Last Updated : 06 Jul, 2016 09:20 AM

 

Published : 06 Jul 2016 09:20 AM
Last Updated : 06 Jul 2016 09:20 AM

மறைவு தரும் நிச்சயமின்மை!

நாகாலாந்து மக்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய போராளியாக வாழ்ந்தவர் ஐசக் சிஷி சூ

நாகா மக்களின் அன்புக்கும் மதிப்புக்கும் உரியவரான, சுமி நாகா இனத்தைச் சேர்ந்த ஐசக் சிஷி சூ, டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜூன் 28-ல் மறைந்தார். ‘நாகாலாந்து தேசிய சோஷலிச கவுன்சில் - ஐசக் முய்வா’(என்.எஸ்.சி.என். - ஐ.எம்.) அமைப்பு மற்றும் அந்த அமைப்பு நடத்தும் போட்டி அரசாங்கமான ஜி.பி.ஆர்.என். ஆகியவற்றின் தலைவராக இருந்த ஐசக் சிஷி சூவின் மறைவு, ஒருகாலத்தில் தலைமறைவு இயக்கமாக இருந்து, 1987 முதல் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கும் அந்த அமைப்பின் புதிய அத்தியாயத்தையும், அதேசமயம் அதன் நிச்சயமற்ற நிலையையும் உருவாக்கியிருக்கிறது.

இறுதி ஆசை

ஓராண்டுக்கும் மேலாக மரணப் படுக்கையில் இருந்த ஐசக் சிஷி சூ இறப்பதற்கு முன்பாக, 2015 ஆகஸ்ட் 3-ல், டெல்லியில் பிரதமரின் இல்லத்தில், பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரின் முன்னிலையில், என்.எஸ்.சி.என்.(ஐ.எம்.) அமைப்பின் பொதுச் செயலாளர் துய்ங்கலேங் முய்வாவுக்கும் மத்திய அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே ‘அமைதி ஒப்பந்தம்’ கையெழுத்தானது. நாகா மக்களின் போராட்டத்தின் பலனாக, தனது இறுதி மூச்சுக்கு முன்னர் அவர் பார்க்க விரும்பிய விஷயம் அது. அவசர அவசரமாகக் கையெழுத்தான அந்த ஒப்பந்தம், ஒப்பந்தத்துக்கான அடிப்படைக் கட்டமைப்புதான் என்று பின்னாளில் விளக்கமளிக்கப்பட்டது. இதில் குரூர முரண்நகை என்னவென்றால், இந்த ஒப்பந்தத்துக்கான அடிப்படைக் கட்டமைப்பு மூலம் உறுதியான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

1950-களில் நாகா தேசிய கவுன்சில் (எம்.என்.சி.) நடத்திய நாகா போராட்டங்களில் பங்கேற்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களில் ஒருவரான ஐசக் சிஷி சூ, அந்த அமைப்பின் வெளியுறவுச் செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். துய்ங்கலேங் முய்வா, எஸ்.எஸ்.கப்லாங்குடன் இணைந்து என்.எஸ்.சி.என். அமைப்பை 1980-ல் உருவாக்கினார். 1975-ல் ‘ஷில்லாங் ஒப்பந்த’த்தின்படி ஆயுதங்களைக் கைவிட்டு அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட என்.என்.சி. ஒப்புக்கொண்ட நிலையில், அந்த ஒப்பந்தத்தை எதிர்த்து என்.எஸ்.சி.என். அமைப்பு தொடங்கப்பட்டது. 1988-ல் அந்த அமைப்பு இரண்டாக உடைந்தபோது என்.எஸ்.சி.என்.(ஐ.எம்.) அமைப்பை முய்வாவுடன் இணைந்து ஐசக் சிஷி சூ தொடங்கினார். கப்லாங் தலைமையில் என்.எஸ்.சி.என்.(கே) உருவாக்கப்பட்டது.

தார்மிக வழிகாட்டி

அதேசமயம், ஐசக் சிஷி சூவின் மறைவு, பேச்சுவார்த்தையைத் தடம்புரளச் செய்துவிடாது என்பது உண்மை. உண்மையில், பேச்சுவார்த்தையில் முழுமூச்சுடன் அவர் ஈடுபடவில்லை. இதற்கு அவரது உடல்நிலை முக்கியமான காரணம் என்றாலும், அமைப்பின் அரசியல் நடவடிக்கைகள் மற்றும் வியூகங்களைப் பொறுத்தவரை உண்மையான தலைவர் முய்வாதான். அமைப்பின் தார்மிக வழிகாட்டியாகவே ஐசக் சிஷி சூ இருந்தார்.

1985-ன் தொடக்கத்தில், நாகாலாந்துக்குச் சென்றிருந்த ஸ்வீடனைச் சேர்ந்த பத்திரிகையாளர் பெர்ட்டில் லிண்ட்னெர், மோன் மாவட்டத்திலிருந்து அண்டை நாடான மியான்மருக்குள் நுழைந்துவிட்டார். மியான்மர் எல்லைக்குள் உள்ள கெசான் சன்லாம் கிராமத்தில் முகாமிட்டிருந்த ஐசக் சிஷி சூவையும், முய்வாவையும் சந்தித்த அவர், அவர்களுக்கு இடையில் இருந்த இந்த வேறுபாட்டை உணர்ந்தார். 1990-ல் அவர் எழுதிய ‘லேண்ட் ஆஃப் ஜேட்: எ ஜர்னி த்ரூ இன்சர்ஜெண்ட் பர்மா’ எனும் நூலில் இருவரையும் பற்றி எழுதியிருக்கிறார். ஐசக் சிஷி சூ தீவிர மதப்பற்று கொண்டிருந்தார் என்றும், மியான்மரின் பிற்படுத்தப்பட்ட நாகா மக்களை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றுவதில் அதிக ஈடுபாடு காட்டினார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அவர் சரியாக அனுமானித்ததைப் போல், முய்வாதான் அந்த அமைப்பின் அரசியல் மூளையாகவும் உண்மையான தலைவராகவும் இருந்தார்.

கல்விப் புலமும் மேம்பட்ட வாழ்க்கைப் பின்னணியும் கொண்ட இந்தியத் தரப்பு நாகா மக்களுக்கும், வெளியுலகத்துடன் அவ்வளவாகத் தொடர்புகொண்டிராத மியான்மர் பகுதி நாகாக்களுக்கும் இடையில் ஒரு பிளவு ஏற்பட்டிருந்ததையும் லிண்ட்னெர் கவனித்திருந்தார். 1988-ல் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கல்விப் பின்புலம் இல்லாத அதேசமயம் நல்ல போர்ப் பயிற்சி கொண்ட மியான்மர் நாகாக்களான கப்லாங் மற்றும் அவரது ஆதரவாளர்கள், முய்வா குழு மீது தாக்குதல்களை நடத்தி, அந்தப் பகுதியிலிருந்து அவர்களை வெளியேற்றினர். இது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றாலும், இரு தரப்புக்கும் இடையிலான கருத்து வேறுபாடு முற்றியது மட்டும் இதற்குக் காரணமில்லை. மாசே துங்கின் மறைவுக்குப் பின்னர், நாகா கிளர்ச்சியாளர்களுக்கு அடைக்கலமும் நிதியுதவியும் தரும் விஷயத்தில் சீனாவின் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து உருவான நிதி நெருக்கடியும் ஒரு காரணம் என்று லிண்ட்னெர் குறிப்பிட்டிருக்கிறார்.

சீனா செய்த ‘உதவி'

1960-களில், குறிப்பாக, தலாய் லாமா இந்தியாவுக்கு வந்த நிகழ்வு மற்றும் 1962-ல் நடந்த இந்தியா - சீனா போர் ஆகியவற்றுக்குப் பிறகு, நாகா மற்றும் வட கிழக்குப் பகுதி கிளர்ச்சியாளர்களுக்குச் சீனா அழைப்புவிடுத்தது. 1966-67-ல் சீனாவின் யுன்னான் மாகாணத்துக்கு முய்வா தலைமையிலான நாகா கிளர்ச்சிப் படைகள் முதலில் சென்றன. இரண்டாவதாகச் சென்ற படைக்கு ஐசக் சிஷி சூ தலைமை தாங்கினார். அமைப்பின் தார்மிக வழிகாட்டியாகவே ஐசக் சிஷி சூ இருந்தார் என்றாலும், அவரது மறைவு வேறு வகையில் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. அவருக்குப் பின்னர், தலைவராகப் பொறுப்பேற்கப்போவது யார் என்பதைப் பொறுத்து, இனி அமைப்பின் எதிர்காலம் இருக்கும். கப்லாங்குடன் நீண்ட காலமாகப் பணியாற்றியவரும், அமைப்பின் துணைத் தலைவருமான கோலே கோன்யாக்தான் இயல்பான தேர்வு என்று எதிர்பார்க்கப்படுகிறது. கப்லாங்கின் அமைப்பில் இருந்த கோலே கோன்யாக், 2011-ல் அதிலிருந்து வெளியேறி, கிடோவி ஷிமோமி எனும் மற்றொரு தலைவருடன் இணைந்து என்.எஸ்.சி.என்.(யுனிஃபிகேஷன்) அமைப்பைத் தொடங்கினார். பின்னர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அந்த அமைப்பிலிருந்து விலகி என்.எஸ்.சி.என்.(ஐ.எம்.) அமைப்பில் சேர்ந்தார்.

அமைப்பிலிருந்து விலகுவது, புதிய அமைப்பைத் தொடங்குவது என்றிருக்கும் கோலே கோன்யாக்கின் நடவடிக்கைகளின் பின்னணியில், உளவு அமைப்புகள் இருப்பதாக அவர் முன்பு இடம்பெற்றிருந்த அமைப்புகள் குற்றம்சாட்டியிருக்கின்றன. உண்மையில், இந்திய நாகா கிளர்ச்சியாளர்களிடம் மட்டும் உடன்பாடு வைத்துக்கொள்வதற்கு வசதியாக, மியான்மர் நாகா கிளர்ச்சியாளர்களிடமிருந்து அவர்களைப் பிரிக்கும் வேலைகளில் இந்திய உளவு அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. அமைதிப் பேச்சுவார்த்தையில் பிற குழுக்கள் இடம்பெறக் கூடாது என்று என்.எஸ்.சி.என்.(ஐ.எம்.) விரும்பியதாலும் இந்நடவடிக்கையை இந்திய உளவு அமைப்புகள் மேற்கொள்கின்றன. மத்திய அரசுடன் கடந்த 2001-லிருந்து மேற்கொண்டிருந்த போர் நிறுத்தத்தைக் கடந்த ஆண்டு ரத்து செய்த கப்லாங் தலைமையிலான என்.எஸ்.சி.என்.(கே) அமைப்பு, கடந்த ஆண்டு ஜூன் 4-ல் மணிப்பூரின் சண்டேல் மாவட்டத்தில் டோக்ரா ரெஜிமெண்ட் படையினர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் டோக்ரா ரெஜிமெண்ட்டைச் சேர்ந்த 18 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

அமைப்பின் எதிர்காலம்

1950-களில் நாகா இயக்கத்தில் சேர்ந்த கோலே கோன்யாக், ஐசக் சிஷி சூவின் தலைமுறையைச் சேர்ந்தவர். மத்திய அரசுடன் நடந்துவரும் பேச்சுவார்த்தைகளில் அவரால் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியாது என்றே கருதப்படுகிறது. மேலும், நாகாலாந்தைச் சேர்ந்த பிற நாகாக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும் அளவுக்கு அவரிடம் அதிகாரம் இருக்குமா என்பது மற்றொரு கேள்வி. ஐசக் சிஷி சூ, அமைப்பில் கணிசமான எண்ணிக்கையில் உள்ள சுமி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். நாகாலாந்தில் அந்த அமைப்புக்குக் கணிசமான செல்வாக்கு இருப்பதற்கு அதுவும் ஒரு காரணம்.

ஐசக் சிஷி சூவின் மறைவுக்குப் பின்னர், அமைப்பில் சுமி இனத்தவரின் ஈடுபாடு குறைந்துவிடுமோ என்ற கவலை முய்வாவுக்கு இருக்கலாம். நாகாலாந்தில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள கோன்யாக் பழங்குடியினத்தைச் சேர்ந்த கோலே, தனது இன மக்களிடமே செல்வாக்கு செலுத்துவாரா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. ஐசக் சிஷி சூவின் மறைவால் நாகாலாந்தில் அந்த அமைப்பின் செல்வாக்கு மேலும் குறையும் வாய்ப்பு இருக்கிறது. ஏற்கெனவே, அமைப்பின் ஒவ்வொரு படிநிலையிலும் மணிப்பூர் நாகா மக்களின் ஆதிக்கம், குறிப்பாக தாங்குல் இனத்தவரின் ஆதிக்கம் இருப்பது, நாகாலாந்தைச் சேர்ந்த நாகா மக்களிடம் அந்த அமைப்பின் மீதான நம்பிக்கை குறைந்துவருவதற்குக் காரணமாகிறது.

இந்த காரணிகள் அனைத்தும், தற்போது நடந்துவரும் பேச்சுவார்த்தைகளில் தடைகளை ஏற்படுத்தும் என்றும் கருதப்படுகிறது.

-பிரதீப் ஃபான்ஜவுபம், ‘இம்பால் ஃப்ரீ பிரெஸ்’ இதழின் ஆசிரியர்,

‘தி இந்து’ (ஆங்கிலம்), தமிழில்: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x