Published : 17 Nov 2023 06:16 AM
Last Updated : 17 Nov 2023 06:16 AM

ஓங்கி ஒலித்த புரட்சி முழக்கம்!

ஓர் இயக்கம் மக்கள் மத்தியில் வேர்பிடிக்க, வளர்ச்சி பெற ஒரு கருத்தியல் தேவைப்படுகிறது. நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தால் மட்டும் போதாது. சமூக விடுதலை, பொருளாதாரச் சுதந்திரம் - சோஷலிஸமே தீர்வு என்கிற கருத்தியலை முன்னிறுத்தி, தொடக்கக் காலத்திலும் அடுத்தடுத்தும் கட்சியை வளர்த்த தலைவர்களில் முக்கியமானவர் தோழர் என்.சங்கரய்யா. கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய முதல் தலைமுறைத் தலைவர்களான பி.ராமமூர்த்தி, ப.ஜீவானந்தம், சீனிவாச ராவ், கே.பி.ஜானகியம்மாள் போன்றவர்களோடு இணைந்து பணியாற்றியவர் சங்கரய்யா. அவருடைய வரலாறு ஒரு தனிமனிதனின் வரலாறு மட்டுமல்ல; தமிழ்நாட்டின் கம்யூனிஸ்ட் இயக்கத்தினுடைய வரலாற்றின் ஒரு பகுதி!

விடுதலை வீரர்: மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்துக்கொண்டிருந்தபோதே நாட்டு விடுதலைக்காக மாணவர்களைத் திரட்டி, பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர். பட்டப் படிப்பு இறுதி ஆண்டுத் தேர்வுக்கு 15 நாள்களுக்கு முன்னதாகக் காவல் துறை அவரைக் கைது செய்தது. “அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?” என்று ஒருமுறை அவரிடம் கேட்டேன். அதற்கு, “நாட்டு விடுதலைக்காகச் சிறை செல்கிறோம் என்னும் உற்சாகத்தோடுதான் சென்றேன். பட்டப் படிப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை” என்றார் சங்கரய்யா.

முதன்மைத் தலைவர்: 1940இல் ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்த சங்கரய்யா, 1944இல் மதுரை மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தத்துவார்த்தப் பிரச்சினையின் காரணமாக, ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேறிய 32 தோழர்களில் சங்கரய்யாவும் ஒருவர். 1964இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உருவானபோது அமைந்த முதல் மத்தியக் குழுவுக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். 1967, 1977, 1980 என மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநிலச் செயலாளராக 1995இலிருந்து 2002 வரையில் பணியாற்றினார். விவசாய சங்கத்தினுடைய அகில இந்தியப் பொதுச் செயலாளராகவும் கட்சியின் கட்டுப்பாட்டுக் குழுத் தலைவராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

ஆட்சித் தமிழ் தீர்மானம்: 1967இல் சங்கரய்யா சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தபோது ஆட்சிமொழித் தீர்மானம் முன்மொழியப்பட்டது. அதன் மீது நடந்த விவாதத்தில் பேசிய சங்கரய்யா, “தமிழ் மொழி நீதிமன்ற மொழியாக, நிர்வாக மொழியாக, பாட மொழியாக வர வேண்டும். ஆட்சிமொழி என்பதன் பொருள் அதுதான். ஆனால், அப்படி வர வேண்டும் என்று மட்டும் தீர்மானம் நிறைவேற்றினால் போதாது. இதையெல்லாம் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் அமலாக்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் உள்ளடக்கி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார். அதை அன்றைய முதலமைச்சர் அண்ணா ஏற்றுக்கொண்டார். அதன்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்படி ஆட்சித் தமிழுக்காக அவர் சட்டமன்றத்தில் கொடுத்த குரல் முக்கியமானது.

சரியான தீர்வு, சார்பற்ற ஆலோசனை: 1996இல் தென் மாவட்டங்களில் நடந்த சாதிக் கலவரங்களைத் தடுப்பதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை அன்றைய முதலமைச்சர் மு.கருணாநிதி நடத்தினார். சென்னை ராஜாஜி அரங்கில் இரண்டு நாள்கள் நடைபெற்ற அந்தக் கூட்டத்தில், சங்கரய்யாவுடன் நானும் பங்கேற்றேன். அப்போது சங்கரய்யா, “தீண்டாமைக் கொடுமை ஒழிக்கப்பட வேண்டும். சாதி மோதல்கள் ஒழிக்கப்பட வேண்டும். மக்கள் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு வழிவகுக்கப்பட வேண்டும்” என்று கூறினார். இந்த வரிசை மிக முக்கியமானது. தீண்டாமை உள்ளிட்ட கொடுமைகளை ஒழிக்காமல் சாதி மோதல்களைத் தடுக்க முடியாது.

சாதி மோதல்களைத் தடுக்காமல் மக்கள் ஒற்றுமையைப் பெற முடியாது. கூட்டத்தின் முடிவில் கருணாநிதி பேசியபோது, சங்கரய்யா கூறியதை மேற்கோள் காட்டிப் பேசினார். “தோழர் சங்கரய்யா சுட்டிக்காட்டியதுபோல அரசாங்கம் நடவடிக்கைஎடுக்கும்” என்றும் அறிவித்தார். பின்னர் சமத்துவபுரங்களை அவர் உருவாக்கினார். சங்கரய்யாவோ தனது குடும்பத்தையே சமத்துவபுரமாக்கி வாழ்ந்துகாட்டினார். இப்படியாகக் கட்சிக்குள் நடைபெறும் கூட்டங்கள் என்றாலும், அனைத்துக் கட்சிக் கூட்டங்கள் என்றாலும் குறிப்பிட்ட பிரச்சினைக்குச் சரியான தீர்வு எது என்பதைத் தன்னுடைய அனுபவத்தின் வாயிலாக பளிச்சென்று சுட்டிக்காட்டுபவராக சங்கரய்யா இருந்தார்.

1998இல் கோவை குண்டுவெடிப்பு, மதக் கலவரங்கள் நடந்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. மாநிலச் செயலாளர் சங்கரய்யாவோடு பேச விரும்புவதாக முதலமைச்சர் கருணாநிதி கூறினார். அப்படிப் பேசும்போது சொல்லியிருக்கிறார், “என்.எஸ்! இந்தப் பிரச்சினை தொடர்பாக உங்களிடம்தான் முதலில் ஆலோசனை கேட்கிறேன். ஏனென்றால், நீங்கள்தான் சார்புகள் இல்லாமல் ஆலோசனை சொல்வீர்கள்” என்று. இப்படி அரசியல், சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகள் என்று வரும்போது அவற்றுக்குப் பக்கச்சார்பின்றி ஆலோசனைகளை வழங்குவதற்கான அனுபவமும் அறிவும் சங்கரய்யாவுக்கு இருந்ததை நாங்கள் பலமுறை உடனிருந்து பார்த்திருக்கிறோம்.

தலைமையை மதித்த தொண்டர்: 2002இல் மாநிலச் செயலாளர் பதவியிலிருந்து சங்கரய்யா விடுவிக்கப்பட்ட பிறகு என்.வரதராஜன் அந்தப் பதவிக்கு வந்தார். அதற்குப் பிறகு நான் வந்தேன். எனக்குப் பிறகு கே.பாலகிருஷ்ணன் இப்போது அந்தப் பதவியில் இருக்கிறார். சங்கரய்யா, செயலாளர் பதவியிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு மாநிலச் செயற்குழு, மாநிலக் குழு, மத்திய செயற்குழு முடிவுகளைப் பின்பற்றுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். யாராவது கட்சியின் முடிவுகள் குறித்துக் கேட்கும்போது, “மாநிலச் செயலாளரிடம் கேளுங்கள்” என்று சொல்லிவிடுவார். கட்சி சார்பாக ஏதேனும் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கப்பட்டால்கூட மாநிலச் செயற்குழுவின் ஒப்புதலைப் பெற்ற பிறகே நிகழ்ச்சிகளில் பங்கேற்கச் சம்மதம் தெரிவிப்பார். அந்த வகையில் மாநிலச் செயற்குழுவுக்கும் செயலாளர் பதவியில் இருப்பவருக்கும் முழுமையான மரியாதையை அளித்தார்.

அனைவரும் தோழர்களே! - நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இருக்கிறார். 1989இல் ஏ.நல்லசிவம் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தபோதுதான் நான் மாநிலச் செயற்குழு உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டேன். அப்போது சங்கரய்யாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. கட்சியின் மிகப் பெரிய தலைவரான அவர் அனைத்துத் தரப்பு உறுப்பினர்களிடமும் பதவி, வயது வேறுபாடு பார்க்காமல் பழகுவார். அவர் பேசுவதும் பழகுவதும் இளம் தோழர்களுக்குப் பெரும் ஊக்க சக்தியாக இருக்கும். முதல் தலைமுறைக்கும் இன்றைய தலைமுறைக்கும் இணைப்புக்கண்ணியாக அவர் இருந்தார்.

கட்சித் தொண்டர்கள் ஒவ்வொருவரையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் நினைவில் வைத்திருப்பார். அவர்கள் எல்லோரைப் பற்றியும் பெயரைச் சொல்லி நலம் விசாரிப்பார். அந்த அளவுக்கு அபாரமான நினைவுத் திறன் அவருக்கு இருந்தது. தீவிர இலக்கிய வாசிப்பு கொண்டவர் சங்கரய்யா. அரசியல் மட்டுமல்லாமல் இலக்கியம் குறித்தும் ஆழமாக விவாதிக்கக்கூடிய திறனைப் பெற்றிருந்தார். மக்ஸிம் கார்க்கியின் ‘தாய்’ நாவலைக் கவிதை வடிவில் மு.கருணாநிதி எழுதியபோது, சங்கரய்யாவிடம்தான் முன்னுரை பெற்றார்.

புரட்சி முழக்கம்: 82 ஆண்டு காலம் கம்யூனிஸ்ட் கட்சியில் அர்ப்பணிப்போடு பணியாற்றியுள்ளார் சங்கரய்யா. கடைசியாக, சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் மாநிலக் குழு அலுவலகத்தின் ஒரு பகுதி புதுப்பிக்கப்பட்டு, 2023 நவம்பர் 7 அன்று அதற்கான விழா நடைபெற்றபோது அவரால் நேரடியாகக் கலந்துகொள்ள இயலவில்லை. அவருடைய வாழ்த்துச் செய்தியை உரையாக ஒலிபரப்பினோம். தன்னுடைய சிம்மக்குரலில், ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ (புரட்சி ஓங்குக) என்னும் முழக்கத்துடன்தான் அந்த உரையை முடித்திருந்தார். பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் தூக்கில் இடப்படுவதற்கு முன் ஒலித்த முழக்கம் அது. இறப்பதற்கு ஏழு நாள்களுக்கு முன்பு ஆற்றிய கடைசி உரையில் சங்கரய்யா எழுப்பிய அந்த முழக்கத்தை முன்னெடுத்துச் செல்வதுதான் நாம் அவருக்குச் செலுத்தக்கூடிய உண்மையான அஞ்சலி!

- தொடர்புக்கு: grcpim@gmail.com

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x