Published : 17 Jul 2023 05:53 AM
Last Updated : 17 Jul 2023 05:53 AM

தமிழகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிப்பதில் சிறப்பு கவனம்: மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் உறுதி

பூபேந்திர யாதவ்

சென்னை: சென்னையை அடுத்த கோவளம் கடற்கரை கழிமுக உவர் நிலங்களில் அலையாத்திக் காடுகளை உருவாக்கும் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் பூபேந்திர யாதவ் நேற்று முன்தினம் சென்னை வந்திருந்தார்.

அவர் 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ளூர் சூழ்நிலைகளின் அடிப்படையில், பசுமையைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மாநில அரசின் முயற்சிகளுக்குத் தேவையான வழிகாட்டுதல்கள், கொள்கைகளை வகுப்பது மத்திய அரசின் முதன்மை பணியாகும்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், நகர்வனத் திட்டம், பள்ளி நர்சரி திட்டம் போன்ற புதுமைத் திட்டங்களை அண்மையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

நகர்வனத் திட்டத்தில் 2020-21 முதல் 2026-27 வரை நாட்டில் 600 நகர் வனங்கள், 400 நகரத் தோட்டங்களை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இது காடுகளுக்கு வெளியே மரங்கள் மற்றும் பசுமையை மேம்படுத்தல், பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளை மேம்படுத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ரூ.17.47 கோடியில், 10 திட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, இளம் மாணவர்களுக்கும், தாவரங்களுக்கும் இடையே பிணைப்பை ஏற்படுத்துவதன் மூலம்,இயற்கையைப் பராமரிக்கும் பழக்கத்தை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, பள்ளி நர்சரித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

2020-21 முதல் 2024-25 வரை 5,000பள்ளி நர்சரிகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் கீழ் தமிழகத்தில் 38 பள்ளி நர்சரிகளை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு 906.9 கி.மீ. தொலைவு கடற்கரையைக் கொண்டதாகவும் உள்ளது. கடற்கரை வாழ்விடங்கள் மற்றும் உறுதியான வருமானத்துக்கான சதுப்புநில முன்முயற்சித் திட்டத்தின் கீழ் 47.71 சதுர கி.மீ. பரப்பில் அலையாத்திக் காடுகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டு, கோவளத்தில் அலையாத்திக் காடுகள் அமைக்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிகத்தில் பசுமைப் பரப்பை அதிகரிப்பதில் மத்திய அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது. பசுமை இந்தியாவை நோக்கிய இந்தப் பயணத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களையும் அழைத்துச் செல்வதில் பிரதமர் மோடி அரசு உறுதியாக உள்ளது.

தற்போது, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் 5 நீதித் துறை உறுப்பினர்கள் 5 தொழில்நுட்ப உறுப்பினர் பதவிகள்காலியாக உள்ளன. தீர்ப்பாயத்தின் உறுப்பினர்களை நியமிக்கும் நடவடிக்கைகளை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து முடிவெடுக்கும் அதிகாரம் தீர்ப்பாயத்தின் தலைவருக்கே உள்ளது.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகளின்படி, ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்கள் நாடு முழுவதும் தடைசெய்யப்பட்டுள்ளன. குறைந்த தடிமன்கொண்ட பிளாஸ்டிக் பைகள் தடைசெய்யப்பட்டு, கடந்த டிச. 31-ம் தேதி முதல் 120 மைக்ரான் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. மத்தியஅரசு விதித்துள்ள தடைக்கும் மேலாக, ஒரு மாநிலத்தின் சூழல், தேவைகளைக் கருத்தில்கொண்டு, இதர பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தடை விதிக்கலாம்.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், ‘ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் (SUP)’ செயலியை உருவாக்கியது. அதில், மத்திய அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குறித்து புகார்களைத் தெரிவிக்கலாம். மாநில அரசு விதித்துள்ள தடைகள் தொடர்பாக கூடுதல் அம்சங்களை உருவாக்க, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

மக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், சுற்றுப்புறச் சூழல் உயிரியல் செயல்முறைகளால் சிதைவடையலாம். மக்கும் பிளாஸ்டிக்கிலிருந்து தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பேக்கேஜிங் பொருட்கள், நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்பு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. தற்போதைய நிலவரப்படி, மக்கும் பிளாஸ்டிக் பொருட்கள்எதற்கும், மத்திய மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் சான்று அளிக்கவில்லை.நீட்டிக்கப்பட்ட உற்பத்தியாளர் பொறுப்புதிட்டத்துக்கான வழிகாட்டுதல்களை,மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த ஆண்டு பிப்ரவரியில் உருவாக்கியுள்ளது.

அதன்படி, ஒரு பொருளை பிளாஸ்டிக் உறையில் அடைக்கும் தயாரிப்பாளர், இறக்குமதியாளர், பிராண்ட் உரிமையாளர் ஆகியோருக்கு, அந்த பிளாஸ்டிக்கை திரும்பப் பெற்று மேலாண்மை செய்யும் கடமை உள்ளது. அவர்கள் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். தற்போது வரை 21,672 தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் பிராண்ட் உரிமையாளர்கள் மற்றும் 2,003 பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை செய்வோர் இதில் பதிவு செய்துள்ளனர். இதன்படி, 2022-23-ம் ஆண்டில் 30 லட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்கள் கையாளப்பட்டுள்ளன.

பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திருத்த விதிகளில், பிளாஸ்டிக் பைகளில் பொருட்களை அடைத்து விற்கும்தயாரிப்பாளர்கள், இறக்குமதியாளர்கள் மற்றும் பிராண்ட் உரிமையாளர்கள் ஆகியோர் வைப்புத்தொகை பெற்று, பிளாஸ்டிக் பொருட்களை திரும்பப் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதை, வைப்புத்தொகை திரும்ப அளிக்கும் திட்டம் என்று அழைக்கிறோம்.

கேதார்நாத்தில் மாவட்ட நிர்வாகம், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்துடன் இணைந்து இந்த திட்டத்தை செயல்படுத்துகிறது. ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள நந்தன்கானன் விலங்கியல் பூங்காவும் இந்த திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது. இவ்வாறு மத்திய அமைச்சர் கூறினார்.

தமிழ்நாடு 906.9 கி.மீ.தொலைவு கடற்கரையைக் கொண்டதாகவும் உள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x