Last Updated : 23 Nov, 2017 10:41 AM

 

Published : 23 Nov 2017 10:41 AM
Last Updated : 23 Nov 2017 10:41 AM

பெண் உரிமையின் முதல் குரல்!

ட இந்தியாவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றுத் திரும்பிய எழுத்தாளர் கல்கி, அதைப் பற்றி ‘ஆனந்த விகடன்’ இதழில் 1930-ல் ஒரு கட்டுரை எழுதினார். அங்கே அவரது கவனத்தைக் கவர்ந்த முக்கிய விஷயம் ஆண்களுக்கு இணையாகப் பெண் தன்னார்வலர்களும் மிக சுறுசுறுப்பாக அந்த மாநாட்டில் இயங்கியது! “இங்கே பெண்கள் பொது வாழ்க்கைக்கு வருவது மிகவும் அரிதாகவே இருக்கிறது. தெருவில் ஒரு பெண் இறங்கி நடந்தாலே உற்றுநோக்கும் மிக மோசமான மனோபாவம் ஆண்களிடம் இருக்கிறது. இங்கே ஆண்களின் இந்த மனோபாவமும், பெண்களின் நாணமும் ஒன்றையொன்று வளர்க்கிறது” என்று அப்போது எழுதினார் கல்கி.

சென்னை ராஜதானியில் பெண் கல்வியை முன்னெடுத்துச் சென்ற சகோதரி சுப்புலட்சுமி, முத்துலட்சுமி ரெட்டி ஆகியோரின் அனுபவமும் கல்கியின் கருத்தை உறுதிசெய்வதாகவே இருக்கிறது. முதல் முதலாக உயர்கல்வி பெற கல்லூரிக்குச் சென்றபோது, திரை போட்ட வில் வண்டியில் தங்களை முற்றிலும் மறைத்துக்கொண்டு அவர்கள் பயணிக்க வேண்டியிருந்தது. கல்லூரிக்கு உள்ளேயும் சக மாணவர்களின் கேலியும் கிண்டலும் அச்சுறுத்தலாகவே இருந்திருக்கிறது.

மாதர் சங்கம் - பெரிய முயற்சி

இப்படியான பதிவுகள் நெடுகப் பார்க்கக் கிடைக் கையில்தான் 1917-ம் ஆண்டிலேயே இந்திய மாதர் சங்கம் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டது எவ்வளவு பெரிய முயற்சி என்று வியக்கத் தோன்றுகிறது! இந்திய மற்றும் ஐரோப்பியப் பெண்களின் கூட்டு முயற்சியில் தொடங்கப்பட்ட இந்தச் சங்கத்தில் அன்னிபெசன்ட், மார்கரெட் கசின்ஸ், டோரதி ஜீனராஜதாஸா, மாலதி பட்வரதன், அம்மு சுவாமிநாதன் ஆகியோர் முக்கியப் பொறுப்பிலிருந்தனர். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி தன்னுடைய சமூக சீர்திருத்தத்தை முன்னெடுத்துச் செல்லப் பின்புலமாக இருந்தது இந்திய மாதர் சங்கம்தான். ஆரம்ப காலங்களிலேயே ‘பெண்களுக்கு வாக்குரிமை வேண்டும்’ என்ற குரலை ஓங்கி ஒலித்த அமைப்பும் இந்திய மாதர் சங்கம்தான்!

பெருமைக்குரிய வரலாற்றைக் கொண்ட இந்திய மாதர் சங்கத்தின் நூற்றாண்டு விழா சமீபத்தில் நடந்தேறியது. ஆனால், பொதுவெளியில் அது உரிய கவனத்தைப் பெறாமல் போனது பெரிய வருத்தம்! இந்த விழாவின் முக்கிய அம்சம் ‘கிருஷ்ணஸ்வாமி அசோசியேட்ஸ்’ தயாரித்த ஆவணப் படம். சிறுமி முத்துலட்சுமி கல்வி கற்க வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பதிலிருந்து தொடங்கி மாதர் சங்கம் கடந்துவந்த முக்கிய நிகழ்வுகளையெல்லாம் பதிவுசெய்திருக்கிறது இந்த ஆவணப் படம்.

அரசியலில் பெண்கள்

இனம், மொழி, மதம் கடந்து நாடு முழுமைக்குமான முன்னோடி பெண்கள் அமைப்பாக இந்த அமைப்பு முழு வீச்சில் இயங்கியது. அங்கத்தினர்களின் எண்ணிக்கை உற்சாகமூட்டும் அளவில் பெருகியது.

1922-ம் ஆண்டிலேயே 43 கிளைகள், 23 மையங்கள் 2,000-க்கும் மேற்பட்ட அங்கத்தினர்களைக் கொண்டு விரிந்தது சங்கம். ‘சேவாசதன்’, ‘அவ்வை இல்லம்’ போன்றவை இந்திய மாதர் சங்கத்தின் ஆதரவில் உருவாக்கப்பட்டன.

ஆரம்பத்தில் பிரம்ம ஞான சபையின் ஆதரவுடன் இயங்கிய இந்த அமைப்பு அரசியலைத் தவிர்த்து இயங்க வேண்டும் என்ற விதியை வகுத்துக்கொண்டது. ஆனால், 1930-களில் தனது போக்கை அது மாற்றிக்கொண்டது. 1932-ல் சென்னையில் நடந்த மாநாட்டில் ‘பெண்கள் அரசியலிலும் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய அளவில் பரவிய மாதர் சங்கம் இந்தியப் பெண்களின் தேசிய கவுன்சில் (NCWI) என்ற பன்னாட்டு அமைப்பின் தேசியக் கிளையுடன் இணைந்து மேலும் தீவிரமாக இயங்கியது.

குழந்தைத் திருமணத்துக்கு முடிவு

1940-க்குப் பிறகு இந்திய அரசியல் களம் மேலும் தீவிரமடைந்தது. காந்தியின் வேண்டுகோளுக்கிணங்க அனைத்துப் பிரிவினரும் தங்களது தனிப்பட்ட கோரிக்கைகளை ஒதுக்கிவிட்டு, நாட்டு விடுதலைக்காக ஒருமுகமாகக் குரல் கொடுத்தனர். தேசப் பிரச்சினை முக்கியத்துவம் பெற்றதில் சமூகப் பிரச்சினைகள் பின்னுக்குப் போயின. நாடு விடுதலையடைந்த பிறகு அகில இந்திய மாதர் சங்கமும் அகில இந்தியப் பெண்கள் மாநாடும் முன்பிருந்த அதே தீவிரத் தன்மையுடன் செயல்படவில்லை. 1950-களுக்குப் பின் சேவை மையங்களாக மாறிவிட்ட இந்த அமைப்புகள், சமூகச் சீர்திருத்த முனைப்பை அடியோடு கைவிட்டுவிட்டன. என்றாலும், அவை அன்று ஆற்றிய பணிகள் இந்திய சமூகத்தில் இன்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுக்க உத்வேகம் அளிப்பவை.

பெண் கல்வியைப் பரவலாக்கப் பெரும் பணிகளை முன்னெடுத்தது இந்தச் சங்கம். பெண்களுக்கான வாக்குரிமை உறுதிசெய்யப்பட்டதிலும் அதற்கும் ஒரு பங்குண்டு.

இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது குழந்தைத் திருமணத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒரு நீண்ட கால சட்டப் போராட்டத்தை அது நிகழ்த்தியதாகும். திருமணத்துக்கான சம்மத வயது சட்டம், சாரதா சட்டம் போன்றவை அதன் பணிகளில் குறிப்பிடத் தக்கவை.

எளிதில் கடக்க முடியாத கட்டுரை

இன்றைக்கும் இந்தியப் பெண்கள் சங்கத்தின் ஆரம்ப காலச் சாதனைகளுக்கு ஒரு சாட்சியமாக இருக்கிறது அன்னி பெசன்ட் தலைமையில் வெளிவந்த ‘ஸ்திரீ தர்மம்’ பத்திரிகை. ஆவணக் காப்பகத்தில் இருக்கும் இந்தப் பத்திரிகை நவீன இந்தியாவில் பெண்களின் பங்களிப்பை எழுத முற்படும் ஆராய்ச்சியாளர்களுக்குப் பெரிதும் உதவக் கூடியது. தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய பல்வேறு மொழிகளில் பெண்கள் எழுதிய கட்டுரைகள் ஒரு அனுபவக் களஞ்சியம்.

இதில், 1937-ல் பாகீரதியம்மாள் எழுதிய ஒரு கட்டுரையை நாம் எளிதில் கடந்துவிட முடியாது. சிறுமியாக இருக்கையிலேயே விதவையாகிவிட்ட பாகீரதி சமூக அவமானங்களை உடைத்துக்கொண்டு உத்வேகத்துடன் வெளியே வந்தவர். வீட்டை விட்டு வெளியேறி, எளிய மக்களின் மத்தியில் வாழ்ந்து அவர்களுக்குக் கல்விபுகட்டும் பணியில் தன்னை ஒப்படைத்துக்கொண்டவர்.

நமது வரலாற்றின் பக்கங்களில் பெண்களின் பங்களிப்பு பளிச்சென்று துலங்கவில்லை. ஆவணப்படுத்தப்படாமல் அழிந்துபோனவை நிறைய. நூற்றாண்டு வரலாற்றைக் கொண்ட இந்திய மாதர் சங்கத்தின் வரலாறு இன்றைய பெண்களைச் சென்றடைய வேண்டும். கடந்து சென்ற காலத்தின் பல உயிரோட்டம் மிக்க சுதந்திரக் குரல்களை அது இன்றைய காலத்துக்குக் கடத்தும்!

- கே.பாரதி, எழுத்தாளர்.

தொடர்புக்கு : bharathisakthi1460@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x