Published : 04 Feb 2019 08:57 am

Updated : 04 Feb 2019 08:57 am

 

Published : 04 Feb 2019 08:57 AM
Last Updated : 04 Feb 2019 08:57 AM

புலயருக்கு எப்போது விடுதலை?

பொருளாதாரத்தின் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு சட்டம் பற்றிய விவாதங்களில், விளிம்புநிலை சமூகமான புலயர்களின் புலம்பல் நம் காதுகளை எட்டாதிருக்கிறது. தமிழ்நாட்டில் ஒரு சமூகத்தை ‘வாயில்லா பூச்சி’ என துணிந்து சொல்லலாம் என்றால் அவர்கள் பழங்குடி மக்கள் மட்டுமே. நம்மைப்போல் மாடி வீடு கட்டி காரில் போக வேண்டும் என்ற ஆசைகள் இல்லாதவர்கள். தானுண்டு தான் வேலையுண்டு என்று மலையை கொடையாக நினைத்து வாழ்பவர்கள். இந்த மக்கள்தான் இப்போது போராடக் களத்துக்கு வந்திருக்கிறார்கள்.

‘பழங்குடியினராக இருந்த புலயர் சமூகத்தை 1976ல் பட்டியல் இனத்தவர் பட்டியலில் சேர்த்துவிட்டார்கள். ‘எங்களை மீண்டும் பழங்குடியினராக மாற்றுங்கள்’ என 40 ஆண்டுகளுக்கு மேலாக இவர்களது குரலை அரசுகள் கண்டுகொள்வதே இல்லை. தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருந்த பல சாதிகளை கோரிக்கை வைக்காமலே மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சாதியினர் என அறிவித்த அரசு இவர்களின் கோரிக்கையை செவி மடுக்காததற்கு ‘எண்ணிக்கையும்’ ஓர் காரணம்.

பாதிக்கப்படும் வேலைவாய்ப்பு

தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்ட மலைகளில் புலயர் என்ற மலைவாழ் மக்கள் தோராயமாக 30 ஆயிரம் பேர்தான் இருக்கிறார்கள். அதிலும், தாண்டிக்குடி அருகே உள்ள புலயன் கால்வாய் என்ற மலைக்கிராமத்தில்தான் அடர்த்தியாக இருக்கிறார்கள். இந்த ஊரைச்சேர்ந்த மாதி என்பவர் பகுதி நேர அஞ்சலக ஊழியராக பணி செய்து ஓய்வு பெற்றவர்.

 ‘‘காமராஜர் ஆட்சி காலத்தில் உண்டு உறைவிட பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்தாங்க. ‘மத்திய அரசு வேலையில் பழங்குடியினர் ஒதுக்கீட்டை நிரப்ப ஆளில்லை. எட்டாவது படித்தால் போதும் வேலை உறுதி’ என்று எஸ்சி, எஸ்டி அமைப்பைச் சேர்ந்தவர்களும் சொல்லிவிட்டுப் போனார்கள். கொடைக்கானல் மலையில் பலருக்கும் ரயில்வேயில் கடைநிலை பணியாளர் வேலை கிடத்தது. எனக்கு அஞ்சல் துறையில் பகுதி நேர பணியாளர் வேலை கிடைத்தது. 1980ல் நான் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி பாஸ் ஆனேன்.

தற்போதைய தேதியில் புதிதாக சாதிச்சான்று வாங்கிக் கொடுத்தால் பதவி உயர்வு கொடுப்பதாக மேல் அதிகாரிகள் சொன்னார்கள். கொடைக்கானல் தாசில்தாரிடம் 1984ல் சாதிச் சான்று கேட்டபோது, பட்டியல் இனத்தவர் என்று சான்று கொடுத்தார்கள். நான் எனது பழைய எஸ்டி சான்றைக் காட்டி கேள்வி கேட்டபோது, ‘1974 முதல் புலயர்களை எஸ்சியாக மத்திய அரசு மாற்றிவிட்டது’ என்று சொன்னாங்க. இப்படி நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த புலயர்களும் பாதிக்கப்பட்டோம். என்ன காரணங்கள் அடிப்படையில் எஸ்டியிலிருந்து எஸ்சியாக மாற்றினார்கள் என்று அரசிடம் மனு மேல் மனு கொடுத்தும் பதில் இல்லை. தகவல் பெறும் உரிமைச் சட்டம் வந்த பிறகும் அதே கதிதான்” என்கிறார் மாதி.

தொடக்கத்திலேயே எதிர்ப்பு

இந்தச் சமூகத்தில் கொஞ்சம் விவரமானவரான காந்தி, ரயில்வேயில் வேலை பார்த்தவர். அவர், தங்களை எஸ்சியாக மாற்றியதை எதிர்த்து, அப்போதே திருச்சி நீதிமன்றத்தில் வழக்கு போட்டிருக்கிறார். உரிமையியல் மற்றும் மாவட்ட நீதிமன்றத்தில் ‘புலயர்களை எஸ்சியாக அறிவித்தது தவறு’ என்று தீர்ப்பு வந்திருக்கிறது. தமிழக அரசு செய்த மேல்முறையீட்டில், ‘ஒரு சமூகத்தை எஸ்சியாகவோ எஸ்டியாகவோ, பிசியாகவோ அறிவிக்க அரசுக்கு அதிகாரம் உண்டு. அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது’ என்று சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிவிட்டது.

அதற்கு மேல் பிரச்சினையைக் கொண்டுசெல்ல பணமோ, சட்ட உதவியோ இல்லாததால் விதியே என்று நொந்து கொண்டது இந்தச் சமூகம். “2006ம் ஆண்டு வனச்சட்டத்தின் படி மூன்று தலைமுறையாக வனத்தினுள் வாழும் மக்களுக்கு பத்து ஏக்கர் நிலமும், வீடு கட்ட பத்து சென்ட் நிலமும், வன விளைபொருள்கள் சேகரிக்கும் உரிமைகள் உண்டு. எங்களுக்கு இதெல்லாம் கிடைக்காததால், நாங்கள் தலைமுறை தலைமுறையாக காட்டுக்குள்ளே வாழ்கிறோம்” என்கிறார் காந்தியின் மகன் சேகர்.

கேரளம் எப்படி அளவுகோலாகும்?

புலயர் சமூகத்தை பற்றி ஆய்வு மேற்கொண்ட வடிவேல் ராவணன், “தமிழகத்தில் பழங்குடியினர் பட்டியலில் பளியர், புதர வண்ணான், இருளர், காட்டுநாயக்கர், முதுவாகுடி என 18 சாதிப் பட்டியலில் புலயரும் இருந்தனர். 1974ல் பழங்குடியினர் பட்டியலை மறு சீரமைப்பு செய்திட இந்திய அரசு குழு அமைத்தது. இந்தக் குழுவினர் கேரளத்தை மையமாக வைத்து ஆய்வு மேற்கொண்டு ‘கேரளத்தில் உள்ள சேரமார் புலயர் தரைப் பகுதியில் வாழ்கிறார்கள். நில உடமையாளர்களாக இருக்கிறார்கள். பொருளாதாரத்திலும் இவர்கள் முன்னேற்றம் கண்டுள்ளனர். இதனால் புலயர்களை பழங்குடிப் பட்டியலிருந்து நீக்கலாம்’ என அரசுக்கு பரிந்துரைத்தது. இதனை ஏற்ற அரசு புலயர்களை பட்டியல் இனத்தவராக மாற்றியது.

‘இடம் பெயர்தல், மலைகளில் வாழ்தல், பிற சமூகத்தினரிடம் ஒன்றி வாழாதிருத்தல், யாரையும் எளிதில் நம்பாமை, தனித்த பழக்க வழக்கங்கள், தங்களுக்கென்ற தனிமொழிநடை, தனித்த இசைக்கருவி, நடனம் இவை அனைத்தும் பழங்குடி மக்களுக்குரிய பண்புகள். பழங்குடியினருக்கான அரசு வரையறையில் சொல்லப்பட்டுள்ள பண்பாட்டுக் கூறுகள், வாழ்க்கை முறைகள் அனைத்தும் புலயர்களிடம் இருப்பதை கள ஆய்வில் கண்டேன். எனது முப்பது பக்க ஆய்வைப் புத்தகமாக தொகுத்து 15 ஆண்டுகளுக்கு முன்பு பாமக மூலம் சமூகம் மற்றும் அதிகாரம் வழங்கும் மத்திய அமைச்சகத்திடம் நேரடியாகக் கொடுத்தோம். அரசு பரிசீலிப்பதாக கடிதம் அனுப்பியதே தவிர எந்த நடவடிக்கையும் இல்லை’’ எனச் சொல்கிறார் வடிவேல் ராவணன்.

இந்தக் கோரிக்கையை பரிசீலிக்க மானுடவியல் ஆய்வாளர் மகேஸ்வரன் தலைமையிலான குழுவை மத்திய அரசு அமைத்தது. அக்குழு ''சங்க இலக்கியங்களில் உள்ள சொற்களை இம்மக்கள் புழக்கச் சொற்களாகப் பயன்படுத்துகிறார்கள். இவர்களின் பழக்க வழக்கங்கள் பொருளாதார நிலையைப்பார்க்கும் போது பழங்குடியினராக அங்கீகரிக்கலாம்” என தனது அறிக்கையை தாக்கல் செய்தது. ஆனால், அது இன்னும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் கிடப்பிலேயே கிடக்கிறது.

பாரதி ‘இனி பறையருக்கும் புலையருக்கும் விடுதலை’ எனப் பாடி அரைநூற்றாண்டுக்கும் மேலாகி விட்டது. இவர்களுக்கு எப்போது விடுதலை?

- இரா.முத்துநாகு,

ஆய்வாளர், ‘சுளுந்தீ’ நாவலாசிரியர்.

தொடர்புக்கு: rmnagu@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x