Published : 02 Oct 2018 09:39 AM
Last Updated : 02 Oct 2018 09:39 AM

உலகுக்கு காந்தி கொடுத்துச் சென்றிருப்பது என்ன?

இந்திய சுதந்திரப் போராட்டக் களத்துக்கு காந்தி வருவதற்கு முன்னரே ஏராளமான தலைவர்கள் இங்கே இருந்தனர். அவர்கள் படித்தவர்கள்; பணம் படைத்தவர்கள். வலிமை வாய்ந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து முழங்கிக்கொண்டிருந்தவர்கள். ஆனால், தென் ஆப்பிரிக்காவிலிருந்து காந்தி இந்தியா திரும்பிய பின்னரே ஒட்டுமொத்தச் சூழலும் மாறியது. எப்படி?

தன்னுடைய அரசியல் குரு என்று பின்னாளில் அவர் குறிப்பிட்ட கோகலே சொன்னபடி, முழு இந்தியாவையும் சுற்றிவந்த அவர், மக்களைப் படித்தார். சாமானிய மக்களின் மொழியைப் படித்தார். அதுவரை, இந்திய அரசியலிலிருந்து பார்வையாளர்களாக விலக்கி வெளியே வைக்கப்பட்டிருந்த சாமானிய மக்களை, குறிப்பாகப் பெண்களை அரசியல் களம் நோக்கி இழுத்துவந்தார்.

ரவீந்திரநாத் தாகூரின் வார்த்தைகள் அந்தக் காலத்தை அப்படியே நம் கண் முன் கொண்டுவருகின்றன: “நிர்க்கதியான பல்லாயிரக்கணக்கான ஏழைகள் வாழும் குடிசைகளின் வாயில்களில் நின்று அவர்களில் ஒருவராக ஆடையணிந்தார். புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டாமல், உண்மை எங்கே இருக்கிறதோ அதையே மக்களிடம் சுட்டிக்காட்டினார். மக்களின் மொழி என்னவோ அந்த மொழியிலேயே பேசினார். ஓர் அரசியல் தலைவராகப் பார்ப்பதைவிட ஒரு துறவியைப் பார்ப்பதைப் போல மக்கள் அவரைப் பார்த்தனர். இந்திய மக்களால் அவருக்குக் கொடுக்கப்பட்ட பெயர் மகாத்மா. அவரைப் போல் வேறு யாரால் இந்தியர் அனைவரையும் தனது ரத்தமும் சதையுமாக நேசிக்க முடியும்?”

சுதந்திரப் போராட்ட காலத்தின் ஒட்டுமொத்த நிகழ்வுகளும் அவரது கட்டுப்பாட்டுக்குள்ளேயே இருந்ததாக எவரும் சொல்ல முடியாது. அது ஒரு பெரும் போக்கு. அவரது கைகளுக்குள்ளேயும் அவரது கைகளை மீறிப் பல காரியங்கள் நடந்தன.  ஏக இந்தியாவும் ஒரே நாடாகச் சுதந்திரம் அடையப்போகிறது என்னும் நம்பிக்கையிலேயே காந்தி தனது கடமைகளைச் செய்துகொண்டிருந்தார்.

ஆனாலும், தேசம் இரண்டாகப் பிளந்தது. இந்தியா என்றும், பாகிஸ்தான் என்றும் இரு நாடுகள் உருவாகின.

“என் பிணத்தின் மீதுதான் இந்தியா பிளவுபட முடியும்” என்று சொன்ன காந்தி, “தூக்கமற்ற இரவுகளைச் சந்திக்கிறேன். நான் தனிமைப்படுத்தப்பட்டுவிட்டேன். ஓர் அனாதையைப் போல் உணர்கிறேன். வனாந்திரத்தில் காரிருளில் நிற்கிறேன்” என்று பிற்பாடு சொன்னது பல விஷயங்களை நமக்கு உணர்த்தக் கூடியது. நிச்சயமாக, அதிகாரத்துக்கு வெளியே தன்னை நிறுத்திக்கொண்டிருந்தார் காந்தி. துரதிர்ஷ்டவசமாக அவரது சகாக்களுக்கு அதிகாரம், முக்கியமானதாக இருந்தது. எல்லாத் தரப்பினருக்கும்தான்.

இரண்டு நாடுகளும் எல்லைக் கோடுகளால் பிரிக்கப்பட்டு மனிதர்கள் இடம்பெயர்ந்தபோது ரத்த ஆறு ஓடியது. எங்கும் பிணக்குவியல். இரு புறங்களிலும் மத வெறி. மரண ஓலம்.  சுதந்திரத்தின் தொடர்ச்சியாக, இரு நாடுகளின் தலைவர்களும் அடுத்தடுத்த அதிகார சட்டகங்களை உருவாக்கிக்கொண்டிருந்தபோது, காந்தி கலவர பூமியில் பாதிக்கப்பட்ட மக்கள் நடுவே நின்றார். கழுகுகளும், கோட்டானும் வட்டமிடும் சுடுகாட்டுப் பாதையில் நடந்துசென்றார்.

1947 ஆகஸ்ட் 15 அன்று காந்தி டெல்லியில் இல்லை என்பதும், கலவரத்தால் பாதிக்கப்பட்ட அன்றைய கல்கத்தாவின் தெருக்களில் சமாதானத்தை உருவாக்க நடந்துகொண்டிருந்தார் என்பதும் உலக சரித்திரத்தில் எழுதப்பட்ட உன்னதமான அத்தியாயம். அன்றைக்கு வங்காள மாகாண முதல்வராக இருந்த ஹுசைன் ஷஹீத் சுராவர்தி அதிகாரத்தைப் பயன்படுத்திக் கலவரத்தைத் தூண்டுகிறார் என்ற சந்தேகத்தின் நிழல் படிந்திருந்த மனிதர் அவர். மதக்கலவரம் கொழுந்துவிட்டு எரிந்த அந்தப் பகுதியில் பாழடைந்த ஒரு வீட்டில் சுராவர்தியோடு தங்கினார் அடிகள். ‘அவரோடு தங்காதீர்கள்’ என்ற எச்சரிக்கையும் காந்திக்கு வந்தது. வெறுப்பு எங்கே இருக்கிறதோ அங்கேதான் கசப்பும் காயமும் இருக்கும். அங்குதான் உரையாடவும் வேண்டும். காந்தி சுராவர்தியுடன் உரையாடினார். இரு தரப்பு மக்களிடமும் மாறி மாறிப் பேசினார். வெறுப்பும் ரத்தமும் கொப்பளித்துக்கொண்டிருந்த நிலத்தில் சமாதானத்தைக் கொண்டுவந்தார். “பஞ்சாபில் ராணுவப் படைகளைக் கையில் வைத்துக்கொண்டு உருவாக்க முடியாத அமைதியை, தனி ஒரு ஆளாக வங்காளத்தில் காந்தி உருவாக்கிவிட்டார்” என்று மவுன்ட்பேட்டன் சொன்னது இந்தியாவின் தேய்வழக்காகிப்போன கூற்று. ஆனால், இன்று நானும் அதைக் குறிப்பிடக் காரணம் ஒரு தலைவரின் பிரதான அக்கறை எதுவாக இருக்க வேண்டும், ஒரு தலைவர் எப்படி எல்லோருக்கானவராகவும் இருக்க வேண்டும் என்பதை காந்தி தன் வாழ்க்கையினால் மிக ஆழமாக உணர்த்திய நிகழ்வு இது என்பதுதான். பல்லாயிரக்கணக்கான பக்கங்களை எழுதிய காந்தி, “என் வாழ்க்கையே நான் விட்டுச் செல்லும் செய்தி” என்று சொன்னதன் அர்த்தம் இதுதான்.

அன்பு, சத்தியம் – இந்த இரண்டின் ஊடாகத்தான் தன்னுடைய ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அவர் செதுக்கிக்கொண்டார் என்பதோடு, இவ்வளவு பெரிய நாட்டின் வரலாற்றையும் தீர்மானித்தார் என்பது இன்று பலருக்கு நம்ப முடியாமல் இருக்கலாம். ஆனால், எல்லோருக்கும் சாத்தியமான அந்த இரு எளிய கருவிகள்தான் காந்தியின் மகத்தான ஆயுதங்களாக மிளிர்ந்தன. அரசியலில் அறம் நாடுவோருக்கு அவர் கொடுத்துச் சென்றிருக்கும் மகத்தான ஆயுதங்களும் அவைதான்!

- திரு. வீரபாண்டியன், ஊடகவியலாளர்,

தொடர்புக்கு: thiru.veerapandian@gmail.com

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x