Published : 20 Jul 2016 09:53 AM
Last Updated : 20 Jul 2016 09:53 AM

மாணவர் ஓரம்: நான்காயிரம் வருடங்களுக்கு முன்பே ஆஸ்திரேலியாவில் இந்தியர்கள்!

4,500 வருடங்களுக்கு முன்பாகவே இந்தியாவிலிருந்து மனிதர்கள் ஆஸ்திரேலியா வரை போயிருக்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானத்தில் இது புதிய புரிதல். அப்போது அவர்களோடு டிங்கோ வகை நாய்களும் போயிருக்கின்றன!

என்னுடைய தூரத்து உறவினர்கள் ஆஸ்திரேலியாவில் பழங்குடிகளாக இருக்கிறார்கள் என்றால், ஆச்சரியமாக இருக்கிறதா? எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் அவர்கள் சொந்தக்காரர்கள்தான். ‘அபராஜின்’ என்று அழைக்கப்படும் அந்தப் பழங்குடிகளின் மரபணுக்களுக்கும் இந்தியர்களின் மரபணுக்களுக்கும் இடையே 11% ஒற்றுமைகள் இருக்கின்றன என்கிறார், மாக்ஸ் பிளாங்க் எனும் ஜெர்மன் ஆய்வு நிறுவனத்தின் இரினா பகச் எனும் விஞ்ஞானி.

நவீன மனிதர்களின் பரிணாம வளர்ச்சியின் வயது சுமார் 2 லட்சம் வருடங்கள். ஆப்பிரிக்காதான் மனிதர்களின் பிறப்பிடம். அங்கிருந்து அரபிக் கடலோரம் வழியாகவும், இன்றைய இந்தியா - இந்தோனேஷியா வழியாகவும் 45 ஆயிரம் வருடங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலியா வரை சென்று குடியேறியிருக்கிறார்கள் என்கின்றன அகழ்வாராய்ச்சிகளில் இதுவரையிலும் கிடைத்துள்ள ஆதாரங்கள். அது பழைய விஞ்ஞானம்.

4,500 வருடங்களுக்கு முன்பாகவே இந்தியாவிலிருந்து மனிதர்கள் ஆஸ்திரேலியா வரை போயிருக்கிறார்கள் என்று விஞ்ஞானிகள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். விஞ்ஞானத்தில் இது புதிய புரிதல். அப்போது அவர்களோடு டிங்கோ வகை நாய்களும் போயிருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் கடைசியாகக் கிடைத்த அந்த நாயின் புதைபடிவத்தின் காலமும் இந்தக் காலக் கணக்கோடு பொருந்துகிறது என்றும் வியக்கிறார்கள். சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான் ஆங்கிலேயர்கள் ஆஸ்திரேலியாவைக் கண்டறிந்தனர். அதற்கு முன்னால் பல்லாயிரம் வருடங்களாக ஆஸ்திரேலியா தனிமைப்பட்டுக் கிடந்தது என்ற கருத்தும் இந்தப் புதிய ஆய்வால் மாறிவிட்டது.

தற்போது வளர்ந்த பணக்கார நாடாக ஆஸ்திரேலியா மாறியுள்ளது. சுமார் 2.5 கோடிப் பேர் வாழும் ஆஸ்திரேலியாவில், அபராஜின் பழங்குடிகள் தற்போது 2.7 % பேர் உள்ளனர். தூரத்து உறவினர்கள் என்பதற்கான அர்த்தமும் ரொம்ப தூரத்துக்கு விரிவடைந்துகொண்டே போகிறது!

- த.நீதிராஜன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x