Last Updated : 30 Mar, 2022 04:22 PM

 

Published : 30 Mar 2022 04:22 PM
Last Updated : 30 Mar 2022 04:22 PM

'எங்கள் பிள்ளைகளை எந்த ஐடி நிறுவனமும் சேர்த்துக்கொள்ளாது!' - கண்ணகி நகர்... அவலத்தை மறைக்கவா ஒப்பனைகள்?

எளிய மக்கள் வசிக்கும் இடம் என்பதாலோ என்னவோ, கண்ணகி நகர் என்றாலே போதைப்பொருள் துஷ்பிரயோகம், குற்றங்கள் பற்றிய கதைகளுடன் அதனை இணைத்துப் பார்ப்பதே சமூகத்தின் பொதுப்புத்தியாக இருந்துவந்தது. இந்தப் போக்கை அங்கே வரையப்பட்டு இருக்கும் வண்ணமயமான சுவரோவியங்கள் மாற்றியமைத்து உள்ளன. இன்று கண்ணகி நகர் என்றாலே, அதன் பிரமாண்டமான ஓவியங்களே நம் மனத்தினுள் முதலில் விரிகின்றன. சென்னை மாநகராட்சியின் அழைப்பின் பேரில், கண்ணகி நகரைக் கலை நகரமாக மாற்றும் முயற்சியில் 'ஸ்டார்ட் ஆர்ட் இந்தியா பவுண்டேசன்' எனும் அமைப்பு ஈடுபட்டதால் ஏற்பட்ட மாற்றம் இது.

உதிர்ந்த வண்ணமும், இடிந்த சுவருமாய் இருந்த கண்ணகி நகர் குடியிருப்புகள் வண்ணமயமான சுவரோவியங்களால் புதுப்பொலிவு பெற்றுள்ளன. அங்கே வசிக்கும் எளிய மக்களின் அன்றாட வாழ்வியலைப் பிரதிபலிக்கும் அந்தச் சுவர் ஓவியங்கள், அவர்களின் வாழ்வுக்குப் புது அர்த்தம் சேர்த்துள்ளன; உத்வேகமும் அளித்துள்ளன; இதன் நீட்சியாக, கண்ணகி நகரைக் குறித்த சமூகத்தின் பார்வையும் சற்றே மாறியிருப்பது போன்ற பிம்பமும் இன்று கட்டமைந்து வருகிறது.

கண்ணகி நகரின் அமைப்பு

சென்னை புறநகர்ப் பகுதியில், கிழக்கு கடற்கரைச் சாலைக்கும் ஐடி எக்ஸ்பிரஸ் ஹைவேக்கும் இடையில், செல்வச் செழிப்பைப் பறைசாற்றி வானுயர வளர்ந்து நிற்கும் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் ஊடே ஒளிந்து நிற்கிறது கண்ணகி நகர். இந்தியாவின் மிகப்பெரிய மீள்குடியேற்றப் பகுதி இது. அங்கிருக்கும் 24,000-க்கும் மேற்பட்ட வீடுகளில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கின்றனர். நகரத்தின் நவீனத்துவமும் மிக அருகாமையில் இருக்கும்போதும், இந்த புறநகர்ப் பகுதி நகரத்தின் கூறுகளுக்கு மிகவும் அந்நியப்பட்டே நிற்கின்றது.

துரைப்பாக்கத்தில் இருக்கும் நவீன அடுக்குமாடிக் குடியிருப்பு பகுதிகளைக் கடந்து செல்லும்போது, சட்டென கண்ணகி நகர் நம் கண்முன்னே விரிந்து நிற்கிறது. மிகுந்த விசாலமான பரப்பைக் கொண்டதாக இருக்கும் இந்தப் பகுதியின் நுழைவு பகுதியிலேயே நகரப் போக்குவரத்துக் கழகத்தின் பணிமனை இருக்கிறது. அதிலிருந்து சில அடி தூரத்தில் அரசாங்க மருத்துவமனையும் இருக்கிறது. சாலைகள் அகலமாகவும், நல்ல தரமானதாகவுமே இருக்கின்றன. அந்தச் சாலையின் இறுதியில், ஒரு பெரிய பூங்கா இருக்கின்றது.

ஜன்னலை எப்படித் திறப்பது?

நான் சென்றபோது, அந்தப் பூங்காவுக்கு உள்ளும், வெளியும் மக்கள் அமர்ந்து கதை பேசிக்கொண்டு இருந்தனர். சிலர் சிந்தனையில் மூழ்கியபடி தனியே அமர்ந்தும் இருந்தனர். சுவரோவியங்கள் வரையும் இடம் எங்கே இருக்கிறது என்று அங்கே இருந்த ஒருவரிடம் குறித்துக் கேட்டபோது, எவ்வித உணர்ச்சியுமின்றி எனக்கு வழிகாட்டினார். அதைக் கவனித்தபடி அமைதியாக அமர்ந்திருந்த ஒரு நபர், "நீங்கள் யார்?" என்று என்னிடம் கேட்டார். கேள்வி கேட்டவரின் பெயர் ஆல்பர்ட், அவருக்குச் சுமார் 35 வயது இருக்கலாம்.

என்னை அறிமுகப்படுத்திய பின்னர், அவரிடம் சுவரோவியங்கள் குறித்துக் கேட்டேன். "அடிப்படை வசதிகள் முழுமையாகக் கிடைக்காத சூழலில் வாழும் எங்களுக்கு இந்த ஓவியங்களால் என்னப் பயன்? குடியிருப்புகளுக்குத் தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற வழியில்லை. ஜன்னலைத் திறந்தாலே நாற்றமும், கொசுக்களும் சேர்ந்து எங்களைத் தாக்குகின்றன. இந்த நிலையில், நாங்கள் எங்கே ஜன்னலைத் திறப்பது, ஓவியங்களை ரசிப்பது" என்று ஆதங்கத்தைக் கொட்டினார். அவர் ஆதங்கத்தின் நியாயமும் வேதனையும் அவர் குரலில் அழுத்தமாக எதிரொலித்தன.

ஆல்பர்ட்
ஆல்பர்ட்

ஓவியங்களின் ஊடே தேங்கி நிற்கும் கழிவுநீர்

அவர் அமர்ந்திருந்த இடத்துக்கு எதிரில் இருக்கும் கட்டிடத்தில், அழகான ஓவியங்கள் வரையப்பட்டு இருந்தன. அந்த ஓவியங்கள் இரண்டு அடுக்குமாடி கட்டிடங்களை இணைப்பதாக இருந்தன. அந்த ஓவியத்தின் அழகில் மயங்கி அருகில் செல்லும்போதுதான், அந்தக் கட்டிடங்களுக்கு இடையே தேங்கி நிற்கும் கழிவுநீர் கண்ணில்பட்டது. அதன் நாற்றம் சுவாசத்தை நிறுத்தும் அளவுக்கு மூர்க்கமாக இருந்தது. அங்கிருந்து நகர எத்தனித்தபோது "பத்து ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தாதன் விளைவு இது" என்று சொன்னபடியே ஒரு முதியவர் அருகில் வந்தார். பாண்டியன் என்று தன்னை அறிமுகப்படுத்தியவர் "இந்தச் சுவரோவியங்கள் எங்கள் இருப்பிடத்துக்குப் புது அடையாளத்தை வழங்கியிருக்கின்றன. இப்போது தேர்தலும் முடிவடைந்துவிட்டதால், குடியிருப்பின் அவல நிலை விரைவில் மாறிவிடும்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.

பாண்டியன்
பாண்டியன்

வேரோடு பிடுங்கி எறிந்துவிட்டார்கள்

"அப்படி எல்லாம் இங்கே எதுவும் எளிதில் மாறிடாது. பத்தாண்டுகளுக்கும் முன்பும் நிலைமை இப்படித்தான் இருந்தது. இப்போதும் நிலை இப்படித்தான் இருக்கிறது. நாளையும் இது இப்படித்தான் இருக்கப் போகிறது" என்று அங்கிருந்த மற்றொருவர் பாண்டியனைக் கடிந்து பேசினார். அவர் பெயர் போஸ். வயது சுமார் 60 இருக்கலாம். மிகுந்த விரக்தியுடன் பேசத் தொடங்கியவர், "சொந்தவூரில் வாழும் அகதிகள் நாங்கள். எங்களை வேரோடு பிடுங்கி வந்து இங்கே எறிந்துவிட்டார்கள். சமுத்திரத்தை நம்பியிருந்த நாங்கள் பிழைப்புக்கு வழியின்றி கிடைத்த வேலையைச் செய்தபடி வயிற்றைக் கழுவித் திரிகிறோம். எங்கள் பிள்ளைகள் படித்தாலும், படிப்புக்கு ஏற்ற வேலைக்குச் செல்ல முடியவில்லை. கண்ணகி நகர் என்கிற பெயரைப் பார்த்தவுடன் எங்கள் பிள்ளைகளை எந்த ஐடி நிறுவனமும் சேர்த்துக்கொள்வது இல்லை" என்று வேதனையுடன் கூறிவிட்டுச் சென்றார்.

நான்கு நாட்களுக்கு ஒருமுறை வரும் தண்ணீர்

ஓவியம் வரையும் இடம் நோக்கி நகரத் தொடங்கியபோது, எதிரில் வந்த இருதயராணி "இந்த ஓவியங்களைப் பார்த்தால், எங்கள் குழந்தைகளுக்கும் ஓவியம் வரையும் ஆர்வம் ஏற்படும் சொல்கிறார்கள். அன்றாட பிரச்சினைகளில் அல்லாடும் எங்களின் நிலை இவர்களுக்குப் புரிந்திருந்தால், இவர்களால் இப்படிச் சொல்லியிருக்க முடியாது. வீட்டைச் சுற்றி கழிவுநீர் தேங்கி நிற்கிறது. கொசுத் தொல்லை வேறு. நான்கு நாட்களுக்கு ஒருமுறையே இங்கே தண்ணீர் வரும். அதையும் அடிப்பம்பின் மூலமே அடித்து எடுக்க வேண்டும். இது ஏன், நீண்ட மறியல் போராட்டத்துக்குப் பின்னரே எங்கள் பகுதிக்குப் போக்குவரத்து வசதியே கிடைத்தது. அதுவும் நாங்கள் இங்கு வந்து பத்தாண்டுகள் ஆன பின்னரே கிடைத்தது. இந்த ஓவியங்களில் கொட்டும் பணத்தையும், உழைப்பையும் இங்கிருக்கும் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தப் பயன்படுத்தலாம். அது குறித்து இவர்களுக்கு எங்கே அக்கறை இருக்கப் போகிறது. ஓவியம் வரைவதும், போட்டோ எடுப்பதும், வீடியோ எடுப்பதுமே இவர்களுக்கு முக்கியம்" என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தண்ணீர் வருகிறது என்கிற குரல் கேட்டு, திரும்பிக் கூட பார்க்காமல் விரைந்து ஓடினார்.

இருதயராணி

ஓவியம் வரையும் பெண்

அவர் கூறியபடியே அருகிலிருந்த ஒரு கட்டிடத்தில், கிரேனில் நின்றபடி ஓர் இளம்பெண் அழகான ஓவியம் ஒன்றை வரைந்து கொண்டிருந்தார். அந்த ஓவியத்தில் அவர் பெயரும் எழுதப்பட்டு இருந்தது. கீழே நின்றுகொண்டிருந்த அவர் கணவர் அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்தார். அந்த கட்டிடத்துக்கு அருகில், கழிவுநீர் தேங்கி நின்றுகொண்டிருந்தது. அவர் கையிருந்த வீடியோ மேல் நோக்கியதாக மட்டுமே இருந்தது. கீழே தேங்கி நிற்கும் கழிவுநீர் குறித்து எவ்வித பிரஞ்ஞையுமின்றி மனைவி வரையும் ஓவியத்தை அவர் ரசித்துக்கொண்டு இருந்தார்.

மீனை வெறுக்கும் மகள்

அருகிலிருக்கும் பெட்டிக்கடையில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஒரு பெண் (பெயர் சொல்ல விரும்பவில்லை) "சுனாமியிலிருந்து மீண்ட எங்களை, இந்தக் குழியில் பிடித்துத் தள்ளிவிட்டு விட்டார்கள். 16 வயதில் இங்கே வந்தேன். இன்று என்னுடைய மகளுக்கு 16 வயதாகிறது. மீன்பிடிக்கும் தொழிலே என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறை இன்று வளர்ந்து நிற்கிறது. மீன் வாசனையைக் கூட வெறுக்கும் அளவுக்கும் அவர்கள் இருக்கிறார்கள். ஆத்ம திருப்திக்காக வெளியிலிருந்து மீன் வாங்கிவந்து விற்கும் என்னுடைய அம்மாவின் அருகில் செல்வதற்குக் கூட என்னுடைய மகள் தயங்குகிறாள். மீன் வாசனையை அந்த அளவுக்கு அவள் வெறுக்கிறாள்" என்று வேதனையுடன் கூறினார்.

இருப்பே கேள்விக்குறி

நகரமயமாக்கலின் கொடூரப் பிடியில் அகப்பட்டு வாழ்க்கையைத் தொலைத்து அங்கே வசிக்கும் மக்கள், அன்றாட வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்குக் கூட போராடும் சூழலில் இன்றும் இருக்கின்றனர். பொருளாதார நெருக்கடி, வாழ்வாதார பிரச்சினைகள், அவர்களை ஏற்க மறுக்கும் சமூகத்தின் பொதுப்புத்தி போன்ற காரணங்களால் அவர்களின் இருப்பே கேள்விக்குறியாகி நிற்கின்றது. அதைக் குறித்த முழுமையான புரிதலோ, அவர்களின் தேவை குறித்த தெளிவோ இன்றி அங்கே சுவரோவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.

ஓவியங்கள் மிகுந்த அழகுடன் உள்ளன. கண்களையும் மனத்தையும் கவர்கின்றன. ஆனால் குடிநீர், கழிவுநீர் வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் கூட முழுமையாக் கிடைக்காத நிலையிலிருக்கும் அந்த மக்களுக்கு இந்த வண்ண சுவரோவியங்கள் எவ்விதத்தில் பயனளிக்கும் என்பதுதான் தெரியவில்லை.

> தொடர்புக்கு mohamed.hushain@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x