Published : 21 Feb 2024 08:43 AM
Last Updated : 21 Feb 2024 08:43 AM

நன்கொடையாளர் விவரங்களை பகிர கட்சிகள் தயாரா? | தேர்தல் பத்திரங்களுக்குத் தடை: என்ன மாறப்போகிறது?

தமிழகத்தைப் பொறுத்தவரையில் மத்தியிலும் எதிர்க்கட்சியாகவே இருந்த திமுக, 2019-20 & 2020-21 கால கட்டத்தில் மாநிலத்தின் ஆளும் கட்சியாக இருந்த அதிமுகவை விடவும் பலமடங்கு அதிகமான நன்கொடையைத் (ரூ.125.5 கோடி) தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்றுள்ளது.

கடந்த 2021-ல் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தேர்தல் பத்திர நன்கொடைகள் 2021- 22 & 2022-23 ஆண்டுகளில் சுமார் 400% அதிகரித்துள்ளது (ரூ.491 கோடி) என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் இந்தத் தீர்ப்பின் முக்கியமான அம்சமே மக்களுக்கான தகவல் அறியும் உரிமை என்பதுதான். கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பவர்கள் பற்றிய முழுமையான தகவலும் மக்களைப் போய்ச் சேர வேண்டும் என்ற அடிப்படையில்தான் தேர்தல் பத்திரங்கள் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இனி எல்லா கட்சிகளும் தங்களுக்கு நன்கொடை வழங்குபவர்களின் விவரத்தைப் பொதுவெளியில் பகிர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தால் அதனைக் கட்சிகள் எவ்வாறு எதிர்கொள்ளும்? பொதுவாகக் கட்சிகள் தங்களின் வரவுகளை உறுப்பினர்களின் நன்கொடை என்றும் பெரும்பாலும் அவை ரூ.20,000-க்கும குறைவாகக் கொடுக்கப்பட்ட நன்கொடை என்றும் கூறித் தப்பித்துக் கொள்கின்றன.

உதாரணத்துக்கு காங்கிரஸ் கட்சியின் 31.03.2021 கால கட்டத்துக்கான தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு அறிக்கையின்படி ரூ.156,90,75,000 (ரூபாய் நூற்று ஐம்பத்தாறு கோடியே தொண்ணூறு லட்சத்து எழுபத்தி ஐந்தாயிரம் ரூபாய்) கூப்பன் வழியே பெற்ற தொகை என்று கூறுகின்றது. இத்தனை கூப்பன்களின் வழியே நன்கொடை கொடுத்தவர்கள் விவரம் யாருக்கும் தெரியாது.

அரசியல் கட்சிகளைத் தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டுமென்ற கோரிக்கை எழுந்த போது ஒட்டுமொத்தமாக அனைத்து அரசியல் கட்சிகளும் அதனை எதிர்த்தன. ஆனால் இன்றைக்குக் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குபவர்களின் அடையாளம் தெரிய வேண்டுமென்ற கோரிக்கை வைத்த அத்தனை கட்சிகளும் தங்களுக்கு நன்கொடை வழங்கிய, இனி வழங்கப் போகின்ற அத்தனை பேரின் தகவலையும் மக்களுடன் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்குமா?

தமிழகத்தில் இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் தேர்தலுக்கு முன்பாக கூட்டணிக் கட்சியான திமுகவிடமிருந்து நிதி பெற்றன. இது அனைவருக்கும் தெரியும். ஒரு கட்சி இன்னொரு கட்சிக்கு நிதி வழங்க சட்டத்தில் வெளிப்படையான தடையேதுமில்லை. ஆனால் ஒரு ஜனநாயக அமைப்பில் இன்னொரு கட்சியிடம் இருந்து நன்கொடை பெறுவது தர்மமாகுமா? இன்றைக்கு தேர்தல் பத்திரங்களின் வெளிப்படைத் தன்மை குறித்து கோரிக்கை வைக்கும் தமிழக கம்யூனிஸ்டு கட்சிகள், திமுகவிடம் இருந்து நிதி பெற்ற விவரம், திமுக தனது செலவுக் கணக்கை சமர்ப்பித்த பிறகுதானே வெளியே தெரிந்தது? வெளிப்படைத் தன்மைக்காகப் போராடும் கம்யூனிஸ்டு இயக்கங்கள் தாங்களே வெளிப்படையாக இல்லாத போது இவர்களது முழக்கங்களை எவ்வாறு நம்புவது?

இந்தத் தீர்ப்பைப் பொறுத்தவரையில் கட்சிகளின் செயல்பாடுகளில், குறிப்பாக நன்கொடைகள் மற்றும் செலவு விவரங்களில், வெளிப்படைத் தன்மையைக் கொண்டு வருவதில் ஒரு முன்னோடியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. மின்னணுப் பணப்பரிமாற்றம் நாடு முழுவதும் சர்வ சாதாரணமாகிவிட்ட நிலையில், கட்சிகள் நன்கொடைகளை வங்கிக் கணக்குகளில் மட்டுமே பெற வேண்டும் என்ற கோரிக்கையும் இனி முன்னெடுக்கப்படும். இதற்காகப் பொதுநல வழக்குகள் தொடரப்படலாம். தேர்தல் காலத்தில் வேட்பாளரது செலவும் கட்சியின் செலவும் தனித்தனியாகக் கணக்கிடப்படுகின்றன.

கட்சி நிதி முழுவதும் வங்கிக் கணக்கு மூலம் மட்டுமேயென்றால் 50 ரூபாய் நன்கொடை மூலம் பல கோடிகள் வசூலானதாகக் கணக்கு காட்ட முடியாது. கணக்கு காட்ட முடியாத பணத்தை தேர்தல் செலவுக்குக் காட்ட முடியாது. இம்மாதிரி சீர்திருத்தங்கள் வருவதற்கு இன்னும் நீண்ட காலமாகலாம்.

ஆனால், தேர்தல் பத்திரங்கள் தடை செய்யப்பட்டதன் பிறகு கட்சிகளுக்கு நன்கொடை வருவது தடைபடப் போவதேயில்லை. தேர்தல் பத்திரங்களுக்கு முன்னரும் நன்கொடைகள் வந்துகொண்டிருந்தன, இனிமேலும் வந்துகொண்டுதான் இருக்கும். எப்படி வரப்போகின்றது. அத்தகைய நன்கொடைகளிலும் வெளிப்படைத்தன்மை இருக்கப் போகின்றதா, நன்கொடையாளர்களின் விவரங்களைத் தயக்கமின்றி அரசியல் கட்சிகள் வெளியிடுமா என்பதுதான் கேள்வி.

முந்தைய அத்தியாயம்: ஊழலுக்கு எதிராக போராடிய லாலு | தேர்தல் பத்திரங்களுக்குத் தடை: என்ன மாறப்போகிறது?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x