ஆங்கிலம் உலகாளுமா? - வசந்தி தேவி

ஆங்கிலம் உலகாளுமா? - வசந்தி தேவி
Updated on
1 min read

ஆங்கிலம் உலகாளும் மொழியாக மகுடம் சூட்டப்பட்டது இரண்டாம் உலகப்போருக்குப் பின்தான். பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என்று கருதப்பட்ட காலத்தில், ஆங்கிலத்தின் வீச்சு இன்றளவு இருந்ததில்லை. ஸ்பானிய மொழியும் பிரெஞ்சு மொழியும் பெரும்பாலான நாடுகளின் முக்கிய மொழியாக இருந்தன. அமெரிக்கா உலக வல்லரசாக எழுந்ததும், இரண்டாம் உலகப் பெரும் போருக்குப் பின் ஐரோப்பாவின் வல்லமை மங்கியதும், ஆங்கிலம் உலக ஆதிக்க மொழியாக எழுந்தது. இதுவே சாசுவதம் என்பதற்கு எந்த அத்தாட்சியும் இல்லை. இன்று சீனாவின் எழுச்சி சர்வதேச வானில் அனைத்து நாடுகளுக்கும் பெரும் சவாலாகியிருக்கிறது. இது பொருளாதாரப் போட்டியில் மட்டு மல்ல; அதன் தாக்கம் மொழியிலும் தெரியத் தொடங்கியிருக்கிறது. இன்று கிழக்காசிய நாடுகளிலும், தென் கிழக்காசிய நாடுகளிலும் ஆங்கிலத்துக்கு இணையாக சீன மொழியைக் கற்கத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவிலேயே சீன மொழியைக் கற்க ஆர்வம் வளர்ந்துவருகிறது. ஒருவேளை சீன மொழி ஆதிக்க மொழியாக ஆகிவிட்டது என்றால், அப்போது தமிழை சீன வரிவடிவத்துக்கு மீண்டும் மாற்ற முயற்சிக்க வேண்டுமா?

இரண்டு வரிவடிவங்கள் பிரச்சினையே இல்லை

தமிழ்நாட்டுக் குழந்தைகளின் சுமைக்கும் தவிப்புக்கும் முக்கியமான பல காரணங்கள் உள்ளன. தாங்க முடியாத பாடத்திட்டச் சுமை, வசதிக்கேற்ற பள்ளி… கொடூரமான போட்டி உலகத்துக்குள் தள்ளப்பட்டு, போட்டியில் வெல்வதே வாழ்வின் குறிக்கோள் என்று போதிக்கப்பட்டு, அந்த வெற்றிக்காகக் குழந்தைப் பரு வத்தையே இழத்தல், பொருத்தமற்ற வகுப்பறைகள், தேர்ச்சி யற்ற ஆசிரியர்கள், கடப்பாடற்ற நிர்வாகம், மிகக் குறைந்த நிதி ஒதுக்கீடு என்று பட்டியலிட்டுக்கொண்டு போக லாம். அதில் இரண்டு வரிவடிவங்கள் கற்பது என்பது ஒரு பிரச்சினையா என்ற கேள்வி பிறப்பது இயற்கை.

மொழியூட்டம்

இன்று பன்மொழிக் கொள்கை என்பது பல நாடுகளில் வரவேற்பு பெற்றிருக்கிறது. மொழி வல்லுநர் ஒருவர் சொல்கிறார், ‘பல மொழிகளைக் கற்பதற்கான திறன்தான் மனிதர்களுக்கு இயல்பிலேயே படிந்திருக்கிறது.’ இந்தக் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்று அமெரிக்காவில் பல பள்ளிகளில் ‘மொழியூட்டச் செயல்திட்டம்’என்பது சிறப்பாக நடந்துகொண்டிருக்கிறது. அதில் குழந்தைகள் ஒரே சமயத்தில் இரு மொழி வழியாகக் கற்கின்றனர். ஒவ்வொரு பாடத்திலும் சில அத்தியா யங்களை ஆங்கிலத்திலும், சிலவற்றை வேறொரு மொழி வாயிலாகவும் கற்கின்றனர். ஆகவே, நமது குழந்தைகள் இரு வரிவடிவங்களில் கற்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்களே என்று கவலைப்பட வேண்டியதில்லை. புரியாத ஆங்கிலத்தில் கற்றுக் கல்வியின் மகத்துவத்தை இழக்கின்றனரே என்பது தான் பன்மடங்கு கவலை அளிக்கும் வேதனை!

- வசந்தி தேவி, கல்வியாளர், தொடர்புக்கு: vasanthideviv@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in