Last Updated : 30 Jun, 2016 10:38 AM

 

Published : 30 Jun 2016 10:38 AM
Last Updated : 30 Jun 2016 10:38 AM

மாணவர் ஓரம்: பாசக்கார குரங்குகள்!

மனிதர்களுக்கு மிக நெருக்கமானவை குரங்குகள். மனிதர்கள் தொட்டது தொண்ணூறுக்கும் கவலையை வெளிப்படுத்து கிறோமே, அதே போல, குரங்குகளும் கவலைகளை வெளிப்படுத்துகின்றனவா? - இப்படி ஒரு ஆராய்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது ஆய்வு உலகத்தில்!

ஆய்வு முடிவுகள் என்ன சொல்கின்றன?

சீனப் பல்கலைக்கழகம் ஒன்று 130 தங்கமூக்குக் குரங்குகளின் குணாதிசயங்களை ஆய்வுசெய்தது, 10 வருடங்களாக. இந்தக் குரங்குகள் பெண்களின் கூட்டமாக வாழும். ஒரு பெண்கள் கூட்டத்துக்கு ஒரு ஆண் குரங்குதான். இப்படி ஒரு கூட்டத்திலிருந்து ஒரு ஆண் குரங்கு விலகினால், பின் அது தனக்கென ஒரு பெண் கூட்டத்தை உருவாக்கிக்கொள்ளும். இப்படியான கூட்டங்களில், ஒரு பெண் குரங்கு எங்காவது தவறிச் சென்று மீண்டு வரும்போது ஏனைய குரங்குகள் என்ன செய்கின்றன என்று ஆய்வாளர்கள் பார்த்தார்கள். பிரிந்து, மீண்டும் வந்து சேர்ந்த குரங்கு தனியே ஒரு ஓரமாகச் சென்று பாவமாக அமர்ந்துகொள்ள, ஏனைய குரங்குகள் அதைச் சுற்றிச் சுற்றி ஆறுதல் கூறியிருக்கின்றன. கிட்டத்தட்ட மூன்று நாட்கள் மாற்றி மாற்றித் தேற்றி அந்தக் குரங்கை மீண்டும் அதன் பழைய நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றன.

மொராக்கோவிலும் இப்படி ஒரு ஆராய்ச்சி நடந்திருக்கிறது. மேரி என்ற குரங்கு காரில் அடிபட்டுக் கிடந்தபோது, ஏனைய குரங்குகள் ஓடோடி வந்து அதன் உடம்பைச் சுற்றிச் சுற்றி வந்து பார்த்திருக்கின்றன. காயத்தைத் தொட்டு, சுற்றிலும் தடவிக்கொடுத்து, ஆறுதல் சொல்லியிருக்கின்றன. மறுநாள் அது இறந்த போது, ஏனைய குரங்குகள் கொஞ்ச நேரத்தில் அங்கிருந்து அகன்றிருக்கின்றன. ஆனால், அதன் ஜோடிக் குரங்கு மட்டும் அதன் அருகிலேயே நீண்ட நேரம் உட்கார்ந்திருந்திருக்கிறது. உணவைத் துறந்திருக்கிறது. மேரியின் உடலை அப்புறப்படுத்த முயன்றவர்களை எதிர்த்திருக்கிறது.

பார்மரி மாக்குயுஸ் வகைக் குரங்கு களும் இப்படித் தன் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் இறக்கும்போது உணர்ச் சிகளை வெளிப்படுத்து கின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். தாமஸ் எனும் சிம்பன்ஸிக் குரங்கு இறந்தபோது, ஏனைய குரங்குகள் தாமஸின் உடலைச் சுற்றிச் சுற்றி வந்ததோடு, உணவையும் மறந்திருக்கின்றன. ஜப்பானில் உள்ள மக்காகுயிஸ் குரங்குகள் 24 ஆண்டுகளாக ஆய்வு செய்யப்படுகின்றன. 157 சம்பவங்களில் இறந்த குட்டியைத் தாயே தூக்கிச் சுமந்திருக்கிறது. ஒரு தாய்க் குரங்கு 17 நாட்கள் இப்படி குட்டியின் உடலுடன் திரிந்ததாம்.

குரங்குகள் கவலைப்படுவதைத் தாண்டி ஆராய்ச்சி யில் இன்னொன்றும் தெரியவந்திருக்கிறது. குழுவாகக் கூடி வாழ்வது பல சமயங்களில் கொடிய விலங்குகளிடமிருந்து பாதுகாக்கிறது என்பதே அது. இது நமக்குத் தேவையான ஒரு விஷயம்தான்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x