Published : 28 Dec 2017 09:53 AM
Last Updated : 28 Dec 2017 09:53 AM

பேரிடர்: அபலைகளின் துயரம்!

க்கி புயலில் காணாமல்போன, கரைசேராத 500-க்கும் மேற்பட்ட மீனவர்களைக் கண்டுபிடித்துத் தருமாறு அரசை வலியுறுத்தக் கோரி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஆட்கொணர்வு மனு ஒன்று சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த மனுவுக்குப் பதில் தர வேண்டும் என்று நீதிமன்றம் அரசைக் கேட்டிருக்கிறது. காணாமல்போன மீனவர்கள் பற்றி, அரசு பதில் சொல்லியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம், காலம்காலமாக மீனவர்கள் அனுபவித்துவரும் சிக்கலுக்குத் தீர்வாக அமையுமா?

26 வருடங்களுக்கு முன்னால் கடலில் இறந்துபோனதாகச் சொல்லப்படுகின்ற ஒருவர், கன்னியாகுமரி மாவட்டம், சின்னத்துறை கிராமத்தைச் சேர்ந்தவர். அவருக்கு இன்றுவரை இறப்புச் சான்றிதழ் பெற முடியவில்லை என்பதாலேயே இறந்துபோனவருடைய குடும்பத்தினருக்கு இழப்பீடோ அரசின் எந்தவிதமான மறு வாழ்வு கவனிப்போ கிடைக்கவில்லை.

2008-ல் நான் ராமேஸ்வரத்துக்குப் போயிருந்தபோது, அத்தகைய சில மீனவர்களின் குடும்பத்தினரைப் பார்த்துப் பேசினேன். மகனை இழந்த அம்மாக்கள், கணவனை இழந்த மனைவிகள், தந்தையை இழந்த பிள்ளைகள் - இறந்துபோனவர்களுக்காகக் காத்திருக்கும் உறவினர்கள் என கரையில் இருக்கிறார்கள்.

கடலுக்குப் பொருந்தா சட்டங்கள்!

ஒருவர் இறந்துவிட்டார் என்பதை உறுதிசெய்வதற்குக் குறைந்தபட்சம் ஏழு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்கிற சட்டம் தமிழ்நாட்டில் இருக்கிறது. நிலம் சார்ந்த புரிதலில் ஓரளவுக்கு அதன் நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும். கடலைப் பொறுத்தவரை சடலங்கள் கிடைத்தால் மட்டுமே இழப்பீடு, மறு வாழ்வு உதவிகளை அரசு வழங்குகிறது.

நான்கு மீனவர்கள் சின்னத்துறையில் சுமார் ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு ஆழ்கடலில் விசைப்படகைக் கப்பல் இடித்த விபத்தில், அந்த இடத்திலேயே மரணமடைந்துவிட்டார்கள். இன்று வரை அந்த மீனவர்களுக்கு இறப்புச் சான்றிதழோ எந்தவிதமான நிவாரணமோ கிடைக்கவில்லை. அவர்களின் உறவினர்கள் மீண்டும் மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வாயில்களைத் தட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

அதே குடும்பத்தைச் சேர்ந்த வேறு இரண்டு பேர் ஒக்கி புயலின்போது கடலில் காணாமல் போய்விட்டார்கள். இப்போது அந்தக் குடும்பத்தில் வருவாய் ஈட்டும் நான்கு பேர் இழப்பாகியிருக்கிறார்கள். இந்த இழப்பு கள் அரசு ஆவணங்களில் பதிவாகி, இவர்களுக்கான இழப்பீடுகள் அரசினால் விடுவிக்கப்படுகின்ற காலத்தை எதிர்நோக்கி அவர்களது குடும்பத்தினர் காத்திருக்கிறார்கள்.

பெண்களின் கண்களால் பாருங்கள்…

காஷ்மீரில் தீவிரவாதத்தின் பெயரிலும் இலங்கையில் வெள்ளை வேன் கடத்தல் பெயரிலும் ஆட்கள் காணாமல் போவதற்கும் இதற்கும் என்ன வேறுபாடு இருக்க முடியும்? அழைத்துச் செல்லப்பட்டவர் இறந்துவிட்டாரா இல்லை சித்ரவதைகளை அனுபவித்துக்கொண்டிருக்கிறாரா என்று எந்த விவரமும் தெரியாமல் தவித்துக்கொண்டிருக்கும் அந்தக் குடும்பத்தவரின் நிலையில்தான் தமிழ்நாட்டில் காணாமல்போன மீனவ ரின் குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் இருக்கிறார்கள். பேரிடரை, பயங்கரவாதத்தை, வன்முறையைப் பொதுவாக ஆண்களின் கண்களின் ஊடாகவே நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சமூகத்தின் அடிமட்டத் தில் துயரங்களை எதிர்கொள்ளும் பெண்களுக்கு என்ன நிகழ்கிறது என்பது குறித்துப் போதுமான அக்கறை பொதுப்பரப்பில் வெளிப்படுவதில்லை.

காஷ்மீரில் கணவனை, மகனை இழந்த பெண்களுக்கு இடையேயான தோழமையை உருவாக்கியிருக்கிறார்கள். தங்களுடைய துயரத்தை சமூகமாக இணைந்தே எதிர்கொள்வது, அதிலிருந்து மீட்சி பெறுவதற்கான வாய்ப்புகளைத் தேடுவது என்ற நோக்கத்தோடு காஷ்மீர் பெண்கள் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு பேரிடர் ஏற்படுத்தும் இழப்புகளில் முதன்மையானது, மரணம் ஏற்படுத்தும் சமூக, பொருளாதாரத் தாக்கம். மரணத்தைத் திணைநிலச் சமூகங்கள் அதனதன் கலாச்சார, வரலாற்றுப் பின்னணிகளிலேயே எதிர்கொள்கிறது. கணவனை இழப்பது என்பது வெறும் உறவு சார்ந்த துயரம் மட்டுமல்ல. அங்கு மிகப்பெரிய கடமையும் சுமையும் கணவனை இழந்த பெண்களின் தோள்மீது சுமத்தப்படுகிறது. ஏற்கெனவே, ராமேஸ்வரத்தில் கணவனை இழந்த மீனவப் பெண்கள், அபலை கள் தவிர, 2004 சுனாமியில் கணவனை இழந்த பெண்கள் தமிழ்நாட்டுக் கடற்கரையில் ஏராளமானோர் இருக்கிறார்கள். அவர்கள் காஷ்மீர் அபலைகளைப் பின்பற்றி தங்களுக்குள் ஒரு தோழமை அமைப்பை உருவாக்கிக்கொள்ள வேண்டிய தேவை எழுகிறது.

பெண் துயரத்தின் வெளிப்பாடு

ஒக்கி புயலில் நடுக் கடலில் ஜீவமரணப் போராட்டம் நடத்தும் தங்கள் கணவரை, மகன்களைத் தாமதியாமல் சென்று மீட்டுவர கப்பற்படையை அனுப்பக் கோரி டிசம்பர் 2017-ல் 7,000 வேணாட்டுக் கடற்கரைப் பெண்கள் குழித்துறையில் நிகழ்த்திய 12 மணி நேர ரயில் மறியல் பெண் துயரத்தின் வரலாற்று வெளிப்பாடு. ஆட்சியாளர்களின் அலட்சியம் நூற்றுக்கணக் கான அடித்தளப் பெண்களை அபலைகளாக்கிவிட்டிருக்கிறது. ஒரு பேரிடரின் உண்மை விலை இதுதான். ஒக்கி பேரிடர் நிகழ்த்திச் சென்ற மிகப்பெரிய துயரத்தின் பின்னணியில் அண்டைச் சமூகங்கள், உலக சமுதாயம் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் செய்ய வேண்டிய மிக முக்கியமான உதவி - சமூக உளநல ஆதரவு கொடுப்பது. இந்த ஆதரவு வெறும் வார்த்தைகளினால் வருவதில்லை, சரியான புரிதலினால் வருவது.

மீனவச் சமூகத்தில் குடும்ப உறுப்பினரின் மறைவை அடுத்து, எட்டு நாட்கள் வரை துக்கம் காப்பார்கள், 30 நாட்கள் சுற்றத்தார் உடனிருப்பார்கள். சமூகம் ஒரே நேரத்தில், ஏராளமான மனிதர்களை இழந்துவிடுகின்றபோது, அவ்வாறான இழப்பைச் சந்தித்திருக்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்துவமான ஆதரவும் அரவணைப்பும் அந்தச் சமூகத்தின் உள்ளிருந்து கிடைப்பதற்கான வாய்ப்பு குறைந்துவிடுகிறது. ஆனால், நீண்ட, துயர்மிகும் வருடங்களின் சவால்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவர்களுக்குக் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு காத்திருக்கிறது. பிள்ளைகளை முன்னிட்டுத் தற்கொலை முடிவைத் தள்ளிப்போட்ட கணவனை இழந்த பெண்கள் பலரைத் தமிழகக் கடற்கரை நெடுக - இப்போது சந்தித்த சின்னத்துறை ரபீஷா உட்பட - நான் சந்தித்திருக்கிறேன்.

இந்தத் துயரத்தின் தாக்கத்திலிருந்தும் மீண்டு, இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினால் மட்டுமே அவர்களின் பிள்ளைகளை வளர்த்தெடுக்க முடியும். வருவாய் ஈட்டுகின்ற குடும்பத் தலைவர் நிரந்தரமாக விட்டுப் பிரிந்துவிட்ட அந்தக் குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவதற்கு வாழ்வாதாரம் வேண்டும். பிள்ளைகளுடைய படிப்பைக் கவனிப்பதற்கு நிதி உதவி தேவைப்படுகிறது. பேரிடர் அபலைகளின் மறுவாழ்வை தேசியக் கொள்கைத் தளங்களில் நாம் இன்னும் அணுகத்தொடங்கவில்லை. பேரிடர் மறு வாழ்வும் மறு கட்டுமானமும் பெண்மையப்படுத்தப்படுவதே சமூக நீதி.

- வறீதையா கான்ஸ்தந்தின்,

பேராசிரியர், கடல் ஆய்வாளர்,

தொடர்புக்கு: neidhalveli2010@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x