Last Updated : 26 Feb, 2024 04:30 AM

 

Published : 26 Feb 2024 04:30 AM
Last Updated : 26 Feb 2024 04:30 AM

தங்கங்களே நாளை தலைவர்களே...

எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் என்கிறது நறுந்தொகை.அதிவீர ராம பாண்டியர் எழுத்தை கற்றுக் கொடுத்தவர் வணங்கக்கூடிய அளவுக்கு மரியாதை பெற்றவர் என்ற பொருளில் இவ்வரிகளை ஆக்கியுள்ளார் என்பதில் சற்றும் ஐயம் இல்லை.

கருமமே கண்: மழலைகள் மலரும் பொழுதே அம்மலர்களுக்கு இவ்வுலகம் பல வண்ணங்களைத் தீட்டி விடுகிறது என்றே கூற வேண்டும். அனுபவத்திலும் ஆளுமையிலும் சிறந்து விளங்கும் பெற்றோர்கள் ஏற்கனவே பலவிதமான வண்ணங்களைத் தாங்குபவர்கள்.

அவர்களால் பேணி வளர்க்கப்படும், உருவாக்கப்படும், மலர்களும் பல வகையான வண்ண வண்ண மலர்களை ஈன்று எடுப்பதையே கனவாகக் கொள்கின்றனர். தனக்குஅருகில் இருக்கும் குழந்தைகளுடன் பழகுவதைக்கூட பட்டியலிட்டுப் பரிசோதித்து பழகச் சொல்லிப் பயிற்சி கொடுக்கின்றனர்.

பற்றுக பற்றை.... ஆசிரியருக்கும், மாணவர்களுக்கு மான பற்று என்பது இன்றைய காலக்கட்டத்தில் கேள்விக்குறியாக உள்ளது. அந்த காலம்... இந்த காலம்... என பிரித்துப் பார்க்கக் கூடிய காலகட்டத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அக்காலத்தில் பெற்றோர்களை விட ஆசிரியர்களே மிகவும் மதிக்கும், நம்பும் சமூகமாக இருந்தது.

ஆனால், தற்காலத்தில் ஆசிரியர்களின் அறிவை இரண்டாம்பட்சமாக, துச்சமாக, கேலியும் கிண்டலுமாக, கேள்விகுறியுமாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன நவீன யுகம். ஒருபுறம் வளர்ச்சி என்றாலும் மறுபுறம் அதுவளர்ச்சிக்கான வழியா என்று சற்றேசிந்திக்க வேண்டிய நிலையில் தான் உள்ளோம்.

எதைப்பற்றி கொள்வது? யாரைப் பற்றிக் கொள்வது? என்ற சந்தேகத்துடன் தேடலையே வழக்கமாகி கொண்டிருக்கக்கூடிய வாழ்க்கையையே தற்கால மாணவ சமூகம் கை கொண்டுள்ளது.

பயன்படுத்து தூக்கி எறி... வகுப்புக்கு வகுப்பு மாறி சென்றாலும் தன் ஆசிரியரை நினைவில் வைத்து வணங்கும் மரியாதை அன்பாக நிலைத்து இருந்தது. தன்னிடம் பயின்ற மாணவர்கள் பணிக்குச் சென்ற போதிலும் அவர்களைக் கண்டவுடன் பெருமிதம் கொள்வதும்... ஆசிரியரைக் கண்ட வளர்ந்த மாணவர் என் ஆசிரியர் என உணர்வுப்பூர்வமாக கூறிக் கொள்ளும் பழக்கங்களும் அருகிவிட்டன.

ஒரு வகுப்பில் இருந்து அடுத்த வகுப்புக்குச் சென்ற உடனே, அந்த ஆசிரியரை முன்பின் தெரியாதவர் போல கடந்து செல்லும் பண்பாடு தற்போது கண்கூடு.

தேர்வு எழுதி முடித்த கையோடு அப்பாட ஆசிரியருக்கும் தனக்குமான உறவு முடிந்துவிட்டதாக கருதும் பழக்கம் நெகிழிப் பயன்பாட்டில் மட்டுமல்ல மனிதர்களிடமும் இவ்வியாதி பரவி வருகிறது.

எங்கே செல்கிறது? - அனைத்திலும் அவசரம் அவசரமாக முந்தி அடித்துக் கொண்டு உலகமானது எங்கே செல்கிறது...? இலக்கியங்களில் கண்ட மனித உறவுகள் இலக்கியங்களோடு மட்டுமேபயணிக்கின்றன. ஆழ்ந்த நட்புகள்இல்லை. உடன் இருப்பவர் துன்பத்திற்காக கண் கலங்கும் உறவுகள் சொற்பமே.

உணர்வுகளை மீட்டெடுக்க மனிதர்களை வாசிக்க, நேசிக்க, மறுவாசிப்பு தேவைப்படுகிறது. குழந்தைகளை, குழந்தைகளின் உலகத்தை, குழந்தைகளின் பெற்றோர்களை மறுவாசிப்பு செய்ய வேண்டிய அவசியம் கட்டாயத் தேவையாக உள்ளது.

- கட்டுரையாளர் ஆசிரியர் எஸ்.ஆர்.வி. சீனியர் செகண்டரி பப்ளிக் ஸ்கூல், பிராட்டியூர், திருச்சி மாவட்டம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x