Last Updated : 08 Sep, 2016 09:23 AM

 

Published : 08 Sep 2016 09:23 AM
Last Updated : 08 Sep 2016 09:23 AM

சிங்குர் நில மீட்பு: மம்தாவுக்குக் கிடைத்த நிம்மதி!

மேற்கு வங்கத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது முன்னணி அரசு கையகப்படுத்திய விவசாய நிலத்தை, பத்து வருடங்களுக்குப் பின் திரும்ப ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டுள்ளது. இது திரிணமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜிக்குக் கிடைத்துள்ள இரண்டாவது வெற்றியாகக் கருதப்படுகிறது.

வங்கத்தின் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள சிங்குரில், ‘டாடா மோட்டார்ஸ் லிமிடெட்’ நிறுவனம், ‘நானோ’ கார் தொழிற்சாலையை நிறுவத் திட்டமிட்டது. இதற்காக, கடந்த 2006-ல் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையிலான அரசு 997.17 ஏக்கர் விவசாய நிலத்தை, ‘மத்திய நில கையகப்படுத்தும் சட்டம் 1894-ன்’ கீழ் கையகப்படுத்தி டாடாவுக்கு அளித்தது.

‘விவசாய நிலத்தைப் பறித்து தொழிலதிபருக்கு வழங்குவதா?’ என்று போராட்டத்தில் குதித்தனர் விவசாயிகள். இவர்களுக்கு ஆதரவாக அருந்ததி ராய், அனுராதா தல்வார், மஹாஸ்வேதா தேவி, அபர்ணா சென் மற்றும் ருச்சித் ஷா உள்ளிட்டோர் களமிறங்கினர். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸ், இந்த அரிய வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்திக்கொண்டது. அதன் தலைவி மம்தா பானர்ஜி 28 நாள் உண்ணாவிரதம் நடத்தி, எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார். கட்டுக்கடங்காத போராட்டத்தைக் கையாளத் தெரியாமல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், விவசாயிகள் பலர் உயிரிழந்தனர். இனிமேல் இங்கே தொழில் நடத்துவது இயலாத காரியம் என்று கருதிய டாடா மோட்டார்ஸ், தனது நானோ கார் தொழிற்சாலையை குஜராத்துக்கு மாற்றுவதாக அறிவித்துவிட்டு, 2008-ல் வங்கத்தைவிட்டே ஓடிவிட்டது.

கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட் பாணியிலேயே வெற்றிகண்ட மம்தா, 2011 சட்டசபைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முடிவுகட்டி வரலாறு படைத்தார். அந்த வெற்றிக்கு நன்றியாக, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை விவசாயிகளுக்குத் திருப்பித் தருவதற்காக முதல்வராகப் பொறுப்பேற்றதுமே, ‘சிங்குர் நில மறுவாழ்வு மற்றும் வளர்ச்சிச் சட்டம் 2011’-ஐ நிறைவேற்றினார். இதற்காக நிலத்தை சர்வே செய்யத் துவங்கியதுடன், விவசாயிகளிடமிருந்து மனுக்களையும் பெற ஆரம்பித்தார். அவரது இந்த நடவடிக்கைக்கு கொல்கத்தா உயர் நீதிமன்றம் வாயிலாக முட்டுக்கட்டை போட்டது டாடா நிறுவனம்.

அதை எதிர்த்து, சிங்குர் விவசாயிகளும் சில பொதுநல அமைப்புகளும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தன. “வழக்கு முடிந்த பின்தான் நிலத்தைத் திருப்பி அளிப்பது குறித்து முடிவுசெய்ய வேண்டும்” என்ற உத்தரவோடுதான், வழக்கை விசாரித்தது நீதிமன்றம். என்னாகுமோ என்று விவசாயிகளைக் காட்டிலும் அதிகம் பதறினார் மம்தா. கடந்த வாரம் வெளியான இறுதித் தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் விவசாயிகளின் நிலத்தை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, “நிலத்தைக் கையகப்படுத் தியது பொதுநலனுக்காக அல்ல. நிலத்துக் கான இழப்பீட்டுத் தொகை அன்றைய சந்தை விலையைக் கவனத்தில் கொள்ளா மல் முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக நியாயமான ஈடாக தம் விருப்பத்தைக் கூற விவசாயிகளுக்கும் வாய்ப்பளிக்கப்பட வில்லை” என்றும் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

மம்தா மீண்டும் வெற்றிச் சின்னத்தை காட்டுகிறார்.

தொடர்புக்கு: shaffimunna.r@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x