Published : 24 Oct 2018 09:57 AM
Last Updated : 24 Oct 2018 09:57 AM

காந்தி பேசுகிறார்: தாய்மொழிக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

வரவேற்பு ஆங்கில மொழியில் பொறிக்கப்பட்டிருத்தல் காண்கிறேன். இந்திய தேசிய காங்கிரஸில் சுதேசித் தீர்மானம் நிறைவேறியிருக்கிறது. நீங்கள் சுதேசிகள் என்று கருதிக்கொண்டு, இவ்வறிக்கையை ஆங்கில மொழியில் அச்சிறுத்தினால் நான் சுதேசியல்லன். ஆங்கில மொழிக்கு மாறாக யான் ஒன்றும் சொல்வதற்கில்லை. நீங்கள் உங்கள் நாட்டு மொழியைக் கொன்று, அவற்றின் சமாதியின் மீது ஆங்கிலத்தை நிலவச் செய்வீர்களாயின் நீங்கள் நன்னெறியில் சுதேசியத்தை வளர்ப்பவர்களாக மாட்டீர்கள் என்று சொல்வேன். எனக்குத் தமிழ் மொழி தெரியாது என்று நீங்கள் உணர்ந்தால், அம்மொழியை எனக்குக் கற்பிக்கவும் அதைப் பயிலுமாறு என்னைக் கேட்கவும் வேண்டும். அவ்வினிய மொழியில் அறிக்கை அளித்து அதை மொழிபெயர்த்து உணர்த்தியிருப்பீர்களாயின் உங்கள் கடனை ஒருவாறு ஆற்றினவர்கள் ஆவீர்கள்.

- மயிலாடுதுறையில் 1915-ல் காந்தி ஆற்றிய உரை

திருக்குறளைப் பற்றி சில மொழிகள் உங்கள் வரவேற்பறையில் மிளிர்கின்றன. இருபதாண்டுகளுக்கு முன்னரே யான் தமிழ் பயிலத் தொடங்கியதற்குக் காரணம், திருக்குறள் மூலத்தையே நேரடியாகப் படித்தல் வேண்டும் என்று என்னுள் எழுந்த அவாவே ஆகும். தமிழ் மொழியில் புலமை பெறுவதற்குரிய ஓய்வு எனக்கு ஆண்டவன் அருளினானில்லை. அது குறித்து யான் உறும் வருத்தத்திற்கோர் அளவில்லை.

தமிழ் மொழிப் பயிற்சியைப் பற்றி நான் ஒன்றும் கூறியதில்லை என்று சிலர் என் மீது பழிசுமத்துவதாக நான் கேள்வியுற்றேன். அப்பழி என்னை அணுகாது. என்னை நன்கறிந்தவர் என் மீது அப்பழி சுமத்த ஒருப்பட மாட்டார். ஆங்கிலம் பயில்வதற்கு முன் தமிழ் மொழி பயிலல் வேண்டும் என்று நான் பன்முறை பகிர்ந்திருக்கிறேன். 1915-லேயே ஆங்கிலத்தினும் தமிழ் மொழியைச் சிறப்பாகக் கொள்ளுமாறு தமிழ் மக்களை வேண்டிக்கொண்டேன். இன்றைக்குப் பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தியா முழுவதும் சுற்றிச் சுற்றி அந்நிய மொழி வாயிலாக பிள்ளைகளுக்குக் கல்வி புகட்டலாகாது என்று கிளர்ச்சி செய்தேன். தாய்மொழியில் பேசுமாறும் தாய்மொழி நூல்களைப் பயிலுமாறும் விண்ணப்பம் செய்துகொண்டேன்.

அவரவர் அவரவர்க்குரிய தாய் மொழியிலேயே கல்வி பெறல் வேண்டும். தமிழ் மக்கள் தங்கள் தாய் மொழியாகிய தமிழைப் பயில வேண்டுவது அவர்களது இன்றிமையாத கடமை. தமிழர் தம் மொழியை ஆங்கிலம் முதலிய மொழிகளைவிட முதன்மையாகக் கருதுதல் வேண்டும். தமிழ்நாட்டில் ஓரிடத்தில் எனக்கு ஆங்கிலத்தில் வரவேற்பறிக்கை வழங்கப்பட்டது. அதை உடனே யான் மறுத்துரைத்ததை நீங்கள் அறிந்திருக்கலாம். எனது மனோநிலை உணராது அடாத பழி இனி என்மீது சுமத்த மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

- தூத்துக்குடியில் அக்டோபர் 12, 1927-ல் காந்தி ஆற்றிய உரை

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x