Published : 04 Jul 2023 06:35 AM
Last Updated : 04 Jul 2023 06:35 AM

என்சிபி மாநில தலைவராக சுனில் தட்கரே நியமனம் - அஜித் பவார் அணியினர் அறிவிப்பு

சுனில் தட்கரே - பிரபுல் படேல்

மும்பை: மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜெயந்த் பாட்டீல் நீக்கப்பட்டு, புதிய தலைவராக சுனில் தட்கரே நியமிக்கப்பட்டுள்ளதாக அஜித் பவார் அணியினர் அறிவித்துள்ளனர். தேசிய தலைவராக சரத் பவார் நீடிப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

மகாராஷ்டிராவில் சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) நேற்று முன்தினம் உடைந்தது. சரத் பவாரின் அண்ணன் மகனும் கட்சியின் மூத்த தலைவருமான அஜித் பவார், கட்சியின் 40 எம்எல்ஏக்களுடன் ஆளும் பாஜக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அரசில் துணை முதல்வராக பதவியேற்றார். அஜித் பவாருடன் சென்ற எம்எல்ஏக்களில் 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். கட்சியின் பெயர் மற்றும் சின்னம் தங்களுக்கே சொந்தம் என்றும் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா பேரவை தேர்தலை பாஜகவுடன் இணைந்து எதிர்கொள்வோம் என்றும் அஜித் பவார் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் என்சிபி தலைவர் சரத் பவார் நேற்று குரு பூர்ணிமாவை முன்னிட்டு மகாராஷ்டிராவின் முதல் முதல்வரும் தனது வழிகாட்டியுமான யஷ்வந்த் ராவ் சவானின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அப்போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசும்போது, வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான எனது போர் இன்று தொடங்கியுள்ளது. இதுபோன்ற கிளர்ச்சிகள் நடக்கத்தான் செய்யும். அனைத்து எதிர்க்கட்சிகளையும் பாஜக அழிக்க நினைக்கிறது. என்சிபியை மீண்டும் கட்டியெழுப்புவேன்.

என்சிபி.யை உடைக்க முயன்றவர்களுக்கு அவர்களின் உண்மையான இடத்தை காட்டுவோம்” என்றார். பின்னர் சதாரா நகரில் செய்தியாளர்களிடம் சரத் பவார் பேசும்போது, “தேசியவாத காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும் மாநிலம் தழுவிய சுற்றுப் பயணம் தொடங்கியுள்ளேன். சில தலைவர்கள் செய்ததைக் கண்டு தொண்டர்கள் விரக்தி அடைந்துவிடக் கூடாது” என்றார்.

5 பேர் நீக்கம்: இதற்கிடையில் அஜித் பவார் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற தலைவர்களுக்கு எதிராக சரத் பவார் நேற்று நடவடிக்கை எடுக்கத் தொடங்கினார். என்சிபி எம்பி.க்கள் பிரபுல் படேல், சுனில் தாக்கரே, என்சிபி மும்பை மண்டல தலைவர் நரேந்திர ரத்தோட், அகோலா மாவட்டத் தலைவர் விஜய் தேஷ்முக், மாநில பொதுச் செயலர் சிவாஜிராவ் கார்ஜே ஆகியோரை கட்சியை விட்டு நீக்கினார்.

கட்சிக் கட்டுப்பாட்டை மீறிய எம்பி.க்கள் பிரபுல் படேல், சுனில் தட்கரே ஆகியோர் தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என சரத் பவாருக்கு அவரது மகளும் மக்களவை எம்பியுமான சுப்ரியா சுலே கடிதம் அனுப்பினார்.

இந்நிலையில் சரத் பவார் அறிவிப்பை தொடர்ந்து, என்சிபி மாநிலத் தலைவர் பதவியில் இருந்து ஜெயந்த் பாட்டீல் நீக்கப்பட்டு, புதிய தலைவராக சுனில் தட்கரே நியமிக்கப்பட்டுள்ளதாக அஜித் பவார் அணியினர் அறிவித்துள்ளனர்.

என்சிபி தேசிய தலைவராக சரத் பவார் தொடர்ந்து நீடிப்பதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர். மகாராஷ்டிரா வளர்ச்சியை கருத்தில் கொண்டே மாநில அரசில்இணையும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

அஜித் பவார் அணியில் இணைந்துள்ள பிரபுல் படேல் கூறும்போது, “என்சிபி சட்டப்பேரவை கட்சித்தலைவராக அஜித் பவார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் மூத்த தலைவர் அனில் பைஜாஸ் பாட்டீல் கட்சியின் தலைமை கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த முடிவு களை சபாநாயகரிடம் தெரிவித்துள்ளோம்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x