Last Updated : 12 Jul, 2018 08:34 AM

 

Published : 12 Jul 2018 08:34 AM
Last Updated : 12 Jul 2018 08:34 AM

அழிவுக்கு வழிவகுக்கும் புதிய நெடுஞ்சாலைத் திட்டங்கள்!

ன்னட நாவலாசிரியரான சிவராம கரந்த், மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கை வளம் அழியாமல் காக்கப்பட வேண்டும் என்பதில் மிகுந்த அக்கறை கொண்டு பணியாற்றினார். அந்த உணர்வை மக்களுக்குத் தொடர்ந்து ஊட்டிவருகிறார், சுற்றுச்சூழலியலாளர் மாதவ் காட்கில். மேற்குத் தொடர்ச்சி மலையின் இரு பகுதிகளிலும் தன்னுடைய வாழ்க்கையின் பெரும்பகுதியைச் செலவிட்டவர் காட்கில். சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தையும், மலையின் சுற்றுச்சூழலையும் காப்பதை ஒரே நேரத்தில் மேற்கொண்டுவருகிறார். கட்டிடக் கலை, கலாச்சாரம் ஆகியவற்றில் கர்நாடகத்தின் இதர பகுதிகள் அதிக செல்வ வளம் கொண்டவையாக இருக்கலாம், மேற்குத் தொடர்ச்சி மலை மட்டுமே இயற்கை வளம் அதிகம் கொண்ட அற்புதமாகத் திகழ்கிறது.

இந்த அழகும் வளமும் இன்னும் எத்தனை நாளைக்கு நீடித்திருக்கும் என்று சொல்ல முடியவில்லை. கடந்த சில பத்தாண்டுகளில் இந்த மலைநாட்டின் மலைப் பாதை களும், அழகிய கடற்கரையோரமும் மனிதனின் கொடுங்கரங்களால் கொஞ்சம் கொஞ்சமாக சிதைக்கப்பட்டுவருவதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். குன்றுகளும் காடுகளும் படிப்படியாக வெட்டப்பட்டு அடையாளமே இல்லாமல் மாற்றப்பட்டுவிட்டன. ஆறுகள் அசுத்தப்பட்டுவிட்டன. மண்ணில் நஞ்சு கலந்துவிட்டது அல்லது பெருமழைக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் கரைந்துவிட்டது.

பெரிய நாசம் வருகிறது

இவற்றையெல்லாம் விடப் பெரிய நாசம், வாசல் தேடி வந்துகொண்டிருக்கிறது. சித்ரதுர்கா என்ற ஊரிலிருந்து தர்மஸ்தலாவுக்கு நான்குவழி மாநில நெடுஞ்சாலை அமைக்கப்படவிருக்கிறது. இந்தத் திட்டத்தால் சுமார் 50,000 மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படவுள்ளன. இவ்விரு நகரங்களை இணைக்க ஏற்கெனவே வேறு இரண்டு சாலைகள் இருக்கும் நிலையிலும் இந்த நான்குவழிப் பாதை திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. இதுவல்லாமல் வேறு சில சாலைகளையும் அமைக்க உத்தேசித்துள்ளனர். தீர்த்தஹள்ளி-மால்பே, சாகர்-கொல்லூர், ஷிகாரிபுரா-பைண்டூர் ஆகியவை அந்த நெடுஞ்சாலைத் திட்டங்களாகும். இந்த நெடுஞ்சாலை கள் மேற்குத் தொடர்ச்சி மலையை வெவ்வேறு இடங்களில் பிளக்கும். காடுகளையும் புதர்களையும் அழிக்கும். மண் சரிவுகளை உருவாக்கும். மழை, வெள்ளத்தில் மண் வளம் மேலும் அரிக்கப்படும். மரங்களாலும் புதர் களாலும் இறுகப்பற்றிய நிலையில் உள்ள தரைப் பகுதி பெருமழையில் கரைந்து, நெகிழ்ந்த நிலையிலிருக்கும் போது மண் அரிமானம் அதிகரிக்கும். அதனால் மண் சரியும். கட்டிடங்களும் சாலைகளும் அப்படியே புதையும். சாலை அமைக்கும்போது புழுதி கிளம்பி சூழலை நச்சுப்படுத்தும்.

மனிதர்களும் சரக்குகளும் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குச் செல்ல சாலை வசதிகள் அவசியம்தான். கர்நாடக மாநிலத்துக்கே இயற்கை அரணாக அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலையின் நாடி நரம்புகளை அறுத்தும், அதன் அடிவயிற்றைக் கிழித்தும் இப்படிக் குறுக்கும் நெடுக்குமாகச் சாலைகளை அமைப்பது அவசியம்தானா, இதற்கு மாற்றே இல்லையா என்று மக்கள் கேட்கின்றனர். இப்படிப் பல்வேறு ஊர்களை இணைக்கும் சாலைகளுக்குப் பதிலாக உள்நாட்டையும் கடலோரத்தையும் இணைக்க, இதைவிடச் செலவு குறைவான, சூழலைப் பாதிக்காத ரயில் பாதைகளை அமைத்தால் என்ன?

ஆபத்தான குடிநீர்த் திட்டங்கள்

கர்நாடகத்தின் மிகப் பெரிய நகரமான பெங்களூருவுக்குக் குடிநீர் வழங்க, இயற்கையை மேலும் பாதிக்கக்கூடிய குடிநீர்த் திட்டங்கள் உத்தேசிக்கப்பட்டுள்ளன. நேத்ராவதி ஆற்றின் தண்ணீரை பெங்களூருவுக்குத் திருப்பிவிட யெட்டினஹொளே திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பிரம்மாண்டமான குழாய்களைப் பதித்து அதன் மூலம் தண்ணீரை எடுத்துச்செல்வது இந்தத் திட்டம். குடிநீர்க் குழாய்கள், நீர்த்தேக்கத் தொட்டிகள், தண்ணீரை மேலேற்றும் பம்பு செட் இல்லங்கள், அலுவலகம், பணியாளர்களுக்கான குடியிருப்புகள் என்று லட்சக்கணக்கிலான மரங்களை வெட்டி இடம் தர முடிவுசெய்துள்ளனர்.

புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கும் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளக் கூட்டணி அரசு, அதைவிடப் பித்துக் குளித்தனமான திட்டம் ஒன்றை உத்தேசித்திருக்கிறது. இது இன்னொரு மேற்கத்திய ஆறான ஷராவதியி லிருந்து பெங்களூருவுக்குத் தண்ணீர் கொண்டுவரும் திட்டமாகும். லிங்கனமக்கி நீர்த்தேக்கத்திலிருந்து 425 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பெங்களூருவுக் குக் கொண்டுவரப்படவுள்ளது.

இப்படிப்பட்ட மோசமான திட்டங்களால் மரம், செடி - கொடி போன்ற தாவரங்களுக்கு மட்டுமல்லாமல் காடுகளில் வாழும் விலங்குகள், பறவைகள், பாலூட்டிகள், பூச்சியினங்கள் போன்றவற்றுக்கு ஏற்படக்கூடிய அழிவு அச்சமூட்டுவதாக இருக்கிறது. காடுகள் அழிவது மட்டுமல்ல, சமுதாயரீதியாக விவசாயத்தையும் வன நிலங் க ளையும் நம்பி வாழும் மக்களின் வாழ்வாதாரங்களும் சீர்குலையும். எல்லா மக்களுக்கும் ஜீவாதாரமாக இருக் கும் நதிநீர் இப்படி நகர்ப்புறத் தேவைகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்டால், நாளடைவில் அந்த நகரங்களுக்கும் போதாமல் எல்லோரையும் அழிவுக்கு ஆளாக்கிவிடும்.

அரசிடம் சில கேள்விகள்

“நகரங்களைவிட அதிக எண்ணிக்கையில் மக்கள் வாழும் கிராமங்களின் குடிநீர்த் தேவைகளுக்கு ஏன் அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை? மாநிலத்தில் விவசாயத்தின் செழிப்புக்குக் காரணங்களாக இருந்த ஆயிரக்கணக்கான ஏரிகளை மீட்கவும், அவற்றில் மழை நீரையும் வெள்ள நீரையும் சேமிக்கவும் தீவிரமான முயற்சிகள் ஏன் எடுக்கப்படவில்லை?” என்று அரசைக் கேட்க வேண்டும் மக்கள்.

பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என்று எந்தக் கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அரசியல்வாதிகள் எந்தத் திட்டங்கள் குறித்தும் உரிய துறைகளின் நிபுணர்களிடம் ஆலோசனை கேட்க மாட்டார்கள். இது அறியாமையால் அல்ல, உள்நோக்கத்தால்தான். அறிவியல் ஆலோசகர்களை நாடாமல், அதிகாரிகள் உதவியுடன் இப்படித் திட்டங்களைத் தீட்டினால்தான் தரகுத்தொகை மூலம் தங்களை வளப்படுத்திக்கொள்ள முடியும். சாலைகள், அணைகள், மின்உற்பத்தி நிலையங்கள் போன்றவற்றை உருவாக்கத் திட்டமிடுவது பெரும்பாலும் இந்த வகைகளில்தான்.

டெல்லியில் 17,000 மரங்களை வெட்டப்போவதாக வெளியான செய்தி குறித்து தேசிய ஊடகங்கள் மணிக் கணக்கில் விவாதித்தன. தேவையற்றதும் மடத்தனமான அந்தத் திட்டம், மத்திய அரசால் இப்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. கர்நாடகத்தில் இப்போது இவ்விரு திட்டங்கள் மூலம் 5 லட்சம் மரங்களுக்கும் மேல் வெட்டப்படவுள்ளன. தேசிய ஊடகங்கள் இதே அக்கறையை கர்நாடகம் மீது காட்டுமா? கர்நாடகம் என்னுடைய மாநிலம் என்பதற்காகக் கேட்கவில்லை. இமயமலையைப் போலவே நம்முடைய சுற்றுச்சூழல் தன்மைக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் முக்கியக் காரணமாக இருப்பவை மேற்குத் தொடர்ச்சி மலைகள் என்பதால் கேட்கிறேன்.

தமிழில்: சாரி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x