

சின்ன வயது நாட்களில் என்னால் தவிர்க்க முடியாத ஒரு பெயர் மருதண்ணா. அன்றைய நாட்களில் சுவாமிமலையில், இருள் கவியும் வேளைகளில், பலப்பல… புதுப்புது உலகங்களை சிருஷ்டித்தவர் அவர். பின்னாளில் எனக்கு விஷயம் தெரிந்த காலந்தொட்டு எவ்வளவோ புரியாத விஷயங்களை நான் ஓடியோடித் தேடித்தேடிப் படித்தும் பார்த்தும் கற்றுணர்ந்தும் கண்டறிந்தும் இருக்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் இன்னமும் விடை தெரியாத - இன்னமும் மர்மம் விளங்காத விஷயங்களில் ஒன்று மருதண்ணா சொன்ன 'முறை தெரியாத கதை'.
ஒரு ஊரில் ஒரு ராஜா இருந்தானாம். அந்த ராஜாவுக்கு ஒரு இளவரசன் இருந்தானாம். ஒரு நாள் ராஜாவும் இளவரசனும் குதிரை மேலே ஏறிக் காட்டுக்குப் போனார்களாம். ஓர் இடத்தில் குதிரைகளுக்கு முன்பு இரு காலடித் தடங்கள் தெரிந்தனவாம். அந்தக் காலடித் தடங்கள் இரு பெண்களின் காலடித் தடங்கள் என்று யூகித்த ராஜா சொன்னானாம்: ‘பெரிய தடம் அழகான அம்மாவுடையதாக இருக்கலாம். சின்ன தடம் அழகான அவளுடைய மகளுடையதாக இருக்கலாம். நாம் இருவரும் அவர்கள் இருவரையும் தேடிக் கண்டுபிடிப்போம். பெரிய தடத்துக்குச் சொந்தக்காரியை நான் கட்டிக்கொள்கிறேன். சின்ன தடத்துக்குச் சொந்தக்காரியை நீ கட்டிக்கொள்.’ இளவரசனுக்கும் இது சரி எனப் பட்டது. இரண்டு பேருமாகச் சபதம் எடுத்துக்கொண்டு தேடினார்கள், காலடிக்குச் சொந்தக்காரிகளை. சில மணி நேரத்திலேயே கண்டுபிடிக்கவும் செய்தார்கள். ஆனால், ஒரு வேடிக்கை. பெரிய தடங்களுக்குச் சொந்தக்காரி மகளாக இருந்தாளாம். சின்னத் தடங்களுக்குச் சொந்தக்காரி தாயாக இருந்தாளாம். அதற்காக சொன்ன வார்த்தைகளை மாற்றிக்கொள்ள முடியுமா? முடிவெடுத்தபடி மகளை அப்பனும் தாயை மகனும் கட்டிக்கொண்டார்களாம். இதைச் சொல்லிவிட்டு மருதண்ணா கேட்பார்: “இப்போ ஒரு கேள்வி. இந்த இரண்டு தம்பதிக்கும் பிள்ளைகள் பிறந்தால், அந்தப் பிள்ளைகள் ஒருத்தரையொருத்தர் என்ன உறவுமுறை சொல்லிக் கூப்பிட்டுக்கொள்ளும்?”
இப்படி எண்ணிறைந்த கதைகள் மருதண்ணாவிடம் உண்டு.
விக்ரமாதித்தன் கதைகள், பரமார்த்த குரு கதைகள், காத்தவராயன் கதை, பேசாமடந்தை கதை, திரைச்சீலை சொல்லும் கதைகள், அவற்றுள் வரும் அண்டரண்ட பட்சிகளின் கதை, ராமாயண - மகாபாரதக் கதைகள்... நீங்கள் கடந்த தலைமுறையைச் சேர்ந்தவராக இருந்தால், உங்கள் வாழ்க்கையிலும்கூட இப்படிச் சில கதைகள் ஞாபகத்துக்கு வரும். உங்கள் வாழ்விலும்கூட மருதண்ணாவைப் போன்ற சில கதைசொல்லிகள் இருந்திருப்பார்கள். ஆனால், இப்போது அவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்? அவர்கள் சொன்ன கதைகள் எல்லாம் எங்கே போயின?
இன்றைக்கு உலகம் நவீனமாகிவிட்டது. சகல வசதிகளையும் விரல் நுனி தொடுதிரையில் பெறும் அதி அற்புத உலகமாகிவிட்டது. வகுப்பறையில் உலகப் படத்தில் நாடுகளையும் காடுகளையும் கடல்களையும் காண்பித்த காலம் மாறி, ‘கூகுள் எர்த்’மூலம் உலகத்தின் மாதிரி உருவத்தை உருட்டித் திரட்டி நம் கண் முன் காட்டிவிடுகின்ற உலகம் இது. ஒரு நிமிடத்தில் லட்சக்கணக்கான இணையதளங்களைத் தேடி, வேண்டிய தகவல்களை நம் முன் நிறுத்திக் காட்டுகின்ற வித்தியாசமான உலகம் இது. “இது குதூகலங்களைக் கொண்டாடும் அற்புத உலகம்” என்கிறார் எதிர்காலவியல் அறிஞர் ஆல்வின் டாப்ளர்.
ஆமாம். குதூகலங்களைக் கொண்டாடும் அற்புத உலகம்தான். அதனால்தான், பட்டி விக்ரமாதித்தன் கதையும் மதனகாமராஜன் கதையும் நொண்டி வீரன் கதையும் மதுரை வீரன் கதையும் பெத்தார்னா கதையும் விதுர நீதியும் இன்று தர்க்கத்துக்கு உரியவையாக மாறிவிட்டனவா? அறிவு சார்ந்த கேள்விகளால் இவை தேவையற்றவையாக மாற்றப்பட்டுவிட்டனவா?
உளவியல் அறிஞரான சிக்மண்ட் ஃபிராய்ட் கிரேக்கப் புராணக் கதைகளில் இருந்து ‘ஈடிபஸ்’கதையை வைத்தே மனிதனின் மனச் சிக்கலைக் காண்பித்தார். உலக அளவில் இன்றும் பேசப்படுகின்ற சிண்ட்ரல்லாவின் மனவியலை வர்ணிக்கும் கூறுகள் இன்றைய நவீன மனிதக் கூறுகளைக் காட்டுகின்றன. ஒருவேளை பிராய்ட், எரிக் எரிக்ஸன், ஆட்லர், யுங் போன்ற உளவியல் அறிஞர்கள், மரபார்ந்த நமது இந்தியக் கதை மரபுகளைக் கேட்டிருந்தால் மனித குணங்களை விவரிக்க இப்பாத்திரங்களின் பெயர்களைக்கூட அவர்கள் வைத்திருக்கக்கூடும். ஆனால், நமக்கோ எல்லாம் தேவையற்றவையாக மாறிவிட்டன.
கொடுத்தல், யார் கேட்டாலும் கொடுத்தல், எதைக் கேட்டாலும் கொடுத்தல், கொடுத்தலின் மூலமாகக் கிடைத்த தர்மங்களையெல்லாமும் தாரைவார்த்துக் கொடுத்தல் எனும் கர்ணனின் கொடைத்தன்மையை இன்றைக்கு நினைத்துப்பாருங்கள். இந்த நவீன உலகுக்கு கர்ணனின் கொடை ஏன் வேண்டாதது ஆகிவிட்டது என்று யோசித்துப்பாருங்கள். இந்த நவீன உலகம் ஏன் இவ்வளவு இரக்கமற்றுப்போய்விட்டது என்பதற்கான பதில் உங்களுக்குக் கிடைக்கும்.
அண்ணல் காந்தி தன் வாழ்நாள் முழுவதும் உண்மையே பேசிவந்ததற்குக் காரணம், அவர் லண்டனில் படித்த பாரீஸ்டர் வக்கீல் படிப்பல்ல. தனது இளம்பிராயத்தில் கேட்ட ஹரிச்சந்திர புராணமும் தாய் - தந்தையர்களைக் காத்த சிரவணன் கதையும்தான். சத்ரபதி சிவாஜி வீர மகனாக உருவெடுத்ததற்குக் காரணம், சிறுபருவத்தில் அவருடைய அன்னை சொன்ன கதைகளே.
கதைகள் குழந்தைகளின் உணர்வுகளுக்கு உயிர் கொடுக்கின்றன. அவர்களுடைய கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் உயிர் கொடுக்கின்றன. அவர்களுடைய படைப்புத் திறனுக்கு உயிர்கொடுக்கின்றன. உங்களுக்கு இவற்றில் எல்லாம் நம்பிக்கை இல்லாமல் போகலாம். கொஞ்சகொஞ்சமாக அறக்கூறுகள் யாவும் அழிந்துவரும் இவ்வுலகில், எல்லாம் அற்றுப்போய்க்கொண்டிருக்கும் இவ்வுலகில், நிர்க்கதியான சூழலில் பற்றிக்கொள்ள உங்கள் குழந்தைகளுக்கு நிச்சயம் ஒரு பற்றுக்கோல் வேண்டும். அதற்காகவேனும் தயவுசெய்து கதைசொல்லிகளைத் தேடுங்கள்!
தேனுகா, மூத்த எழுத்தாளர், கலை விமர்சகர் - தொடர்புக்கு: dhenuga.srinivasan@gmail.com