Last Updated : 09 Aug, 2016 09:47 AM

 

Published : 09 Aug 2016 09:47 AM
Last Updated : 09 Aug 2016 09:47 AM

மாணவர் ஓரம்: கொசுக்களை ஒழிக்கும் கொசுக்கள்

பெண் கொசுக்கள் மட்டும்தானே மனிதர்களைக் கடிக்கிறது. அமெரிக்கா உருவாக்கியுள்ள மரபணு மாற்றப்பட்ட கொசு, பெண் கொசுக்களை மட்டும் அழிக்கும். குட்டிக் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் அளவுக்குப் பெரிதாகும்போது அவற்றையும் அழித்துவிடும்.

கொசுவை ஒழிப்பதற்குத்தான் ஒவ்வொரு நாடும் எவ்வளவு செலவு செய்கிறது? ராணுவத்துக்குச் செலவாவதை மிஞ்சிவிடும்போல. கழிவுநீர் அகற்றம், கொசு மருந்து அடித்தல் என்று அரசுகள் செலவிடுகின்றன. கொசுவத்திச் சுருள், ஜன்னல் முதல் படுக்கை வரை கொசுவலை என்று மக்களும் தனியாகச் செலவு செய்கிறார்கள். ஆனாலும், கொசுத் தொல்லையை ஒழிக்க முடியவில்லை. அமெரிக்காவில் புதுமையாக யோசிக்கிறார்கள். அமெரிக்கக் கொசு ஒழிப்பு சங்கமும், உணவு மற்றும் மருந்துக் கழகமும் மாற்று வழியை யோசித்துள்ளன. கொசுக்களின் மரபணுக்களை மாற்றியமைத்து, ஒரு தற்கொலைப் படையையே உருவாக்கப்போகிறார்கள். டெங்கு, ஜிகா போன்ற கொடிய நோய்களைப் பரப்பும் குறிப்பிட்ட கொசுக்களை (ஏடிஸ் ஏகிப்தி) குறிபார்த்து அழிக்கப்போகிறார்கள். இந்தப் பொறுப்பு ஆக்ஸிடெக் (Oxitec) எனும் உயிரிதொழில்நுட்ப நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பெண் கொசுக்கள் மட்டும்தானே மனிதர்களைக் கடிக்கிறது. இவர்கள் உருவாக்கியுள்ள மரபணு மாற்றப்பட்ட கொசு, பெண் கொசுக்களை மட்டும் அழிக்கும். குட்டிக் கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் அளவுக்குப் பெரிதாகும்போது அவற்றையும் அழித்துவிடும்.நோய்த்தடுப்பு மற்றும் கொசு இனப்பெருக்கத் தடுப்பு என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அனுமதி அளித்துவிட்டது. இத்திட்டம் சோதனை அடிப்படையில் ஃப்ளோரிடா மாகாணத்தில் நிறைவேற்றப்பட உள்ளது. அந்த மாகாண அரசு நிர்வாகம், ‘இந்தப் புதிய முறையால் பின்விளைவுகள் ஏதுமில்லை’ என்று சான்றிதழ் அளிக்க வேண்டும். அது மட்டும் கிடைத்துவிட்டால் தற்கொலைப் படையைப் போல இந்தக் கொசுக்கள் களமிறங்கிவிடும்.

இந்தியாவிலும் கொசுக்கள் ஜப்பானிய மூளைக்காய்ச்சல், டெங்கு, மலேரியா, யானைக்கால்நோய் ஆகிய மோசமான வியாதிகளைப் பரப்பு கின்றன. மத்திய மருத்துவப் பூச்சியியல் துறையின் கணக்குப்படி, உலகில் உள்ள யானைக்கால் நோயாளிகளில் 41% பேர்கள் இந்தியர்கள். டெங்கு காய்ச்சலால் மோசமாகப் பாதிக்கப்படும் ஏழு நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

அமெரிக்கத் தற்கொலைப்படைக் கொசுக்கள் இந்தியா பக்கம் பறந்துவரும்வரை நாம் காத்திருக்கத்தான் வேண்டுமா?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x