Published : 21 Jan 2019 08:59 AM
Last Updated : 21 Jan 2019 08:59 AM

லெனின்: இலக்கியமே புரட்சியின் இயக்குவிசை!

நவம்பர் 7, 1917. வரலாற்றின் பக்கங்களில் தனித்துவம் கொண்ட நாள். ரஷ்யாவில் தற்காலிக அரசாங்கம் நீக்கப்பட்டு, தொழிலாளர்களின் கைகளில் அரசு அதிகாரம் வந்தது. அன்று இரவே, குளிர்கால அரண்மனையில் அமைச்சர்கள் கைதுசெய்யப்பட்டனர். ஆட்சியிலிருந்த கெரென்ஸ்கி தப்பி ஓடிவிட்டார். அரோரா போர்க் கப்பல் வெற்றி முழக்கமிட்டது.

போல்ஷ்விக் தலைவர்களும் தொண்டர்களும் உற்சாகம் மேலிட ஒருவரையொருவர் தழுவிக்கொண்டனர். புரட்சி நடைபெற்ற அன்றைய இரவில், புருயெவிச் வீட்டில் தங்கியிருந்தார் லெனின். தொடர்ந்து ஒரு வாரகாலம் அவர் தூங்கவில்லை. தாம் கண்ட கனவு நனவாகிவிட்ட மகிழ்ச்சி வேறு. இன்று தூக்கம் வருமா..?

உழுபவனுக்கே நிலம் சொந்தம்

புருயெவிச் குடும்பத்தினரும், லெனினின் துணைவியார் க்ருப்ஸ்கயாவும் பின்னிரவில் தூங்கிய பிறகு, தனது அறையிலிருந்து எழுந்துவந்த லெனின், மேஜை விளக்கின் வெளிச்சத்தில் மைக்கூட்டைத் திறந்து எழுத ஆரம்பித்தார். எழுதுவதும், அடித்துத் திரும்ப எழுதுவதுமாய் இருக்கிறார். விடிவதற்குள் மீண்டும் திருத்தமான படி ஒன்றை எடுக்கிறார். அதிகாலை நான்கு மணிக்குப் படுக்கைக்குச் செல்கிறார்.

மறு நாள் காலை ஆறு மணிக்கு எழுந்து ‘சோஷலிச புரட்சி வாழ்த்துகளை’த் தெரிவித்துவிட்டு, முந்தைய இரவில் எழுதியதைத் தோழர்களுக்கு வாசித்துக் காட்டுகிறார். அது புகழ்பெற்ற ‘நிலம் பற்றிய ஆணைப் பத்திரம்'. சோவியத் மாநாட்டில் அவர் முன்வைத்த முதல் பிரகடனம், சமாதானம் பற்றியது. இரண்டாவது பிரகடனம், நிலம் பற்றிய ஆணை.

‘நிலத்தின் மீதான தனியுடமை எவ்வித நட்டஈடுமின்றி உடனடியாக ஒழிக்கப்படுகிறது. நிலங்கள் அனைத்தும் உழும் குடியானவர்களுக்கே சொந்தம். அரசனுக்கு, நிலச்சுவான்தாரர்களுக்கு, தேவாலயங்களுக்குச் சொந்தமான நிலங்கள் அனைத்தும் உள்ளூர் குழுக்களிடமும், விவசாயப் பிரதிநிதிகளது சோவியத்துக்களிடமும் ஒப்படைக்கப்படும். சாதாரண சிறு விவசாயிகளின் நிலங்களோ, கசாக்குகளின் நிலங்களோ கைப்பற்றப்படாது’ என்ற அந்த ஆணையின் விவரங்கள் உடனடியாகப் பல லட்சம் பிரதிகள் அச்சடிக்கப்பட்டு, கிராமங்களில் விநியோகிக்கப்பட்டன. மறு நாள் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் பார்த்து விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இது உண்மைதானா என்று ஒருவருக்கொருவர் கேட்டுக்கொண்டனர்.

உயிர் தப்பிய தருணம்

ஆகஸ்ட் 30, 1918 மாலை 6 மணி. தொழிற்சாலை ஒன்றின் வாயில் முகப்புக் கூட்டத்தில், தொழிலாளர்கள் மத்தியில் பேசிவிட்டுத் தனது காரில் ஏறப்போன லெனினை நோக்கித் துப்பாக்கியால் சுடுகிறாள் அந்த இளம்பெண். மூன்று முறை சுடுகிறாள் அவள். முதல் குண்டு அவரது கைகளில்... இரண்டாவது குண்டு அவரது கழுத்தில்... மூன்றாவது குண்டு குறிதவறி அருகிலிருந்த ஒரு பெண்ணின் மேல் பாய்கிறது. சோஷலிஸ்ட் புரட்சிவாத பயங்கரவாதியான பான்னி கப்ளான் என்ற பெண்மணிதான் அவரைச் சுட்டவள். அவளும், அவளோடு வந்த மற்றொரு கூட்டாளியும் உடனே கைதுசெய்யப்படுகிறார்கள்.

லெனினை உடனடியாக அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்கிறார் அவரது கார் டிரைவர் ஸ்தெபான் கில். நாடு முழுவதும் லெனின் மீது நடந்த தாக்குதல் குறித்துச் செய்தி பரவுகிறது. துயரத்தில் மூழ்கினர் ரஷ்ய மக்கள். மூன்றே வாரங்களில் மீண்டு எழுந்தார் லெனின்.

மக்கள் கமிஸார் கூட்டங்களில் கலந்துகொள்ள ஆரம்பித்தார். எனினும், பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட லெனின், 1922 நவம்பர் 20-க்குப் பிறகு, பொதுநிகழ்வில் பங்கேற்கவில்லை. மாஸ்கோ சோவியத்தின் விரிவடைந்த கூட்டத்தில் அவர் பேசியதே கடைசிப் பேச்சு.

ஓய்வெடுப்பதற்காக கோர்க்கி கிராமத்தில் தங்கியிருந்தார் லெனின். பக்கவாதம் வலதுபுறத்தைத் தாக்கியிருந்ததால், இடதுகையால் எழுத முயற்சிசெய்தார். பேச்சும் சரியாக வராமல் இருந்தபோது, அவரது மனைவி க்ருப்ஸ்கயா அவருக்குப் பேச்சுப் பயிற்சியளித்தார்.

பல்லாயிரம் மக்கள் திரளுக்கு மத்தியில் ஆவேச உரையாற்றிய அந்த மாமேதைக்கு ஒவ்வொரு சொல்லாய் உச்சரிக்கப் பயிற்சி கொடுத்துவந்தார். நல்ல இயற்கைச் சூழல். பறவைகளின் கீச்சொலி எப்போதும் கேட்டுக்கொண்டேயிருந்தது.

அவருக்கு 1917 தொடக்கத்தில், பெட்ரோகிரேட் அருகே இருந்த கிராமத்தில் புல் அறுக்கும் பின்லாந்து வாசியாகத் தலைமறைவாக இருந்த காலம் நினைவுக்குவந்தது. எமால்யனோவ் என்ற விவசாயக் குடும்பத்தின் பாதுகாப்பில் அவர் இருந்தபோது, குழந்தைகளோடு ஆற்றில் நீச்சல் அடித்ததும், அடர்ந்த காடுகளுக்குள் அமர்ந்து இயற்கையை ரசித்ததும்கூட நினைவில்வந்தது. அதுபோன்ற நேரங்களில் அவர் எழுத்தாளர் கார்க்கியை நினைத்துக்கொள்வார்.

‘கார்க்கி இந்நேரம் இங்கே இருந்தால், இந்தச் சூழலை மிகவும் ரசிப்பாரே... கலைஞர்களுக்குத் தனிமை அவசியம். ஆனால், ஒரு அரசியல்வாதிக்குத் தனிமை கூடவே கூடாது. படைப்பாளிகள் தனிமையில் இருக்கும்போதே மகத்தான இலக்கியத்தைப் படைக்கிறார்கள். அரசியல்வாதிகளோ மக்களோடு இருந்தே மகத்தான பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்று ஒரு படைப்பாளியின் சமூகப் பணியை மதிப்பீடுசெய்கிறார் லெனின்.

லெனினுக்குப் பிடித்த சிறுகதை

ஜனவரி 19, 1924. இரவு. அமெரிக்க எழுத்தாளர் ஜாக் லண்டன் எழுத்துக்கள் லெனினுக்கு ரொம்பவும் பிடிக்கும். அவரது ‘உயிராசை’ என்ற சிறுகதையை அவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ரசித்துப் படிப்பதுண்டு. அன்றைய தினம், அந்தக் கதையை க்ருப்ஸ்கயா வாசிக்க, படுக்கையிலிருந்த லெனின் பேராவலுடன் முதல் தடவை கேட்பதுபோலக் கேட்டுக்கொண்டிருந்தார்.

பனிப் பிரதேசத்தில் சிக்கிக்கொண்ட ஒரு மனிதன். கிடைத்ததை உண்டு நடக்கிறான். முடிவில் நடக்க இயலாது தவழ்ந்து போகிறான். முட்டிகளிலிருந்து ரத்தம் வழிகிறது. அவனைப் பின்தொடர்ந்து ஒரு ஓநாய் ரத்தத்தை நக்கிக்கொண்டே வருகிறது, இவன் எப்போது சாவான் என்று. ஓநாய்க்கும் மனிதனுக்கும் உயிர்காக்கும் போராட்டம். ஒருகட்டத்தில், தனது சக்தி அனைத்தையும் திரட்டி, ஓநாயைக் கொல்கிறான் மனிதன். தூரத்தே கடல்... அதில் ஒரு கப்பல். இலக்கு நோக்கி வந்துவிட்ட அந்த மனிதனின் கதை அவருக்கு எப்போதுமே தன்னம்பிக்கை ஊட்டும்.

எத்தனை சோதனைகள் வந்தாலும், மனிதன் அதை எதிர்த்து வெற்றிபெற வேண்டும் என்று நினைத்த லெனினுக்கு, இந்தச் சிறுகதை பிடித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. அதற்கு இரண்டு நாட்கள் கழித்து, ஜனவரி 21 மாலையில், மூளை ரத்த நாளம் வெடித்து லெனின் மரணமடைந்தார்.

-இரா.நாறும்பூநாதன்

தொடர்புக்கு: narumpu@gmail.com

ஜனவரி 21 : லெனின் நினைவு நாள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x