச்சையாளர்கள்), ரோபாட் நிதிச் சேவை ஊழியர்கள், ரோபாட் ஆசிரியர்கள்கூடத் தயாராகிவருகின்றனர்.

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் வேலை இழப்பு, வருமான இழப்பு காரணமாக மன அழுத்தத்தில் ஆழ்கின்றனர். அவர்களுக்கு ஆறுதல் அளிக்கவும் மாற்று வழிகளைக் கூறவும் தொழில்முறை ஆலோசகர்கள் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. கோடிக்கணக்கானவர்கள் வேலையிழக்க அல்லது வருமானமிழக்க சில நூறு பேர் மட்டும் பகாசுர கோடீஸ்வரர்களாவதைத் தடுக்க நாம் என்ன செய்யப்போகிறோம்?

தமிழில்: சாரி,

© தி கார்டியன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x