Last Updated : 05 Sep, 2018 09:47 AM

 

Published : 05 Sep 2018 09:47 AM
Last Updated : 05 Sep 2018 09:47 AM

2 மினிட்ஸ் ஒன்லி 8: இரும்புப் பெண்மணி!

‘பாலாஜி… என்னது   இது? ஒவ்வொரு வாரமும் கருத்து கந்தசாமி கணக்கா 360 டிகிரி கோணத்துல ஒரே சமூக சிந்தனை கருத்துகளா இருக்கே...’ என்று முகநூல் தொடங்கி, நேரில் பார்க்கும்  நண்பர்கள் வரைக்கும் கேட்குறாங்க.

வாழ்க்கையில நாம சந்தித்த நபர்கள்னு குறிப் பிடும்போது பட்டியல்ல  முதலில்  சிலர் நினைவுக்கு வருவாங்க. அவங்க  ஏதோ ஒரு வகையில ரொம்பவும் நம்மை சிந்திக்கவும்  வைத்திருப்பாங்க. அந்த மாதிரி மனிதர்களைப் பத்திதான் கடந்த சில வாரங்களாக  உங்களிடம்  பகிர்ந்துகொண்டேன்.

அந்த வரிசையில இனி வரப்போற எல்லோருக்கும் பன்முகம் உண்டு. அவங்க ஒவ்வொருவரும்  ஒரு வகையில் என்னை ஆச்சர்யப்படுத்தியிருப்பாங்க, சிந்திக்க செய்திருப்பாங்க. சிரிக்க வைத்திருப்பாங்க. ஏண்டா இவங்களைச் சந்தித்தோம்னுகூட  நினைக்க  வெச்சிருக்கலாம்.

ஆச்சர்யப்படுற விஷயம்

இந்தத் தொடரோட முதல் வாரத்தில்  நான் குறிப்பிடும்போது,  ‘நிறைய நிறைய பணத்தோட இருப்பதா சக்ஸஸ்? நிறைய சந்தோஷத்தோட இருப்பதுதானே சக்ஸஸ்’னு சொல்லியிருப்பேன். அந்த மாதிரி சொல்லும்போது பில்கேட்ஸ், அம்பானின்னு சில பணக்கார ஆண்களைப் பற்றியும் பேசினேன்.

அந்த மாதிரி நம்மைச் சுற்றி இரும்பு மனுஷிகளும் நிறையப் பேர் இருக்காங்க.  அவங்களை நாம ‘அயர்ன் லேடி’ன்னு சொல்வோம்.

சாதனைப் பெண்கள் என்றதும் ஜான்சிராணி, கிரண்பேடி, மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா ஜெயலலிதா, இந்திரா நூயினு பட்டியல் எடுப்போம். இவங்களோட சாதனைகள் ஒருவிதம். அப்போ  வீட்டுல இருக்குற அக்கா, அம்மா, மனைவி இவங்க எல்லாம்  ‘இரும்பு மனுஷி’ இல்லையான்னு கேட்கலாம். அவங்க நம்ம குடும்பத்துல ஒருத்தரா ஆகிடுறாங்க.

நான்  இங்கே குறிப்பிடுறது ஒவ்வொரு நாளும் நம்ம வீட்டுலயோ, நம் பக்கத்து வீட்டுக்கோ வந்து வீட்டு வேலை செய்ற அக்கா,  ஆயாவைப் பற்றி யோசித்திருக்கிறோமா? எனக்கு அப்படி ஒரு அக்காவைத்  தெரியும். அவங்களைப் பற்றிதான் இங்கே சொல்லப் போறேன். இதில் எந்தக் கருத்தும் இருக்காது. ஆச்சர்யப்படுற விஷயம்தான் இருக்கும்!

‘கம்னு கெட’

பஞ்சுமிட்டாய்னு என்னோட நண்பன் ஒருத்தன் இருக் கான். அவங்க வீட்டுல வேலை செய்றவங்கதான் நான் சொல்ற  அந்த அக்கா. அவங்க எப்பவும் ஏதாவது ஜோக் அடிச்சிட்டே இருப்பாங்க. அவ்வளவு  கலகலப்பா பேசுற  அவங்களை சுத்தி  எப்பவமே பத்து பேர் இருந்துட்டே இருப்பாங்க. ‘சம்சாரம் அது மின்சாரம்’ படத்துல வர்ற மனோரமா ஆச்சி இருக்காங்களே, அவங்கள மாதிரியேதான் அவுங்களும். இந்த அக்காவுக்கு மூணு பொண்ணுங்க. வீட்டுக்காரர் கட்டிட வேலை செய்றவர்.  அந்த மனுஷருக்கு  குடிப் பழக்கமும் உண்டு. அவர் சம்பாத்தியத்துல துளி காசு குடும்பத்துக்கு வந்து சேராது.  அவரால அந்த அக்கா குடும்பத்துக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனா,  குடிச்சுட்டு வந்து வீட்டுல மனைவியை அடிக்கிற கேரக்டர் இல்ல.

‘ஞாயித்துகெழமையும் பெண்களுக்கில்லை’

அந்த அக்காவுக்கு 45 வயது இருக்கலாம்.   மூணு பொண்ணுங்களையும் ஒரு ஆள் உழைப்

புல கஷ்டப்பட்டு வளர்த்துட்டிருக்காங்க. காலையில மூணு வீடுக, மாலையில் நாலு  வீடு, அவங்க வீட்டோட சேர்த்து மொத்தமா எட்டு  வீடுகள்ல தினமும் வீட்டு வேலை செய்ற அளவுக்கு தன்னோட உடல் பளுவை வளர்த்துக்கிட்டாங்க.

ஞாயிற்றுக்கிழமைகூட விடுமுறை இல்லை. அதுவும் சிலர் வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை கெஸ்ட் வந்துடுவாங்க. அடுத்த நாள் அதிகமா அவ்வளவு வேலை இருக்கும். மனசு வைத்து யாராவது ஒருத்தர் அரை நாள் லீவ் எடுத்துக்கோன்னு கொடுத்தா மட்டும்தான் உண்டு. வருஷத்துல 365 நாட்களும் இப்படி உழைக்கிற பெண்கள் ஒவ்வொரு  வீட்டுலயும்  இருக்காங்க.

இதில் கருத்து சொல்றதுக்காக நான் இங்கே சொல்லவில்லை. இந்த அக்காகிட்ட இன்னொரு ஸ்மார்ட்னெஸ் குணமும் இருக்கு. அதைத்தான் அடுத்து சொல்லப் போறேன்.

என்னோட நண்பன் பஞ்சுமிட்டாய் வீட்டுல இந்த அக்கா 15 வருஷத்துக்கும் மேல வேலை பார்க்குறாங்க.   ஒரு ஞாயிற்றுக்கிழமை. பஞ்சுமிட்டாய் கிரவுண்டுக்கு விளையாட வந்துட்டான்.   ஏதோ ஒரு வேலையா அவனை அழைக்கிறதுக்காக இந்த அக்கா கிரவுண்டுக்கு வந்திருக்காங்க. அது பெரிய கிரவுண்ட். அங்கே நூத்துக்கணக்கான பேர் விளையாடிட்டிருக்காங்க.

அந்த இடத்துல ஓரமா பத்து பதினைஞ்சு தண்ணிப்  பாக்கெட்டுகள  வெச்சிட்டு ஒரு பெரியவர் நின்னுருக்கார். அவர்கிட்ட சில பசங்க தண்ணிப் பாக்கெட்டு வாங்கி குடிச்சிருக்காங்க. ஆனா, பல பேரு  அந்த பாக்கெட் தண்ணீரக்கூட குடிக்காம தாகத்தோட விளையாடியிருக்காங்க. இதைப் பார்த்த அந்த அக்காவுக்குள்ளே ஒரு மின்னல் ஐடியா. அடுத்த ஞாயிற்றுக்கிழமையே அந்த கிரவுண்டுக்கு  20 லிட்டர் வாட்டர் கேன்களை கொண்டுட்டு வந்து,  அதை ஒரு லிட்டர் பாட்டிலில் பிரித்து எடுத்து ஒரு பாட்டில் அஞ்சு ரூவான்னு விற்க ஆரம்பிச்சிருக்காங்க.

இதுக்காகவே ஞாயிற்றுக்கிழமை ஒருநாள் மட்டும் வேலை செய்ற வீடுகளில் காலையும், மாலையும் பெர்மிஷன்  வாங்கிட்டு கிரவுண்டுக்கு வந்துடுவாங்க. ஆரம்பத்துல 10 கேன்ல ஆரம்பிச்சு,  ஒரு கட்டத்துல 50 கேன் வரைக்கும் விற்பனை செய்ய ஆரம்பிச்சுட்டாங்க.

20 லிட்டர் கேனை  25 ரூபாய்க்கு வாங்கி அதை20 பாட்டில்களில் நிரப்பி விக் குறப்ப அதை 100 ரூபாய்க்குவிற்க முடியும். அப்போ அவங்களுக்கு ஒரு கேன்ல 75 ரூபா லாபம். அப்போ 50 கேன்ல 3,750 ரூபா வரைக்கும் லாபம் கிடைக்கும்.  வாரத்துல அதுவும் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள்ல 4 ஆயிரம் ரூபா வரைக்கும் சம்பாதிக்கிறாங்க. இன்ஜினீயரிங்  படிச்சு முடிச்சோன்னகூட  இவ்வளவு சம்பாத்தியம் வருமாங்கிறது கேள்விக்குறிதான்.  மாதத்துல எப்படியும்  15 ஆயிரம் ரூபாவரைக்கும்  அவங்களால இதில்  சம்பாதிக்க முடியுது. இன்னைக்கு அந்தப் பகுதியில இருக்குற சின்ன சின்னகிரவுண்ட் வரைக்கும் அவங்கவியாபாரம் பரவத் தொடங்கிடுச்சு. முயற்சி தோற்கலாம்... முயற்சிக்கத் தோற்கலாமா?

எந்த வேலையிலும் அதில் ஸ்மார்ட்னெஸ் இருக்கணும். ‘எனக்கு ஒரு ஐடியா இருக்கு? ஆனா அதை எப்படி செயல்படுத்துறதுன்னு தெரியல? யாரும் அதுக்கு உதவ முன் வரலை?’ இப்படி சிலர் சொல்றாங்க. நான் பார்த்த அந்த அக்காவுக்கு யாருமே சப்போர்ட் இல்லையே. அவங்க ஒரு இடத்துக்கு போனாங்க. அங்கே ஒரு வாய்ப்பை பார்க்குறாங்க. ரெண்டு கைகளாலும் அதை இறுக்கமா பிடிச்சிக்கிட்டாங்க. ஆகவே, நமக்கான வாய்ப்பை அடுத்தவர்கள் உருவாக்கி  கொடுக்கணும்னு நினைக்காமல் நாமே உருவாக்கிக்கணும்கிறதுக்கு சரியான முன்னுதாரண மாவும், இரும்பு மனுஷியாவும் அந்த அக்காவை நான் பார்க்கிறேன்.

அடுத்த வாரம்… இதேபோல ஒரு ஆட்டோக்கார அண்ணாவைப் பற்றி சொல்வேன்.

- நிமிடங்கள் ஓடும்....

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x