Published : 16 Jun 2016 09:47 AM
Last Updated : 16 Jun 2016 09:47 AM

வேலையின்மை உருவாக்கும் இலவசங்கள்

ஒரு மாநிலத்தை நிர்வாகம் செய்ய 26 அடிப்படைத் துறைகள் போதும் என்கிறது நிதி ஆயோக்



இந்தியப் பொருளாதாரத்தில் தாராளமயத்தைப் புகுத்திய திருப்புமுனை ஆண்டாக 1991-ஐ குறிப்பிடுகின்றனர். அப்போது ஏற்பட்ட வளர்ச்சி இந்தியர்களுக்கு மட்டுமல்ல, மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும்கூட வருமானத்தைப் பெருக்கித் தந்தது. அப்போது மத்திய அரசின் வரவு-செலவு அறிக்கைப்படி, வருமானம் ரூ.1.25 லட்சம் கோடியாக இருந்தது இப்போது ரூ. 30 லட்சம் கோடியாகப் பெருகியிருக்கிறது. சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு மட்டுமே வரவு-செலவு அறிக்கை தயாரித்த மாநில அரசுகள், இப்போது ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு வரவு-செலவு அறிக்கைகளைத் தாக்கல் செய்கின்றன. சில பெரிய மாநிலங்களில் இது ரூ.2 லட்சம் கோடி ரூபாயாகக்கூட இருக்கிறது.

வருவாய்க்கேற்ப நிதியைக் கையாள்வதில் மத்திய அரசுக்குச் சில கட்டுப்பாடுகளும் வரம்புகளும் விதிக்கப்பட்டுள்ளன. நிதிப் பொறுப்பு மசோதா மூலம் மத்திய அரசு தனது வரவு-செலவுத் திட்டத்தில் அதிகபட்சம் எவ்வளவு நிதி பற்றாக்குறையை அனுமதிக்கலாம் என்பது வரையறுக்கப்பட்டிருக்கிறது. மாநிலங்களுக்குப் பிரித்துத் தர வேண்டிய தொகை எவ்வளவு என்று நிர்ணயிக்க நிதிக் குழு இருக்கிறது. மானியச் செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூற உள்ளுக்குள்ளேயே அமைப்புகள் இருக்கின்றன. மாநிலங்களைப் பொறுத்தவரை இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் குறைவு.

மாநில அரசுகள் அனைத்தும் சேர்ந்து செய்யும் மானியச் செலவுகளின் மொத்த அளவு ரூ. 2 லட்சம் கோடிக்கும் மேல். மாநில அரசுகளுக்குச் சொந்தமான அரசுத் துறை நிறுவனங்களின் கடன் அளவு ரூ.4.5 லட்சம் கோடிக்கும் மேல். மாநில அரசுகள் வழங்கும் இலவசங்களின் மொத்த மதிப்பு பல ஆயிரம் கோடிகளுக்கும் மேல்.

திட்டங்களை நிறைவேற்றுவதில் காலதாமதத்தை ஏற்படுத்தும் சிவப்பு நாடா முறையைக் கைவிடுவது, தொடர்ந்து வருமான இழப்பை ஏற்படுத்தும் அரசுத் துறை நிறுவனங்களைத் தனியார் மயப்படுத்துவது, மானியங்களைக் குறைத்துக்கொண்டே வந்து முற்றாக நீக்குவது, ஊழலைக் குறைப்பது போன்றவை மத்திய அரசுக்குப் பொருந்தும் என்றால், மாநில அரசுகளுக்கும் அவை பொருந்தியாக வேண்டும். மாநில அரசுகளில் அரசு ஊழியர்களின் எண்ணிக்கை தேவைக்கும் மேல் உள்ளது. மக்களுடைய வரிப்பணத்தில் பெரும்பகுதி நஷ்டத்தைத் தொடர்ந்து ஈட்டும் அரசுத் துறை நிறுவனங்களுக்குச் செலவிடப்படுகிறது. ஒவ்வொரு பரிமாற்றத்திலும் லஞ்சம் கைமாறுகிறது. இலவசங்கள் என்பது ‘எல்லாவற்றிலும்’ ‘எல்லோருக்கும்’ என்றாகி வருகிறது.

கட்டுமீறிய செலவுகள்

ஒரு மாநிலத்தின் நல்ல நிர்வாகத்துக்கு அடிப்படையாக 26 துறைகள் இருந்தால் போதும் என்கிறது நிதி ஆயோக். பெரும்பாலான மாநிலங்கள் 40 முதல் 75 துறைகளைக் கொண்டுள்ளன. உத்தரப் பிரதேச மாநிலத்தில் வரவேற்பு சம்பிரதாயங்களுக்கென்றும், சிவில் விமானப் போக்குவரத்துக்கும், அரசுப் பணி ஒருங்கிணைப்புக்கும், அரசியல் ஓய்வூதியங்களை மட்டும் கவனிப்பதற்கும் தனித் துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் மருத்துவக் கல்வித் துறைக்கு, கன்னடக் கலாச்சாரத்தைக் காக்க, செய்தித் துறைக்கு என்று தனித்தனித் துறைகள் இருக்கின்றன. பிஹாரில் கட்டிடங்களைக் கட்டுவதற்கென்றே ஒரு துறையும் சர்க்கரைக்காக மட்டும் தனித் துறையும் செயல்படுகின்றன.

கர்நாடக அரசுக்குச் சொந்தமாக நிறுவனங்களும், குழுமங்களுமாக 75 இருக்கின்றன. அவற்றில் பெரும்பகுதியில் வருமானம் கிடையாது, நஷ்டம்தான். குஜராத்தில் வாரியங்களும் குழுமங்களுமாக 45 இருக்கின்றன. இவற்றுக்கென்று தொகுப்பு நிதி என்று நிரந்தர நிதியாதாரம் கிடையாது. உத்தரப் பிரதேச இணையதளப்படி 42 அரசு நிறுவனங்கள் செயல்படுகின்றன, 23 செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. ஒடிசா மாநிலம் 30 அரசுத் துறை நிறுவனங்களைக் கொண்டிருக்கிறது. அவற்றில் கனிமத் துறை நிறுவனங்கள் மட்டும் லாபத்தில் இயங்குகின்றன. மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் திறமைக் குறைவான நிர்வாகிகளும், நஷ்டத்தை அதிகப்படுத்தும் அமைச்சர்களும் இருப்பதால் நஷ்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த நிறுவனங்களைச் சீர்திருத்தி லாபகரமாக நடத்த முடியவில்லை என்றால் மூடிவிட வேண்டும் அல்லது தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அக்கறை காட்டாத அரசு

எந்த மாநில அரசும் லஞ்சத்தை, ஊழலை ஒழிப்பதில் அக்கறை காட்டுவதே இல்லை. ஊழல் எதிர்ப்பு என்ற ஒற்றை கோஷத்தில் ஆட்சியைப் பிடித்த டெல்லியை ஆளும் ஆம் ஆத்மி கட்சி, லோக்பாலை நியமிக்கக் கொண்டுவந்த மசோதா நகைப்புக்கு இடமாகிவிட்டதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. கர்நாடக மாநில அரசு சில மாதங்களுக்கு முன்னால் லோக் ஆயுக்தாவின் அதிகாரத்தைக் குறைப்பதற்காக, மாநில உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஊழல் தடுப்புப் பிரிவு செயல்படும் என்று அறிவித்தது. மகாராஷ்டிர மாநிலம் கொண்டுவந்த லோக் ஆயுக்தா சட்டமோ விசாரணைப் பிரிவு இல்லாத அமைப்புக்கே வழிசெய்திருக்கிறது. ராஜஸ்தான் மாநில லோக் ஆயுக்தாவில் மொத்தமே 35 அலுவலர்கள்தான் இடம்பெற்றுள்ளனர். அவர்களால் ஊழல் புகார்களுக்கு உள்ளானவர்கள் மீது நேரடியாக நடவடிக்கை எடுக்க முடியாது. மாநில அரசுக்குப் பரிந்துரை மட்டுமே செய்ய முடியும். ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், அனைத்து அதிகாரங்களையும் கொண்ட சுயேச்சையான லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

மானியச் செலவுகளைப் பொறுத்தவரை தமிழ்நாடுதான் முன்னிலையில் இருக்கிறது. கடந்த ஆண்டு தமிழகம் வழங்கிய மானியச் செலவுகளின் மொத்தம் ரூ.49,000 கோடி. விலையில்லா மடிக் கணினிகள், மின்விசிறிகள், மிக்ஸிகள், கிரைண்டர்கள் வழங்கப்பட்டதை அரசின் நிதி நிலை அறிக்கையே பறைசாற்றுகிறது.

மேற்கு வங்கத்தில் ‘மா - மனுஷ் - மிட்டி’ ஆகிய மூன்றை முன்மொழிந்து ஆட்சி நடப்பதால் இலவச மிதிவண்டிகள், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட செலவுகளுக்கு மட்டும் ரூ.15,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டிருக்கிறது.

இலவச மின்சாரம் என்ற ஒற்றை அம்சம் காரணமாக, வெவ்வேறு மாநில அரசுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.3,000 கோடி முதல் ரூ.15,000 கோடி வரை செலவு ஏற்படுகிறது. மின்மீட்டர் பொருத்தப்படாத விவசாய பம்புசெட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது.

இரட்டை இலக்கம் கடினம்

இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில், அனைத்துப் பகுதி மக்களுக்கும் அனைத்துத் தரப்பு இளைஞர்களுக்கும் வளமான எதிர்காலம் அமைய வேண்டும் என்றால், ஆண்டுக்கு சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் புதிது புதிதாக உருவாக்கப்பட வேண்டும். அடுத்த பத்தாண்டுகளுக்கும் அதற்குப் பிறகும்கூட இது தொடர வேண்டும். மத்திய அரசு என்னதான் சீர்திருத்தங்களை ஓடி ஓடி அமல்படுத்தினாலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்க எண்ணை எட்டுவது (அதாவது 10%) மிகமிகக் கடினம். மாநில அரசுகள் சிவப்பு நாடா நிர்வாக முறையிலும் திறமைக் குறைவிலும் சிக்கியிருக்கும் வரை இது சாத்தியமே இல்லை. மத்திய அரசைப் போலவே மாநில அரசுகளும் நிர்வாகச் சீர்திருத்தங்களைத் தொடங்க வேண்டும்.

(கட்டுரையாளர் பெங்களூருவைச் சேர்ந்த நிதி நிர்வாகி)

தமிழில்: சாரி,

© பிசினஸ் லைன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x