Last Updated : 28 Nov, 2023 05:44 AM

 

Published : 28 Nov 2023 05:44 AM
Last Updated : 28 Nov 2023 05:44 AM

கணை ஏவு காலம் 47 | கொள்ளையும் கொள்கையும் @ இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

கோப்புப்படம்

கடந்த 1967 முதல் பாலஸ்தீனத்தில் யூதக் குடியேற்றங்கள் நடக்கத் தொடங்கியதைப் பார்த்தோம். இஸ்ரேலின் நட்பு நாடுகள் நீங்கலாக, மொத்த உலகமும் இதை அநீதி என்று சொன்னது ஒரு புறமென்றால், இந்தப் பணியை அவர்கள் ஒரு ‘நீதி’மன்றக் கட்டிடத்தைக் கட்டி ஆரம்பித்து வைத்ததுதான் இதிலுள்ள அவல நகைச்சுவை. பழைய ஜெருசலேம் நகரத்தில் மேற்குப் புறச் சுவருக்கு அருகே அந்தப் பணியை அவர்கள் தொடங்கினார்கள்.

எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அந்தப் பிராந்தியத்தில் முஸ்லிம்கள் தங்கி இருந்த 160 வீடுகளை புல்டோசர் வைத்து இடித்துத் தள்ளினார்கள்.

ஓரிரு வாரங்களில் அந்தப் பிராந்தியத்தில் 600கட்டிடங்களில் இருந்த சாதாரண மக்கள், வியாபாரிகள் இரு தரப்பினரையும் காலி செய்துவிட்டு எங்காவது போய்விட சொன்னார்கள். அதைச் செய்ததும் ஜெருசலேத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்தவர்களை அழைத்து, அவரவர் நிலங்களை அப்படி அப்படியே விட்டுவிட்டு வேறிடம் பார்க்கச் சொன்னார்கள். அப்படி இடம் பெயர்ந்தவர்கள் மொத்தம் 6,500 பேர்.

ஒரு பக்கம் நீதிமன்றக் கட்டிட உருவாக்கம். அதனைச் சுற்றி குடியிருப்புப் பகுதிகள் உருவாக்கம். இன்னொரு புறம் புதிய, யூத விவசாயக் குத்தகைதாரர்களை வரவழைத்து, அபகரித்த நிலங்களை அவர்களுக்குக் குத்தகைக்குக் கொடுத்து விவசாயம் செய்யச் சொல்லிவிட்டார்கள்.

கடந்த 1977-ம் ஆண்டு இஸ்ரேலில் லிக்குட் கட்சி ஆட்சிக்கு வந்தது.இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அதில் ஒரு சிறிய (ஆனால் புத்திசாலித்தனமான) மாற்றம் செய்தார்கள். புதிய குடியிருப்புகளை உருவாக்குவது குறைந்தது. மாறாக, ஏற்கெனவேஉருவாக்கப்பட்ட யூதக் குடியிருப்புகளில் கூடுதலாக வீடுகளை, கடைகளை, உணவகங்களை, இதர வர்த்தக நிலையங்களைக் கொண்டு போய்ச் சொருகத் தொடங்கினார்கள். அதாவது, நகரங்களின் மக்கள் தொகையை அதிகரிப்பது. அதன்மூலம் பாலஸ்தீன நகரங்களிலும் கிராமங்களிலும் யூத மெஜாரிட்டியை உருவாக்குவது. மறுபுறம், வாழ வழி தேடி சொத்து சுகங்களை இழந்து எங்கெங்கோ ஓடிப் போனவர்கள், திரும்பி வர வழியில்லாதபடி பாதைகளை அடைத்துவிடுவார்கள். யூதர்கள் மட்டும் பயணம் செய்வதற்குப் புதிய வழித் தடங்கள் உருவாக்கப்பட்டன. அந்தத் தடங்களில் ராணுவக் காவல் பலப்படுத்தப்பட்டது. எண்பதுகளின் தொடக்கத்தில் மேற்குக் கரையில் மொத்தம் 20 ஆயிரம் யூதர்கள் குடியேறியிருந்ததாக ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீனத்துக்கான தனிப்பிரிவு ஒப்புக்கொண்டிருக்கிறது. ஜெருசலேத்தில் ஒரு லட்சம் பேர். மேற்குக் கரையில் இருந்த விளைநிலங்களில் 33.3 சதவீதத்தை யூதர்கள் எடுத்துக் கொண்டார்கள். கோலன்குன்றுப் பகுதியில் 1980-ம் ஆண்டு வரை ஒரு லட்சத்து 42 ஆயிரம் முஸ்லிம்கள் குடியிருந்திருக்கிறார்கள். ஆனால் 1981-ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் வந்த எண் வெறும் 8,000. காஸாவில் இப்படித்தான். இதர அனைத்து பாலஸ்தீன பிராந்தியங்களிலும் ஆண்டுக்கு இவ்வளவு பேர் என்று கணக்கு வைத்து குடியேற்றிக் கொண்டே இருந்தார்கள்.

இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாடு. சுத்தமான நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கடைபிடிக்கும் நாடு. பொதுவாக ஜனநாயக நாடுகளில் ராணுவத்துக்கான சுதந்திரங்கள், சட்ட வரைவினால் வரையறுக்கப்பட்டிருக்கும். அவ்வப்போது நமக்கு தெரிந்த பாகிஸ்தானில் நடப்பது போலவோ, இதர ராணுவ ஆட்சி நாடுகளில் உள்ளது போலவோ ராணுவம் சர்வ வல்லமை கொண்டதாகவெல்லாம் இருக்க முடியாது.

ஆனால், இஸ்ரேலின் ஜனநாயக விதிகள் பாலஸ்தீனத்துக்கு மட்டும் பொருந்தாது. பாலஸ்தீனப் பகுதிகளில் நிறுத்தப்பட்டிருக்கும் ராணுவத்தினருக்கு வரம்பில்லா அதிகாரங்கள் உண்டு. குடியேற்றங்கள் தொடர்பான தனது கொள்கைகள் சார்ந்து எங்கிருந்து என்னவிதமான கருத்து வேறுபாடு எழுந்தாலும் சிக்கல் மிக்க ராணுவ சட்டங்களையே அது முன்னால் எடுத்துப் போடும். இஸ்ரேலுக்குள் தப்பித் தவறி யாராவது இது குறித்து மாற்றுக் கருத்து சொல்லிவிட்டால் (மேடை பேச்சிலோ, பத்திரிகை கட்டுரைகளிலோ) உடனடியாக அவரை தேசத் துரோகி என்று முத்திரை குத்தி உள்ளே தள்ளிவிடுவார்கள்.

ஆனால் கவனியுங்கள். இதர எந்த விஷயத்திலும் இஸ்ரேல் அப்படிக் கிடையாது. பரிபூரண ஜனநாயகம்தான். பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமைக் கடலை உருண்டைகள் அனைவருக்கும் உண்டு. ஒன்று தெரியுமா? இஸ்ரேலில் இருந்து ஏற்றுமதியாகும் விளைபொருட்கள் அபகரிக்கப்பட்ட பாலஸ்தீனத்து நிலங்களில் விளைபவைதான்.

(தொடரும்)

முந்தைய அத்தியாயம்: கணை ஏவு காலம் 46 - எப்படி நடந்தது குடியேற்றம்? @ இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்க்களக் குறிப்புகள்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x