Last Updated : 17 Jul, 2023 06:19 AM

 

Published : 17 Jul 2023 06:19 AM
Last Updated : 17 Jul 2023 06:19 AM

டி.எம்.நாயர்: உழைப்பாளர்களின் உரிமைக் குரல்

பெயருக்குப் பின்னால் சாதிஅடையாளங்களை வெளிப்படுத்தும் பின்னொட்டுகள் கூடாது என்பதைத் திராவிட இயக்கம் தமதுகொள்கைகளில் ஒன்றாகக் கொண்டிருக்கிறது. என்றாலும், தமது முன்னோடிகளில் ஒருவரை அவ்வாறான பின்னொட்டைச் சொல்லியே அழைத்து வருகிறது என்பது வியப்பானதுதான். அந்த முன்னோடி, டி.எம்.நாயர் என்று அழைக்கப்படும் தரவத்து மாதவன் நாயர் (1868-1919).

மருத்துவத் துறை முன்னோடி: இங்கிலாந்து சென்று மருத்துவம் பயின்று, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் மருத்துவப் பயிற்சி மேற்கொண்டு, மருத்துவத் துறை உயர் படிப்புகளுக்காக அன்றைய நடைமுறைப்படி கிரேக்க மொழியைப் பயின்றவர் டி.எம்.நாயர். சென்னை மாகாணத்தில் முதலாவதாக மருத்துவத் துறைக்கென ‘ஆன்டிசெப்டிக்’ இதழைத் தொடங்கி நடத்தி, மருத்துவத் தொழிலிலும் ஆராய்ச்சியிலும் முன்னோடியாக விளங்கியவர்.

போலி மருத்துவர்களைக் கண்காணிக்கவும் மருத்துவத் தொழிலை நெறிப்படுத்தவும் தனிச் சட்டம் இயற்றக் காரணமாக இருந்தவர். நீரிழிவு நோய் குறித்து 100 ஆண்டுகளுக்கு முன்பே தனிப் புத்தகம் எழுதியவரும்கூட.

சென்னை நகர்மன்ற உறுப்பினராகப் பொறுப்புவகித்த காலகட்டத்தில், உள்ளாட்சித் துறையின் பொறுப்புகளைக் குறித்தும் அதிகாரங்களைக் குறித்தும் தீவிரமான விவாதங்களை முன்னெடுத்தவர். அவ்வாறு அவர் முன்னெடுத்த விவாதங்களின் எதிர்வினைகளால், மனம் நொந்து அவர் பதவி விலகவும் நேரிட்டது என்பது தனிக் கதை. உள்ளாட்சிகள் விதிக்கும் சேவைக் கட்டணங்களுக்கு வழிபாட்டுத் தலங்கள் விதிவிலக்கு அல்ல என்று அவர் வலியுறுத்தியதே இன்று நடைமுறையாய் இருக்கிறது.

ஆங்கிலத்தில் வெளியான அவரது முதல் புத்தகமே, உள்ளாட்சி நிர்வாகத்தைப் பற்றியதுதான். சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்களிடம் உள்ளாட்சித் துறை குறித்து அவர் ஆற்றிய ஆறு விரிவுரைகளே முதன்முதலில் நூல்வடிவம் கண்டன.

தொழிலாளர்களின் வேலை நேரம்: வகுப்புரிமைக்குமுதன்முதலில் குரல் கொடுத்தவர்களில் ஒருவராக அறியப்படும் டி.எம்.நாயர், அதற்கு முன்பே தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்தவர் என்பது பொதுவாகப்பேசப்படுவதில்லை. சுயமரியாதை இயக்கத்தில் பெரியாருடன் இணைந்து செயல்பட்டவரான சிங்காரவேலரை நினைவுகூரும் தொழிற்சங்கவாதிகளும் கூடத் தொழிலாளர்களின் பணி நேரத்தைக் குறைக்கப் பெரும் பணியாற்றிய டி.எம்.நாயர் குறித்துப் பேசுவதில்லை. அவரது பங்களிப்புகள் குறித்த விவரங்கள் போதுமான அளவில் பொதுவெளியில் கிடைப்பதில்லை என்பதும்கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

1907-08ஆம் ஆண்டுகளில் ஆலைத் தொழிலாளர்கள் ஆணையத்தில் டி.எம்.நாயர்உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார். தொழிற்சாலைகளில் 17 மணி நேரம் வரையிலும் தொழிலாளர்கள் வேலைபார்க்க வேண்டிய சூழல் நிலவியகாலகட்டம் அது. ஐரோப்பிய நாடுகளில் அவருக்கிருந்ததொடர்புகளின் காரணமாக, லங்காஷயர் ஆதரவாளராகவே அப்போது அவர் அடையாளப்படுத்தப்பட்டார்.

இந்தியாவில் தொழிலாளர்கள் குறைவான கூலியில் அதிகமான நேரம் பணியாற்றுவதால் பிரிட்டன் தொழிற்சாலைகளைக் காட்டிலும் குறைவான செலவில் உற்பத்தி செய்ய முடிகிறது என்பதால், அதற்கு லங்காஷயரை மையமாகக் கொண்டு இயங்கிய பிரிட்டன் தொழிற்சாலைகள் எதிர்ப்புத் தெரிவித்தன. இந்தியத் தொழிற்சாலைகளோ, தொழிலாளர்களின் உடல், மனநலத்தைக்காட்டிலும் உள்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கே முக்கியத்துவம் கொடுத்தன.

ஓய்வின்றி உழைக்கும் மக்கள் அதன் காரணமாக எவ்வாறான உடல்நலக் கேடுகளுக்கு உள்ளாக வேண்டியிருக்கிறது என்பதை ஒரு மருத்துவராகவும் உணர்ந்திருந்த டி.எம்.நாயர், தொழிலாளர்களின் பணி நேரம் குறைக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். வைஸ்ராய் மிண்டோவுடனான அவரது சந்திப்பு பலனளிக்கவில்லை. அதையடுத்து, பிரிட்டிஷ் தொழிலாளர் கட்சியின் தலைவர் ஆர்தர் ஹெண்டர்சனைச் சந்தித்து அவரது உதவியையும் நாடினார்.

இந்தியாவின் செயலராக இருந்த மார்லியைத் தொடர்ந்து சந்தித்து தொழிலாளர்களின் அவலநிலையை அவரிடம் எடுத்துரைத்தார். இந்தியா முழுவதும் உள்ள தொழிலாளர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாகக் குறைக்கப்படுவதற்கு டி.எம்.நாயர் எடுத்துக்கொண்ட முயற்சிகள் முக்கியமானவை.

முதல் மூன்று சட்டங்கள்: 1881இலேயே இந்தியாவின்முதலாவது தொழிற்சாலைச் சட்டம் இயற்றப்பட்டுவிட்டது. இருந்தாலும், அது சிறுவர்களைப் பணிக்கு அமர்த்துவதை முறைப்படுத்த மட்டுமே இயற்றப்பட்டது. 7 வயதுக்குக் குறைவான சிறுவர்களைப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. 7 முதல் 12 வயது வரையுள்ள சிறுவர்களை 9 மணி நேரத்துக்கு அதிகமாக வேலை வாங்கக் கூடாது, சிறுவர்களுக்கு ஒவ்வொரு நாளும் வேலைக்கு இடையே ஒரு மணி நேரம் ஓய்வு அளிக்கப்பட வேண்டும் என்பதெல்லாம் முதலாவது தொழிற்சாலைச் சட்டத்தின் வழிகாட்டுதல்கள்.

1891இல் இயற்றப்பட்ட இரண்டாவது தொழிற்சாலைச் சட்டமானது சிறுவர்களோடு பெண்களின் நலனிலும் மிகச் சிறிய அளவுக்கு அக்கறை காட்டியது. சிறுவர்களின் வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 7 மணி நேரமாகக் குறைத்த இச்சட்டம், பெண்களின் வேலை நேரத்தை 11 மணி நேரமாகக் குறைத்தது. என்றாலும் ஆண்களின் வேலை நேரம் குறித்து சட்டபூர்வமான வலியுறுத்தல்கள் எதையும் இச்சட்டம் செய்யவில்லை.

1911இல் இயற்றப்பட்ட தொழிற்சாலைச் சட்டத்தில்தான், முதன்முதலாகத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஆண்களின் வேலை நேரம் 12 மணி நேரத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்று கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டது. மேலும், 6 மணி நேர வேலைக்குப் பிறகு அரை மணி நேரம் ஓய்வெடுத்துக்கொள்ளவும் அனுமதிக்கப்பட்டார்கள்.

நாயரின் பங்களிப்பு: நவீன இந்திய வரலாற்று நூல்களில், இந்தியாவில் தொழிற்சாலைச் சட்டங்கள் இயற்றப்பட்ட வரலாற்றையும், தொழிலாளர் உரிமைகளுக்காகப் போராடிய அரசியல் தலைவர்களைப் பற்றியும் தவறாமல் பேசப்படுகிறது. என்றாலும், இங்கிலாந்து வரை சென்று இந்தியத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடிய டி.எம்.நாயரைப் பற்றி எந்தக் குறிப்புகளையும் பார்க்க முடிவதில்லை.

இந்தியாவில், 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கான முக்கிய மையமாக சென்னை மாநகரம் விளங்கியிருக்கிறது. தொழிற்சங்கங்கள் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படுவதற்கும் சென்னையில் நடந்த தொழிலாளர் போராட்டங்கள்தான் முக்கிய காரணம். அதே நேரத்தில், தமிழ்நாட்டின் தொழிலாளர் உரிமைப் போராட்ட வரலாற்றிலும்கூட டி.எம்.நாயர் நினைவுகூரப்படுவதில்லை.

எட்டு மணி நேர வேலையை உறுதிசெய்ததற்காக இந்தியாவிலேயே முதன்முதலில் மே தினம் கொண்டாடப்பட்டது சென்னை கடற்கரையில். அதற்கு முன்பே, அதன் முதற்படியாக இந்தியத் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாகக் குறைப்பதற்குப் பெருமுயற்சிகள் எடுத்த நாயரை நாம் நினைவுகூர மறந்துவிட்டோம். திராவிட இயக்கத்தின் தலைவராக மட்டுமில்லை, தொழிலாளர்களின் தலைவராகவும் நினைவுகூரப்பட வேண்டியவர் அவர்.

ஜூலை 17: டி.எம்.நாயர் நினைவு நாள்

- தொடர்புக்கு: ilavenilse@gmail.com

To Read in English: T M Nair: The voice of workers’ rights

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x