Published : 04 Jul 2023 06:22 AM
Last Updated : 04 Jul 2023 06:22 AM

பரிணாமம் என்னும் அடிப்படை அறிவியல்

இயற்கையில் காணும் எல்லாவற்றையும் பற்றிப் பேசுவது ‘இயற்கை வரலாறு’. இச்சொல் அரிஸ்டாட்டில், பிளினி போன்றவர்களால் முதன்முறையாகப் பயன்படுத்தப்பட்டது. உயிருள்ளவை, மற்றவை,வானியல், தொழில்நுட்பம் எல்லாமே இயற்கை வரலாறாகப் பார்க்கப்பட்டன. பிற்காலத்தில், உயிரினங்களைக் குறித்த தனித்த அறிவை அடையாளப்படுத்துவதற்காக லாமார்க், ட்ரெவிரானுஸ் என்கிற இரண்டு அறிஞர்கள் ‘உயிரியல்’ என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார்கள்.

உயிரினங்களின் அமைப்பு, வாழ்க்கை முறை, வளர்ச்சி, இனப்பெருக்கம், மரபியல் - எல்லாவற்றையும் உயிரியல் பேசுகிறது. உயிரினத்தின் தகவமைப்புகள் அவ்வுயிரினம் தோன்றிய காலச்சூழலின் அடையாளங்களாகும். ‘பரிணாமவியல் என்கிற அறிவியல் புலம்தான் இந்தப் புரிதலை நமக்குத் தந்திருக்கிறது. பரிணாம வெளிச்சம் இல்லையென்றால், நம் உயிரியல் அறிவு பொருளற்றுப் போய்விடும்’ என்பார், பரிணாமவியலாளர் டாப்சான்ஸ்கி.

அறிவியலும் சமயமும்: நவீன அறிவியல் கோட்பாடுகள் தோன்றிய காலம், கத்தோலிக்க சமய நிறுவனம் கேள்வி கேளாத விசுவாசத்தைக் கட்டளை போலத் திணித்துவந்த காலம் அது. அக்காலத்தில் சமய நம்பிக்கைக்கு எதிரான அத்தனை முன்னெடுப்புகளும் அடித்து ஒடுக்கப்பட்டன. ‘உலகம் ஒரு கோள உருண்டை, அது சூரியனை வலம்வருகிறது’ என்றார் கலீலியோ கலீலி. கத்தோலிக்க சமய வல்லுநர்கள், தலைமைக் குருக்களின் முடிவுகளால் அவர் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு, அவலமான மரணத்துக்குத் தள்ளப்பட்டார்.

இன்று உலகமே ஏற்றுக் கொண்டிருக்கும் இந்த அறிவியல் உண்மையை வெளியிட்ட கலீலிக்கு அன்று இழைக்கப்பட்ட அநீதிக்காக, 350 ஆண்டுகளுக்குப் பிறகு சமயத் தலைமை பொது மன்னிப்புக் கோரியது. சமய நம்பிக்கையாளர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும் என்கிற குடியாட்சிக் கோட்பாட்டில் நமக்கு முழுமையான உடன்பாடு உண்டு. அதே வேளையில், மெய்யறிவைத் தேடும் மனிதர்களின் உரிமையும் மதிக்கப்பட வேண்டும்.

உயிரினத் தோற்றக் கோட்பாடு: சார்லஸ் டார்வின், ‘பரிணாமவியலின் தந்தை’ எனப் போற்றப்படுகிறார். ‘உயிரினங்களின் தோற்றம்’ (On the Origin of Species) என்கிற நூலை அவர் 1859இல் வெளியிட்டார். அவரது சமகாலத்தவரான கிளாட் பெர்னார்ட் (1813-1878) வெளியிட்ட ‘அகவயச் சமநிலை’ கோட்பாடு, டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுக்கு வலிமை சேர்த்தது.

டார்வினியக் கோட்பாட்டில் வெளிப்பட்ட பல போதாமைகளை ஆஸ்திரியத் துறவி கிரகர் யோஹன் மெண்டெல் முன்வைத்த மரபியல் கோட்பாடுகளும் ஹியுகோ டி வரீஸின் சடுதி மாற்றக் கோட்பாடும் சரிசெய்தன. தொடர்ந்து, நவ-டார்வீனிய, நவ-லாமார்க்கியக் கோட்பாட்டாளர்களின் ஆய்வுகள் புதிய பரிணாமக் கொள்கைக்கு வழிவகுத்தன.

வாலில்லாக் குரங்கும் மனிதனும் ஒரு கிளையில் இருந்து பிரிந்த உயிரினங்கள் என்பது இன்றைக்கு ஓர் அறிவியல் உண்மையாக ஏற்கப்பட்டுள்ளது. பால் ஆமோஸ் மூடி தன்னுடைய ‘பரிணாமவியல்: ஓர் அறிமுகம்’ என்கிற நூலின் பின்னுரையில் இப்படி எழுதினார்: ‘பைபிள் நம்பிக்கையின் புத்தகம், அறிவியலின் புத்தகமல்ல.’ மூடியிடம் வெளிப்பட்ட இதே தெளிவுதான் சமய அடிப்படைவாதிகளிடமிருந்து நம்மை வேறுபடுத்துகிறது.

சமய நம்பிக்கையாளர், தான் நம்புகிற ஒன்றுக்கு ஆதாரங்களை முன்வைக்க வேண்டியதில்லை. நம்பிக்கை என்பது தனிநபர் உரிமை. ஆனால், அறிவியல் அது போன்றதல்ல. மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கத்தக்க ஒன்றையே அறிவியல் ஏற்றுக்கொள்ளும்.

பரிணாமம் ஓர் அறிவியல் புலம்: பரிணாமவியல், அறிவியல் அடிப்படைகளைக் கொண்ட புலம்; தொல்லியல், செல்லியல், மரபியல், உயிர்-வேதியியல், வடிவமைப்பியல் உள்ளிட்ட பல்துறை ஆதாரங்களின் அடிப்படையில் உருவான அறிவியல்புலம். நுண்ணுயிர் தொடங்கி, மனிதர் உள்ளிட்ட எல்லா உயிர்களும் செல்களால் ஆனவை; செல்லின் அடிப்படைச் செயல்பாடுகள் உலகின் அனைத்து உயிர்களிலும் ஒன்றுபோல் அமைந்திருக்கின்றன.

மீன், தவளை, பல்லி, பறவை, மனிதன் உள்ளிட்ட பாலூட்டி - எல்லாவற்றிலும் இடப்பெயர்வு உறுப்புகளின் அடிப்படைக் கட்டுமானம் ஒன்றாக உள்ளது. வேறு வேறு தொகுதிகளில் அவ்வுறுப்புகள் துடுப்பு, கால்கள், இறக்கை என்பதாகப் பல வகையில் பரிணாமம் அடைந்துள்ளன. மனிதர்களிலும் வாலில்லாக் குரங்குகளிலும் காணப்படும் குருதி ஏமப் புரதங்களும், நாளமில்லாச் சுரப்புகளும் முக்கியமான பொதுப் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.

கணினி மென்பொருளில் செயல்படுவதுபோல, வளரும் கருவில் ஒரு திட்ட நிரல் செயல்படுகிறது. இதை மரபியல் திட்ட நிரல் என்று அழைக்கலாம். கரு ஒன்று மனிதக் குழந்தையாக மாறும்போது, அதன் பரிணாம வரலாறு மீள நிகழ்த்தப்படுகிறது: ஒரு செல் உயிரியாக, ஈரடுக்கு உயிரியாக, புழுவாக, மீனாக, தவளையாக, பாலூட்டியாக - இப்படிப் பல நிலைகளைக் கடந்துதான் கரு மனிதக் குழந்தையின் வடிவத்தை வந்தடைகிறது. ‘ஒரு கருவின் வளர்ச்சி என்பது, பரிணாம வரலாற்றின் மறுநிகழ்த்தல்’ என்பார் எர்னெஸ்ட் ஹெக்கேல்.

பரிணாமக் கோட்பாடும் சமத்துவக் கோட்பாடும்: உயிர்ப் பரிணாமம் நிகழ்ந்த 160 கோடி ஆண்டு காலத்தை ஒரு நாளின் 24 மணி நேரத்துக்கு ஒப்பிட்டால், ஆதி மனிதனின் வரவு நள்ளிரவு 23:55 மணிக்கு நிகழ்ந்தது எனக் கொள்ளலாம். இப்படி, ஆகக் கடைசியில் வந்துசேர்ந்த மனிதன் 160 கோடி ஆண்டுகால உயிர்த் தகவமைப்புகளையும் நடத்தைக் கூறுகளையும் பெற்றுக்கொண்டது எப்படி? நடத்தைக் கூறுகளைச் சமூகத்தின் தொகுப்பு நினைவாக (collective memory) சேமித்து, அடுத்த தலைமுறைக்குக் கடத்துகிற வேலையை ஒவ்வொரு தலைமுறையும் பழுதின்றிச் செய்துவந்துள்ளது. மனிதன் அவ்விலங்குகளிடமிருந்தே அவனது பண்புகளைப் பெற்றுக்கொண்டான். இதில் எள்முனையளவும் ஐயமில்லை. அவ்வகையில் மனிதன் அனைத்துயிர்களின் உறவினன்.

பவளப்புற்றுகள் பலவகைப்பட்டவை. ஒவ்வொரு பவளப்புற்று இனமும் அமைக்கும் புற்றுகளின் வடிவம் தனித்துவமானது. எத்தனை முறை தரைமட்டம் ஆக்கினாலும் வேலைக்காரக் கறையான்கள் இரண்டே மாதங்களில் கூட்டை மீளக் கட்டிவிடுகின்றன - அதே வடிவ நுணுக்கத்துடன், கிட்டத்தட்ட அதே அளவில். 60 நாள்களே ஆயுள் கொண்ட வேலைக்காரக் கறையான்கள், எப்படி இக்கலையைக் கற்றுத் தேர்ந்து, இளைய தலைமுறைக்குக் கடத்துகின்றன என்பது விந்தையே. தேனீக்களும் கறையான்களும் அமைக்கும் கூட்டின்/புற்றின் திட்டமும், கட்டிடக் கலை நுணுக்கமும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் குழு அனுபவங்களின் நினைவுத் தொகை. பரிணாம அறிவியல் நினைவையும் பின்தொடர்ச்சியையும் பற்றியதாகும்.

மனித மையப் பார்வைக்கு மாற்று தேவை: இந்தியச் சூழலில் சமயவாதிகள் சாதிப் படிநிலையை நிலைநிறுத்த சமய நம்பிக்கைகளைத் துணைக்கு அழைப்பது காலம்தோறும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தமிழ் கூறும் நல்லுலகு அற்புதமான கருத்தியல் ஒன்றை முன்வைத்திருக்கிறது: ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’. இதன் பொருள், எல்லா மனிதரும் சமம் என்பதாகும். உயிர்களில் மனிதன் உயர்ந்தவன் என்கிற பார்வையும் இயற்கைக்கு எதிரானதே.

பரிணாமப் படிநிலையை முன்வைத்து மனித இனம் மேட்டிமை கோருவது மனித மையப் பார்வையாகும். மனிதனின் தேவைகளை முன்வைத்து இயற்கையை, பிற உயிர்களை அழிக்கலாம் என்பது இப்பார்வையின் நீட்சியே. உண்மையில், நம் மூலவர்கள் நுண்ணுயிரிகள்! இன்னும் சொல்லப்போனால், பரிணாம ஏணியைத் தலைகீழாக நிறுத்துவதே நலமான பார்வையாகும். மனித மையப் பார்வையைக் கடந்து செல்வதற்குச் சிறந்த வழி, பரிணாமவியலை அறிந்து தெளிவதே.

இறுதியாக... பரிணாமக் கோட்பாட்டை மறுப்பது, அறிவியலை மறுப்பதாகும். மெய்யறிவைப் புறக்கணிக்கும் யத்தனிப்புகள் மனித குலத்தைக் கற்காலத்தை நோக்கி நகர்த்திவிடும். அவ்வாறான முயற்சிகள் முளையிலேயே கிள்ளியெறியப்பட வேண்டும். பள்ளிப் பாடத்திட்டத்திலிருந்து பரிணாமப் பாடத்தை நீக்கும் யோசனையை என்சிஇஆர்டி போன்ற கல்வி அமைப்புகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். தமிழக அரசும் இதில் கவனம் பேண வேண்டும். 

மீன், தவளை, பல்லி, பறவை, மனிதன் உள்ளிட்ட பாலூட்டி - எல்லாவற்றிலும் இடப்பெயர்வு உறுப்புகளின் அடிப்படைக் கட்டுமானம் ஒன்றாக உள்ளது!

To Read in English: Evolution: The basic science

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x