Last Updated : 23 Mar, 2022 08:46 PM

Published : 23 Mar 2022 08:46 PM
Last Updated : 23 Mar 2022 08:46 PM

காசநோய் ஒழிப்பு: களப் பணியாளர்கள் கணிக்கும் பாதையை அரசுகள் பின்பற்றலாமா? - ஒரு தெளிவுப் பார்வை

இந்த ஆண்டுக்கான சர்வதேச காசநோய் ஒழிப்பு தின கருத்துரு 'Invest to End TB. Save Lives' காசநோய் ஒழிப்பில் முதலீடு செய்வோம். உயிர்களைக் காப்போம்

கரோனாவுக்குப் பின்னர் இந்த உலகம் முழுவதும் ஒற்றை நோய்க்கு எதிராக மட்டுமே போராடிக் கொண்டிருக்கின்றது. அத்தனை ஆராய்ச்சிகளும், அத்தனை தடுப்பூசிகளும் ஒரே நோய்க்கு எதிரான பாதையில் முடங்கிக் கொண்டிருக்கின்றன என்று சொல்லும் அளவுக்கு அதீத கவனம் பெற்றுள்ளது கரோனா. தீவிர ஆராய்ச்சிகள், துரித தடுப்பூசிகளால் தான் கரோனாவிலிருந்து உலகம் மீண்டு கொண்டிருக்கிறது என்பது எப்படி மறுப்பதற்கில்லையோ அதேபோல், பேசப்படாத பாகுபாடுகளால் இன்னும் சில நோய்கள் ஒழிக்கப்படாமல் அதற்கான இலக்குகள் மட்டும் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே செல்லப்படுகின்றன என்பதும் நிதர்சனம். அதனால் தான் பில் கேட்ஸ் இனி தன் கவனத்தை காசநோய் ஒழிப்பில் செலுத்தப்போவதாகக் கூறியுள்ளார்.

இங்கே ஒழிக்கப்பட வேண்டியதற்கு நிறைய நோய்கள் இருக்கின்றன. மனித சமுதாயத்தை 1400 ஆண்டுகளாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் காசநோய் அதில் முதலிடத்தில் இருக்கிறது.

மார்ச் 24... உலக காசநோய் ஒழிப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கருத்துருவாக 'Invest to End TB. Save Lives' காசநோய் ஒழிப்பில் முதலீடு செய்வோம். உயிர்களைக் காப்போம் என்பது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தினத்தையொட்டி அரசு நிகழ்ச்சிகளுக்கும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களுக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் இது ஒருநாளில் முடியும் கதையல்ல. காசநோய் ஒழிப்பிற்கு இந்தியா நிர்ணயித்துள்ள இலக்கு 2025. ஆனால், அந்த இலக்கை எட்டுவதற்கு காசநோய் ஒழிப்பில் முதலீடு செய்வது அவசியம். முதலீடு என்றால் பெரிய அளவிலான நிதி என்று மட்டும் நினைக்க வேண்டாம். அதற்கு பன்முகத்தன்மை இருக்கிறது.

டிபி லீடர்ஸ் என்ன சொல்கிறார்கள் தெரியுமா?

வளர்ச்சியோ, புரட்சியோ அது அடிமட்டத்தில் இருந்து தொடங்கப்பபட்டால்தான் பலன் தருவதாக இருக்கும். அவ்வாறாக, காசநோய் ஒழிப்பில் ரீச் தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய களப்பணியாளர்கள் சிலரிடம் 'காசநோய் இல்லாத 2025 இலக்கு' குறித்து பேசினோம்.

விழுப்புரத்தைச் சேர்ந்த ஜெயந்தியிடமிருந்து அனுபவப் பகிர்வை ஆரம்பிப்போம். ஜெயந்தி எம்.எஸ்.சி., பிஎட் படித்துள்ளார். திருமணம், குழந்தை என இவரது வாழ்க்கை இயல்பாகத் தான் சென்றது. ஆனால், குழந்தைப் பேறுக்குப் பின்னால் திடீர் காய்ச்சல், கடுமையான இருமல் என இவரை காசநோய் பாடாய்ப்படுத்தியுள்ளது. அப்போது தான் கரோனா உச்சத்தில் இருந்த நேரம் என்பதால் கரோனா தான் வந்துவிட்டதோ என்றும் பரிசோதனை செய்துள்ளார் ஜெயந்தி. ஆனால், கரோனா நெகட்டிவ் என்றே முடிவுகள் வந்தன. பின்னர் மருத்துவர் வழிகாட்டுதலுடன் காசநோய் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகள் செய்தார். கடைசியாக சிடி ஸ்கேன் செய்து பார்த்தபோது அவருக்கு காசநோய் இருப்பது உறுதியானது.

"காசநோய் ரிப்போர்ட்டுடன் நான், வெளியே குழந்தையுடன் கணவர். உலகமே இருண்டதுபோல் உணர்ந்தேன்" என்றார் ஜெயந்தி. அவரது அந்த அச்சம் உண்மைதானோ என நிரூபிப்பதுபோல் அவருடைய கணவரின் பிரிவு அமைந்தது. காசநோயாளியுடன் வாழ முடியாது என கணவர் விட்டுப்பிரிய, சமூகத்தில் இன்னமும் அந்நோய் மீதான பார்வையின் நிலை என்னவென்பதையும் அவருக்கு உணர்த்தியது. ஆனால் ஜெயந்தி ஒன்றை மட்டும் சரியாக செய்தார். 6 மாதங்களுக்கு எந்தச் சூழ்நிலையிலும் விடாமல் மாத்திரை எடுத்துக் கொண்டார். விளைவு காசநோயிலிருந்து பூரண குணமடைந்தார்.

காசநோய் தனக்கு சாத்திய கதவுகள் தான் அவரை சமூகத்தின் இறுக்கமான மனக்கதவையும் தட்ட வைத்துள்ளது. ரீச் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்று காசநோய் ஒழிப்பு களப் பணியாளர் ஆனார். காசநோயில் இருந்து மீண்டவரே களப் பணியாளர் ஆகும்போது சமூகத்தை அணுகுவது எளிது எனக் கூறுகிறார் ஜெயந்தி.

"மக்கள் முன் நான் போய் நிற்கும்போது, எனக்குக் காசநோய் இருந்தது. தொடர்ந்து மருந்து சாப்பிட்டேன். பூரண நலத்துடன் உள்ளேன். இதில் தயக்கமோ, வெட்கமோ தேவையில்லை. ஆரம்பநிலையில் சிகிச்சை, விரைவில் பூரண குணம் தரும் என்பேன். அனைவரும் கேட்டுக் கொள்வார்கள்" எனக் கூறினார். இப்போது காசநோய் களப்பணியாளராக குடும்பத்திற்கான வருமானத்தையும் ஈட்டுகிறார் ஜெயந்தி.

அவர் சொல்வதெல்லாம் ஒன்றுதான்... இன்னும் நம் சமூகத்தில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு பெரிய அளவில் தேவைப்படுகிறது. இப்படியாக கிராம அளவில், வட்ட அளவில், மாவட்ட அளவில் என களப் பணியாளர்கள் இணைந்து செயல்பட்டால் 2025 என்ன அதற்கும் முன்னதாகவே காசநோயை இந்தியாவில் இருந்து ஒழிக்கலாம் என்கிறார்.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த சுகுணா காசநோயாளி அல்ல. ஆனால், வல்லியூர் அரசு மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக இருந்தவர் கரோனா காலத்தில் காசநோயாளிகளுக்கான மாத்திரைகளை கொடுக்கும் பணியை கூடுதலாக செய்து வந்துள்ளார். அந்த வேளையில் அவரது ஒப்பந்த பணி முடிவடைய, எஸ்டிஎஸ் என அழைக்கப்படும் சீனியர் டிபி ஸ்டாஃப் உதவியுடன் டிபி ஒழிப்பு களப் பணியாளர் பணிக்கு விண்ணப்பித்து அந்தப் பணியை பெற்றுள்ளார்.

அவர் கூறியதாவது: ”சேலம், விழுப்புரம், நெல்லை, வேலூர் ஆகிய 4 மாவட்டங்களில் ரீச் அமைப்பு சார்பில் என்னைப் போன்ற களப் பணியாளர்கள் டிபி லீடர்களாக பணியமர்த்தப்பட்டனர். நாங்கள் மொத்தம் 35 பேர். ஒன்றரை ஆண்டுகள் இந்தப் பணியில் இருந்தோம். கரோனா காலத்திலும் கூட நாங்கள் எங்கள் பணியை விடாது செய்தோம். எங்களுக்கான சேஃப்டி கிட் எல்லாமே கொடுத்திருந்தனர். அத்துடன் வீடுவீடாகச் சென்று காசநோய் பற்றி விசாரிப்போம். அறிகுறிகள் உள்ளவர்களைக் கண்டறிந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வோம். கரோனா உச்சத்தில் இருந்த காலம் என்பதால் பலரும் எங்களுடன் ஒத்துழைக்க மறுப்பார்கள். நாங்கள் அவர்களுக்கு நோய் முற்றினால் ஏற்படும் சிக்கலை விளக்கி அழைத்துச் செல்வோம். பொதுவாக மக்களுக்கு காசநோய் உறுதியானால் மருத்துவமனைக்கு அலைந்து திரிய வேண்டுமோ, கூலித் தொழில் என்னவாகும் என்ற அச்சம் தான் இருக்கும்.

ஜெயந்தி (இடது), சுகுணா (வலது)

நாங்கள் அவர்களுக்கு மாத்திரை பெறுவது எவ்வளவு எளிது. ஃபோனிலேயே ஆலோசனைகளைப் பெறுவது எப்படி, ஊக்கத்தொகையை எப்படிப் பெற்றுக் கொள்ளலாம் என்றெல்லாம் சொல்வோம். அதில் அவர்கள் சிகிச்சைக்கு உடன்பட்டுவிடுவார்கள். நான் மட்டும் கடந்த 1.5 ஆண்டில் 75 நோயாளிகளை நெல்லை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடையாளம் கண்டு தந்துள்ளேன். இவர்களில் 35 பேர் 6 மாத சிகிச்சை முடித்து இயல்புக்குத் திரும்பிவிட்டனர். இன்னும் சிலர் சிகிச்சையில் உள்ளனர். மேல்தட்டில் உள்ள மக்கள் ஓரளவுக்கு சுயமாக சிகிச்சையை மேற்கொள்கின்றன. ஆனால், கடைநிலையில் உள்ள சாமான்ய மக்களுக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும், வீடு தேடிச் சென்று சமரசம் செய்யும் பேச்சு தேவைப்படுகிறது. எங்களுக்கான ஊதியம் குறைவு தான். ஆனால் எங்களால் சமூக அளவில் உள்ள நோயாளிகள் கண்டறிதலும், சிகிச்சைக்கு சரியான நேரத்தில் உட்படுத்தப்படுவதும் அதிகமாக உள்ளதாக நாங்கள் சார்ந்த தொண்டு நிறுவன ஆய்வறிக்கைகளே குறிப்பிடுகின்றன. ஆகையால், காசநோய் ஒழிப்பு இலக்கின் காலம் அருகில் இருக்கும்போது எங்களைப் போன்ற களப் பணியாளர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். ஊதியத்தையும் தாண்டியும் நாங்கள் சமூக சேவைக்காக காத்திருக்கிறோம் என்றார்.

பல்முனை ஒத்துழைப்பு தேவை: காசநோய் ஒழிப்பில் முதலீடு செய்வோம் என்ற கருத்துரு குறித்து விவரித்த மருத்துவர் ரம்யா, ”நான் இதை வெறும் பண முதலீடு என்பதைத் தாண்டி பல்முனை ஒத்துழைப்பை முதலீடாக எதிர்பார்க்கிறேன். கரோனா ஒழிப்பில் சுகாதாரத் துறை மட்டுமல்ல ஐடி துறை தொடங்கி காவல்துறை வரை பலமுனை ஒத்துழைப்பு இருந்தது. அதனால் மருந்து கண்டுபிடிப்பு, சிகிச்சை முறையில் நாளுக்கு நாள் மேம்பாடு என எல்லாமே சாத்தியமானது. முதல் அலை, மூன்றாம் அலை, ஐந்தாம் அலை என எத்தனை வந்தாலும் எப்படி சமாளிப்பது என்பது மக்கள் தொடங்கி மருத்துவர் வரை அத்துப்படியாக உள்ளது. இது மாதிரியான Multi Sectoral Colloboration... பல்முனை ஒத்துழைப்பைத் தான் நாங்கள் காசநோய் ஒழிப்பில் எதிர்பார்க்கிறோம்.

காசநோயால் விமான சேவைகள் முடங்கவில்லை, வர்த்தகம் தடைபடவில்லை, சர்வதேச மாநாடுகள் முடங்கவில்லை என்பதால் அதனைக் கட்டுப்படுத்தும் வீச்சை நாம் மட்டுப்படுத்தினால் இலக்குகளை நீட்டித்துக் கொண்டேதான் செல்ல வேண்டியிருக்கும். ஒருமுறை ஒரேமுறை வார் ஃபூட்டிங் எனப்படும் போர்க்கால நடவடிக்கை அடிப்படையில் காசநோய் ஒழிப்பை தீவிரப்படுத்த வேண்டும். வெறும் சுகாதாரத் துறை, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தாண்டி பல்முனை ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். இதுதான் நான் காசநோய் ஒழிப்பில் காண விரும்பும் முதலீடு.

மருத்துவர் ரம்யா

அதேபோல் மனித ஆற்றல் இன்னொரு மகத்தான முதலீடு. காசநோயில் இருந்து மீண்டவர்களால் தான் காசநோய் ஒழிப்பில் இன்னும் திறம்பட இயங்க முடியும். கிராஸ் ரூட்ஸ் அளவில் அத்தகைய டிபி லீடர்களை களப்பணியாளர்களாக்கினால் தொற்றை கண்டறிவதும், சிகிச்சையை துரிதப்படுத்துவதும் எளிதாகும். அவர்களை அவ்வாறு களப்பணியார்களாக்க வேண்டுமானால் முறையான பயிற்சியும் அதன் பின்னர் அவர்களது பணிகளைக் கண்காணித்தலும் தேவைப்படும். இதற்கு நிதி முதலீடு தேவைப்படும். இங்கு அரசு தாரளமாக முதலீடு செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.

டெல்லியில் நடைபெறவுள்ள காசநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில், நோயிலிருந்து மீண்ட பெண் ஒருவர் தான் குத்துவிளக்கேற்றி வைக்கவுள்ளார். அதுபோலவே சமூகத்தில் கடைநிலையில் உள்ள மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வெளிச்சத்தைப் பாய்ச்சுதலை நோயில் இருந்து மீண்டவர்களை களப்பணியில் ஈடுபடுத்தும் போது மேற்கொள்ள முடியும்” என்றார்.

காசநோய் ஒழிப்பில் களப்பணியாளர்கள் கணிக்கும் பாதையை மத்திய, மாநில அரசுகளும் பின்பற்றலாமே.

தொடர்புக்கு: bharathi.p@hindutamil.co.in

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x