Last Updated : 18 Jul, 2016 09:44 AM

 

Published : 18 Jul 2016 09:44 AM
Last Updated : 18 Jul 2016 09:44 AM

காஷ்மீரின் குரலுக்குக் காதுகொடுங்கள்!

காஷ்மீர் போராளி புர்ஹான் வானி கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் ஏற்பட்ட கொந்தளிப்பு, சமீபகாலமாகவே நிகழ்வதற்காகக் காத்திருந்த ஒன்றுதான். காஷ்மீர் மண்ணில் உருவெடுத்து வளர்ந்த கிளர்ச்சி மீண்டும் நிகழும் என்றும், இந்த முறை மத அடிப்படையிலான தீவிரவாதம் அதற்கு ஒரு வினையூக்கியாக இருக்கும் என்றும் தெளிவான சமிக்ஞைகள் தென்பட்டன. காஷ்மீரில் அதிகாரப் போட்டியில் தீவிரமாக இருந்த பாஜக தலைமையிலான மத்திய அரசு, இந்த சமிக்ஞைகளைப் பொருட்படுத்தவில்லை. சொன்னாலும் கேட்கத் தயாராக இல்லை.

பாஜக ஆட்சியதிகாரத்துக்கு வந்தால் நிலைமை சரியாக இருக்காது என்று காஷ்மீர் மக்கள் ஏற்கெனவே உணர்ந்திருந்தனர். எனவே, பெரும்பான்மையான காஷ்மீர் மக்கள் அக்கட்சிக்கு எதிராகவே வாக்களித்தனர். ஆனால், பாஜக தரப்பு காட்டிய நம்பிக்கை வார்த்தைகளை நம்பி, அக்கட்சியுடன் ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ கூட்டணி வைத்துக்கொண்டது, காஷ்மீரிகளுக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது. அதிலிருந்து மக்கள் ஜனநாயகக் கட்சி மவுனமாகிவிட்டது. நம்பிக்கை தரும் அரசியல் செயல்திட்டம் என்று சொல்லப்பட்ட கூட்டணி உடன்படிக்கை காற்றில் பறக்கவிடப்பட்டது. பாகிஸ்தானின் தூண்டுதல், அதிருப்தியடைந்திருக்கும் காஷ்மீர் மக்களிடம் தென்படும் அவநம்பிக்கை - பதற்றம், நெருப்புடன் விளையாடும் மத்திய அரசின் போக்கு ஆகியவற்றைப் பார்க்கும்போது, காஷ்மீரில் கிளர்ச்சி உச்சமடையும் தருணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்றே தோன்றுகிறது.

பாதியில் முடிந்த பயணம்

பத்தாண்டுகளுக்கு முன்னர், காஷ்மீர் கிளர்ச்சிக்கு முடிவுகட்டும் சூழல் உருவாகியிருந்தது. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுடன், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் ஆக்கபூர்வமான ராஜதந்திரம் உச்சத்தில் இருந்த சமயம் அது. ‘காஷ்மீர் திட்டம்’ என்கிற அளவில், காஷ்மீர் பிரிவினைவாதக் குழுக்களுடன்கூட மத்திய அரசின் பிரதிநிதிகள் பேச்சு நடத்திக்கொண்டிருந்தனர். சையது அலி ஷா ஜீலானியைத் தவிர, மற்ற அனைத்து காஷ்மீர் தலைவர்களும் அதை ஏற்றுக்கொண்டுவிட்டதாகக்கூட ஒரு பேச்சு இருந்தது. பாகிஸ்தான் தரப்பு இந்த முயற்சியை ஆதரித்தது மட்டுமல்லாமல், காஷ்மீரில் உள்ள எதிர்ப்பாளர்களிடம் பேசி அவர்களை ஒப்புக்கொள்ள வைக்கும் முயற்சியிலும் இறங்கியிருந்தது.

காஷ்மீர் தலைவர்களுடன் வெளிப்படையாகவும் தனிப்பட்ட வகையிலும் மன்மோகன் சிங் தொடர்ந்து ஆலோசித்துவந்தார். ஆனால், இவ்விவகாரத்தில் தர்க்க அடிப்படையிலான முடிவுக்கு வழிகாணும் முயற்சியின்போது, 2007-ன் மத்தியில் அவரது அரசியல் செல்வாக்கில் சரிவு ஏற்பட்டது. அதே காலகட்டத்தில், பாகிஸ்தான் வழக்கறிஞர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து அதிபர் பர்வேஸ் முஷாரஃப் ஆதரவை இழந்திருந்தார். விளைவாக, காஷ்மீர் பேச்சுவார்த்தை சீர்குலைந்தது.

2010-ல் காஷ்மீர் போலீஸார் மற்றும் மத்தியப் படைகளால் 120 காஷ்மீரிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான மனநிலை அங்கு மீண்டும் வளரத் தொடங்கியது. மேலும், 2013-ல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் ஆட்சியில், அஃப்சல் குரு அவசர அவசரமாகத் தூக்கிலிடப்பட்ட சம்பவம், காஷ்மீரில் புதிய கிளர்ச்சிகளுக்கு விதை தூவியது. இவையெல்லாம், 2004-ல் காஷ்மீர் எல்லையில் வேலி அமைக்கப்பட்ட பின்னர், பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளின் ஊடுருவல் முன்னெப்போதையும்விடக் குறைந் திருந்த சமயத்தில் நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத் தக்கது.

பரவும் கோபம்

இதன் விளைவாக, படித்தவர்கள், ஆயுதம் தாங்கியவர் கள், மதப் பற்றும் தீவிரக் கொள்கையும் கொண்டவர்கள் என்று பல தரப்பைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் காஷ்மீரில் உருவாகத்தொடங்கினார்கள். மேலும், 1990-களில் காஷ்மீரில் நடந்த போராட்டங்களுக்குப் பிறகு, இன்றைக்கு அம்மாநிலத்தின் பொதுச் சமூகத்தினரும், படித்தவர்களும் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபடும் போக்கு அதிகரித்திருக்கிறது. அந்த மாற்றத்துக்கு உதாரணம், புர்ஹான் வானியின் தந்தை. தனது மகனின் செயல்பாடுகள் நியாயமானவை என்று நம்புகிறார்அவர்.

வன்முறை, துப்பாக்கிக் கலாச்சாரத்தால் துவண்டுபோயிருந்த ஒரு சமூகம், திடீரென்று அவற்றை நியாயப்படுத்தத் தொடங்கியிருக்கிறது. இன்றைக்குக் காஷ்மீரின் குறுகிய சந்துகளிலும், சிறு நகரங்களிலும் கூடி ‘ஆஜாதி’ முழக்கமிடுவதிலும், கல்லெறிவதிலும், உயிரையே தியாகம் செய்யத் தயார் நிலையிலும் இருக்கும் இளைஞர்களிடம் மிதவாத ஹூரியத் பிரிவைச் சேர்ந்தவர்களால்கூடப் பேச முடியாத நிலை இருக்கிறது.

காஷ்மீரில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகப் போராட்டங்களைப் பார்த்துவந்தாலும், இவ்வரலாற்றி லிருந்து எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை மத்திய அரசு. 1950 முதல் இந்திய அரசியல் மைய நீரோட்டத்திலிருந்து காஷ்மீரிகளைக் காங்கிரஸ் தனிமைப் படுத்திவந்தது அதன் அதிகாரத்தின் மீதான பேராசை என்றால், தற்போது பாஜக செய்வதும் அதைத்தான்!

நீதிமன்றம் வைத்த குட்டு

புர்ஹான் வானி கொல்லப்பட்ட அதே நாளில், மணிப்பூரில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவருவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. காஷ்மீரில், கொடூரமான இந்தச் சட்டம் குறித்து மறுபரிசீலனை செய்யலாம் என்று கூட்டணி உடன்பாட்டில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தும், அது தொடர்பான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் பாஜக கண்ணாமூச்சி ஆடிவரும் சூழலில், இந்த விமர்சனம் வைக்கப்பட்டிருக்கிறது. மணிப்பூரில் போர்க்காலச் சூழல் நிலவுவதாக மத்திய அரசு முன்வைத்த வாதத்தைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், அம்மாநிலத்தில் உள்நாட்டுக் கலவரம்தான் நிலவுகிறது என்று குறிப்பிட்டது. நீதிமன்றத்தின் இந்தக் கருத்து, காஷ்மீர் விவகாரத்தை மத்திய அரசு கையாளும் விதத்திலும், ஆயுதப்படை சிறப்புச் சட்டம் போன்ற கொடூரச் சட்டங்கள் தொடர்பான விவாதத்திலும் பெரும் தாக்கம் செலுத்தக்கூடியது.

‘காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான அங்கம்’ என்று அவ்வப்போது அறிக்கை விடுவது மட்டும் போதாது. காஷ்மீரிகளின் மனித உரிமைகள், அரசியல் உரிமைகளை மதிக்க வேண்டும். அரசியல் சட்டத்தின் 370-வது பிரிவு தரும் அரசியல் சாசன உத்தரவாதங்களைப் பறிக்கக் கூடாது. உண்மையில், ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மற்றும் 370-வது சட்டப் பிரிவு குறித்து வெவ்வேறு தருணங்களில் போதுமான அளவில் தனது கருத்துகளை உச்ச நீதிமன்றம் வெளியிட்டிருக்கிறது. நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதுபோல், ஒவ்வொரு மனித உயிரும் முக்கியமானது. எனவே, சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் அனுமதிக்கப்படக் கூடாது.

நிறைவேறா நம்பிக்கைகள்

காஷ்மீரில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால்தான் அரசும், அரசியல் வர்க்கமும் தீர்வுகளைப் பற்றிப் பேசத் தொடங்குகின்றன. அமைதி திரும்ப வேண்டும் என்று பேசுகிறார்கள். அனைத்துக் கட்சி உறுப்பினர்களை காஷ்மீருக்கு அனுப்புகிறார்கள். நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கிறார்கள்.

ஆனால் பிரச்சினை ஓய்ந்த பின்னர், வாக்குறுதிகள் மறக்கடிக்கப்படுகின்றன. சமாதானக் குழுக்கள் வழக்கம்போலப் புறக்கணிக்கப்படுகின்றன. உண்மையில், காஷ்மீரில் அமைதி திரும்ப வேண்டும் என்று நினைத்தால், நீடித்த அரசியல் தீர்வுகளைப் பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும். மத்திய அரசு மேலும் காத்திருந்தால், பேச்சுவார்த்தைக்கு வருவதில் காஷ்மீர் போராட்டக்காரர்களின் ஆர்வம் குறைந்துவிடும். உண்மையில், 10 ஆண்டுகளுக்கு முன்னர் பேச்சுவார்த்தைக்கு ஏற்ற சூழல் இருந்தது.

இதுபோன்ற கடினமான சூழலில், கடினமான முடிவுகள் எடுக்கும் அளவுக்கு அரசியல் வர்க்கத்துக்குத் துணிச்சல் வேண்டும். காஷ்மீரில் அமைதி திரும்புவதற்கான யோசனைகள் சில: ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் (அல்லது) குறைந்தபட்சம் அதில் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்; அரசியல் கைதிகளை விடுதலை செய்யலாம். காஷ்மீரில் நடந்த சட்டத்துக்குப் புறம்பான கொலைகள் தொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிடலாம்; மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணியின் வாக்குறுதியின்படி, இவ்விவகாரத்துக்குத் தீர்வு காண்பது தொடர்பாகப் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம். நாகா கிளர்ச்சியாளர்களுடன் ஒரு அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்த முடியும் என்றால், தேசப் பாதுகாப்புடன் அதிகத் தொடர்புகொண்ட காஷ்மீருடன் ஏன் முடியாது?

இந்தப் போராட்டம் இப்போதைக்கு முடிவுக்கு வரலாம். ஆனால், காஷ்மீர் பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. அது கனன்றுகொண்டே இருக்கும். சந்தர்ப்பம் கிடைக்கும்போது வெடிக்கும். காஷ்மீர் பயங்கரவாதத்தில் மூழ்கியிருக்கும் சமயத்தில், ஐஎஸ் அமைப்பு சந்தர்ப்பம் வேண்டி காத்திருக்கும் சமயத்தில், உள்நாட்டுக் கிளர்ச்சிகளுக்குத் தீர்வு காணவில்லையென்றால் விளைவை இந்தியாவால் தாங்க முடியாது.

பிரச்சினை என்று வந்தால், ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொள்ளும் தேசியக் குணத்தையும் நாம் கைவிட வேண்டும். தவறுகளை ஒப்புக்கொள்ள வேண்டும்.

இறுதியாக, காஷ்மீர் மக்களுடன் இந்த தேசமும் மக்களும் முன்முடிவுகளற்ற, வெளிப்படையான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். ஆனால் அரசியல், வரலாறு தொடர்பான புரிதலோ அடிப்படை நாகரிகமோ இல்லாமல் அலறும் சில தொலைக்காட்சித் தொகுப்பாளர்களின் நிகழ்ச்சிகள் வழியாக அல்ல!

- ஹேப்பிமோன் ஜேக்கப், சர்வதேச ஆய்வுகள் துறைப் பேராசிரியர், ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம், டெல்லி.

‘தி இந்து’ (ஆங்கிலம்).

தமிழில் சுருக்கமாக: வெ.சந்திரமோகன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x