Last Updated : 16 Dec, 2013 12:00 AM

 

Published : 16 Dec 2013 12:00 AM
Last Updated : 16 Dec 2013 12:00 AM

காந்தியம் என்பது என்ன? - எழுத்தாளர் ஜெயமோகன்

காந்தியம் என்பது காந்தி சொன்னவையும் செய்தவையும் மட்டும் அல்ல. காந்தியில் தொடங்கி சென்ற நூறாண்டுகளில் உலகமெங்கும் உருவான நவீன அரசியல், பொருளியல், சூழலியல் சிந்தனைகளையும் ஒருங்கிணைத்தே காந்திய சிந்தனையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் முதல் நெல்சன் மண்டேலா வரை காந்திய அரசியல் சிந்தனையாளர்களின் ஒரு நீண்ட வரிசை உள்ளது. ஜே.சி.குமரப்பா, இ.எஃப் ஷூமாக்கர் போன்ற காந்தியப் பொருளியலாளர்களின் மரபு உள்ளது. வெரியர் எல்வின் முதல் இவான் இல்யிச் வரையிலான காந்திய சமூகவியலாளர்கள் உள்ளனர். இதுபோக கட்டுமானச் சிற்பியான லாரிபேக்கர், இயற்கை வேளாண்மையாளரான மாசானபு ஃபுகோகா போன்று பல துறைநிபுணர்கள் காந்தியச் சிந்தனைகளை வளர்த்தெடுத்துள்ளனர்.

பன்மை: உண்மைக்குப் பல முகங்கள் உண்டு என்பதை தன் முதல்பெரும் அறிதலாக முன்வைக்கிறார் காந்தி. எந்த ஒரு விஷயத்துக்கும் ஒரே தீர்வும் ஒரே பதிலும் இருக்க முடியாது. ஒற்றை உண்மையை வலியுறுத்தக்கூடிய எதுவும் காந்தியத்துக்கு எதிரானதே. உண்மைகள் ஒன்றுடன் ஒன்று உரையாடி சமரசமடைந்து கண்டடையும் பொதுப்புள்ளியிலேயே சரியான தீர்வுகள் இருக்க முடியும். ஆகவே காந்தியம் எப்போதும் உரை யாடலை வலியுறுத்துகிறது. மாற்றுத்தரப்பை மனம்திறந்து கவனிக்கவும் சாத்தியமான சமரசத்தை நோக்கிச் செல்லவும் அது முயல்கிறது. ஒன்றே உண்மை என்பதல்ல பன்மையிலேயே உண்மை உள்ளது என்பதே காந்தியம்.

மையமின்மை: ஒற்றை உண்மையை நிராகரிப்பதனாலேயே உறுதியான மையங்களை காந்தியம் நிராகரிக்கிறது. மையப்படுத்தப்பட்ட கருத்துக்கள், மையப்படுத்தப்பட்ட செல்வம், மையநிர்வாகம் ஆகியவற்றுக்கு எதிரானது காந்தியம். காந்தி முன்வைத்த கிராம சுயராஜ்யம் என்பது மைய அரசோ அதிகாரமோ இல்லாத ஒரு கிராமக் கூட்டமைப்புதான். ஒரு பண்பாட்டின், தேசத்தின் ஒவ்வொரு அம்சமும் தன்னுடைய சுயத்தைப் பேணி வளர்த்து முழுமையை நோக்கி நகர வேண்டும் என்றும், அதன் ஒட்டுமொத்தமாகவே அந்தப் பண்பாடும் தேசமும் முழுமையை அடைய முடியும் என்றும் காந்தியம் வலியுறுத்தும். குறிப்பாக, செல்வம் மையப்படுத்தப்படுவது என்பது அடக்குமுறையை உருவாக்கும் என்பது காந்தியத்தின் எண்ணம்.

வன்முறை தவிர்த்தல்: மாற்றுத்தரப்பின் இருத்தலை, அதன் வரலாற்று நியாயத்தை உணர்ந்துகொள்ளும்போது அந்தத் தரப்பை அழித்தொழிப்பதைப் பற்றிச் சிந்திக்கவே முடியாது. ஆகவே, முழுமையான வன்முறை தவிர்ப்புதான் காந்திய அரசியலின் வழிமுறை. வன்முறையை எதிர்க்க வன்முறை ஒருபோதும் வழியாகாது என்றார் காந்தி. அதன்மூலம் எந்த வன்முறையை எதிர்க்கிறோமோ அதற்குச் சமானமான வன்முறையாளர்களாக நாம் உருவாகிறோம். அவர்கள் செய்ததையே நாம் செய்ய ஆரம்பிக்கிறோம். அது இரண்டுமடங்கு வன்முறையை மட்டுமே உருவாக்கும்.

அரசாங்கங்கள் வன்முறையின் வலிமையில் நிலைநிற்பவை அல்ல. அவை அந்த அரசுகளை ஆதரிக்கும் மக்களால் நிலைநிறுத்தப்படுபவை. அந்த மக்களின் கருத்தியல் நம்பிக்கைகளே அவ்வரசுக்கான ஆதரவாக ஆகின்றன. அந்த மக்களின் மனசாட்சியுடன் பேசுவதும் அந்தக் கருத்தியலை முழுமையாக மாற்றுவதும் மட்டுமே அரசாங்கங்களை தோற்கடிக்கும் வழிகள் என்று காந்தியம் சொல்கிறது. ஆகவே, காந்தியப் போராட்டம் என்பது எப்போதும் மக்களின் கருத்தியலை மாற்றுவதற்கான தொடர்ச்சியான பிரச்சார நடவடிக்கைதான். ஒன்றுகூடுவதும், தங்கள் தரப்பைத் தங்களிடமும் பிறரிடமும் வலியுறுத்துவதும் மட்டுமே காந்தியப் போராட்டம்.

படிப்படியான மாற்றம்: காந்தியின் காலகட்டத்தில் புரட்சி என்ற நம்பிக்கை பரவியிருந்தது. மக்களின் கருத்தியல் மாறிய பின்னரும் ஆட்சியில் நீடிக்கும் அரசுகளுக்கு எதிராக மக்கள் கொள்ளும் கிளர்ச்சியும் அதன் விளைவான மாற்றமும்தான் புரட்சி. அது ஐரோப்பாவில் ஒரு சில நாடுகளில் நிகழ்ந்தது. அதை வைத்து உலகமெங்கும் ஆட்சிமாற்றம் அப்படித்தான் நிகழ முடியுமென சிலர் கணித்தனர். அது பிழையான நம்பிக்கை என உலக வரலாறு நிரூபித்துவிட்டது. புரட்சி என்று சொல்லப்படும் ஒட்டு மொத்த மாற்றம் எப்போதும் அழிவையே கொண்டுவருகிறது. தேவையற்றதும் தேவையானதும் சேர்ந்து அழிகின்றன. காந்தியம் தேவையானவை வளர்ச்சியடைந்து தேவையற்றவை மெல்லமெல்ல அழியக்கூடிய ஒரு படிப்படியான வளர்ச்சி யையே சரியான சமூக மாற்றம் என்கிறது.

மக்களிடமிருந்து கற்றுக்கொள்ளுதல்: ஐரோப்பாவில் உருவான அரசியல் சிந்தனைகள் பேரறிஞர்கள் மக்களை வழிநடத்தும்பொருட்டு உருவாக்கியவை. காந்தி, வரலாற்றின் பாடங்களையும் தீர்வுகளையும் நேரடியாக மக்களிடமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டுமென நினைத்தவர். உதாரணமாக, சட்டமறுப்புப் போராட்டத்தை சம்பாரன் விவசாயிகளிட மிருந்து தொடங்கி விரிவாக்கினார் காந்தி. அதைப் பல இடங்களில் நிகழ்த்திச் சோதனைசெய்து விளைவுகளை கவனித்து மேம்படுத்திக்கொண்டே சென்றார்.

இயற்கையுடன் இணைந்துபோதல்: பெருந்தொழிலை அடிப்படையாகக் கொண்ட நவீன முதலாளித்துவம் இயற்கையை ஈவிரக்கமில்லாமல் சுரண்டுவதையே தன் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. காந்தியம் அதை நிராகரித்த முதல் நவீனச் சிந்தனை. முதலாளித்துவம் தேவைக்கேற்ப உற்பத்தி செய்வதில்லை. லாபத்துக்காக உற்பத்தி செய்கிறது. அதன்பின்னர் தேவையை அதுவே உருவாக்கிப் பரப்புகிறது. அதன் விளைவே நுகர்வுக் கலாச்சாரம். நமக்கு என்ன தேவை என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும், உற்பத்தியாளர் அதை நம்மீது ஏற்றக் கூடாது என காந்தியம் சொல்கிறது. இயற்கை தாக்குப்பிடிக்கும் அளவுக்கு மட்டுமே அதைப் பயன்படுத்துவதை காந்தியம் வலியுறுத்துகிறது. அதற்கேற்ப ஒட்டுமொத்த வாழ்க்கைமுறையையே அமைத்துக்கொள்வதைப் பற்றி காந்தியம் பேசுகிறது. தாக்குப்பிடிக்கும் பொருளியலும், நுகர்வு மறுப்பும் காந்திய அடிப்படைகள்.

தனிமனித நிறைவு: காந்தியத்தின் சாராம்சமான தரிசனம் அரசியலோ தொழிலோ கலையோ எதுவானாலும் அது அதில் ஈடுபடுபவனுடைய ஆளுமையை வளர்த்து முழுமைசெய்வதாக இருக்க வேண்டும் என்பது. முழுமையாக அதில் ஈடுபடுவதும் அச்செயல்மூலம் தன்னுடைய அறவுணர்ச்சியையும் ஆன்மிகத் தேடலையும் நிறைவுசெய்துகொள்வதும்தான் அதற்கான வழியாகும். ஆகவே, எந்த சிந்தனையும் அதில் ஈடுபடுபவனைச் சிறந்த மனிதனாக ஆக்கவில்லை என்றால் அது பயனற்றதே .

காந்தியத்தின் தொடக்கம்தான் காந்தி. காந்தியம் இன்றைய உலகில் நிர்வாகவியல் முதல் எண்ணற்ற நவீன துறைகளில் செல்வாக்கு செலுத்திவரும் அதிநவீன சிந்தனை. நாளைய உலகுக்கான வாசலும்கூட.

- ஜெயமோகன், எழுத்தாளர், தொடர்புக்கு: jeyamohan.novelist@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x