Last Updated : 03 Jul, 2018 09:26 AM

 

Published : 03 Jul 2018 09:26 AM
Last Updated : 03 Jul 2018 09:26 AM

கி.மு. - கி.பி. பொ.ஆ.மு. - பொ.ஆ.பி. ஆண்டு பெயர்களின் அரசியல் என்ன?

கி

.மு., கி.பி. என்று ஆண்டுக் கணக்கைக் குறிப்பிடும் முறையை கி.பி. 525 வாக்கில் டயோனிசியஸ் எக்ஸிகூஸ் அறிமுகப்படுத்தினாலும் உடனடியாக இம்முறை வழக்கத்துக்கு வரவில்லை. 15-ம் நூற்றாண்டுக்குப் பின்னர், உலகம் முழுவதும் ஐரோப்பிய நாடுகளின் காலனியாகிய பிறகுதான், ‘கி.மு. - கி.பி.’ உலகம் முழுவதும் பரவலானது.

கி.மு.-கி.பி. பரவலான அதே காலகட்டத்திலேயே டயோனிசியஸ் முறைக்கு மாற்றுக் கருத்துகளும் உருவாயின. அவற்றில் ஒன்று, ‘வல்கர் எரா’ என்பது ஆகும். ‘வல்கிஸ்’ (பொது மக்கள்) என்ற லத்தீன் சொல்லிலிருந்து உருவான இதன் பொருள் ‘பொதுமக்கள் ஆண்டு’ என்பதாகும். இந்தச் சொற்கள்தான் சற்றுத் திருத்தப்பட்டு, பொது ஆண்டு (காமன் எரா) என்று அழைக்கப்பட்டது. ‘வல்கர் எரா’ என்ற சொல் 1635 முதல் பயன்படுத்தப்பட்டுவருகிறது. ஆங்கிலத்தில், ‘காமன் எரா’ என்ற சொல் பயன்பாடு 1708 முதல் காணப்படுகிறது.

அரசுகள், கல்வி நிறுவனங்கள், வரலாற்றாளர்கள் பெரும்பாலும் கி.மு./ கி.பி. முறையையே பயன்படுத்திவந்தாலும் மதச்சார்பின்மையாளர்கள் பொது ஆண்டு முறையை வலியுறுத்தத் தொடங்கினர். குறிப்பாக 20-ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் கல்வியாளர்கள், அறிவியல் எழுத்தாளர்கள் இம்முறையை ஆதரித்து தங்கள் எழுத்துகளில் தொடர்ந்து பயன்படுத்தத் தொடங்கினர். இவ்வாறு ஒரு பக்கம் கி.மு./ கி.பி. முறை பெருவாரியாகப் பயன்படுத்தப்பட்டாலும், நவீன கருத்தாக்கங்களின்படி பொது ஆண்டு என்று பயன்படுத்துவதே மதச்சார்பற்ற தன்மை கொண்டதாகவும் உலகளாவிய தன்மைக்குச் சரியான முறையாகவும் இருக்கும் என்ற கருத்தும் மறுபக்கத்தில் வலுப்பெற்றுவந்தது. இதன் செல்வாக்கின் காரணமாக இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற கிறித்துவ மதத்தைப் பின்பற்றும் சில மேற்கத்திய நாடுகளின் அரசுகள், தமது கல்வித் திட்டங்களில் பொது ஆண்டு முறையை அறிமுகப்படுத்த அனு மதித்தன. நமது மத்திய அரசின் பாடத்திட்டத்தை வகுக்கும் தேசியக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் குழுவும் (என்.சி.இ.ஆர்.டி) பொது ஆண்டு முறையையே பின்பற்றுகிறது. மேலும், சமீபகாலமாக எழுதப்படும் வரலாற்று நூல்களும், அறிவியல் நூல்களும் பெரும்பாலும் பொது ஆண்டு முறை யைப் பின்பற்றியே எழுதப்படுகின்றன.

நடப்பு கல்வியாண்டில் தமிழகப் பாட நூல்களில் பொது ஆண்டு கணக்கு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. என்றாலும், கி.மு., கி.பி. ஆண்டுக் கணக்கே பின்பற்றப்படும் என்று சட்ட மன்றத்தில் அறிவித்திருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர். ஐநா முன்னாள் தலைமைச் செயலரும் தன்னளவில் சீர்திருத்தக் கிறித்துவ மதத்தைப் பின்பற்றுபவருமான கோஃபி அன்னான் கூறியது தற்போதைய தமிழகச் சூழலுக்கு மிகவும் பொருத்தமானது: “உலகம் முழுவதும் பல்வேறு நாகரிகங்கள், பல நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்கள், பல பண்பாடுகளைச் சேர்ந்தவர் கள் இன்று ஒரே நாட்காட்டியைப் பயன்படுத்திவருகின்றனர். எனவே, நீங்கள் விரும்புவதைப் போல மாற்றம் தேவைதான். கிறித்துவ ஆண்டு முறை பொது ஆண்டு முறையாக மாறியுள்ளது சரிதான்.”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x