Published : 06 Apr 2016 08:35 AM
Last Updated : 06 Apr 2016 08:35 AM

மருத்துவக் கவுன்சிலுக்குச் சிகிச்சை தேவை!

மருத்துவர்களுக்கும் இதர அதிகாரிகளுக்கும் வழிகாட்டு நெறிகளை நிர்ணயிக்க வேண்டிய மருத்துவக் கவுன்சிலுக்குத் தலைவராக இருந்தவரே லஞ்சம் வாங்கியதற்காகக் கைது செய்யப்பட நேர்ந்தது அதிர்ச்சியளிக்கிறது என்று தனது அறிக்கையில் கண்டித்திருக்கிறது.

நாடாளுமன்ற நிலைக் குழு. 120 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாட்டில் சுகாதார சேவையும் மருத்துவக் கல்வியும் முறையான கட்டுப்பாடுகளின்றி நிர்வகிக்கப்படுவது அதிர்ச்சி தருகிறது. ஒருபுறம் மருத்துவக் கல்விக்காகும் செலவு மாணவர்களால் தாங்க முடியாத அளவுக்கு இருக்கிறது. மறுபுறம் மருத்துவக் கல்வி நிர்வாகமும் வெளிப்படையாக இல்லாமல் திரைமறைவிலேயே நடக்கிறது.

தரமான மருத்துவக் கல்விக்கும் மருத்துவ சேவைக்கும் நேரடிப் பொறுப்பாளரான ‘இந்திய மருத்துவக் கவுன்சில்’ (எம்.சி.ஐ.) அரசியல் சட்டப்படி உருவாக்கப்பட்ட உயர் அமைப்பாகும். உயர் கல்வி நிறுவனங் களை ஆய்வுசெய்து அங்கீகாரம் வழங்கும் பொறுப்பும் அதிகாரமும் அதற்குத் தரப்பட்டிருக்கிறது. மருத்துவர்களைப் பதிவு செய்யும் உயர் அமைப்பும் இதுதான். இப்படிப்பட்ட மருத்துவக் கவுன்சில் தன்னுடைய கடமையை ஒழுங்காகச் செய்யத் தவறியதல்லாமல் ஊழலிலும் திளைத்தது மன்னிக்க முடியாத தவறு. லஞ்சம் வாங்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு மருத்துவக் கவுன்சிலின் தலைவர் 2010-ல் கைது செய்யப்பட்டார். அந்தக் கவுன்சிலே தாற்காலிகமாகப் புதிதாக மாற்றியமைக்கப்பட்டது.

தனியார் மருத்துவக் கல்லூரியின் உயர் கல்வி இடங்கள் ரூ.50 லட்சம் வரை நன்கொடை பெற்றுக்கொண்டு விற்கப்படுவதாக வரும் செய்திகளைச் சுட்டிக்காட்டிய நாடாளுமன்றக் குழு, அதைத் தடுக்கத் தவறியதற்காக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்திருக்கிறது. தனியார் பெருநிறுவனங்களைப் போன்ற பெரிய மருத்துவமனைகளைத் தர ஆய்வு செய்வதிலும், புதிய மருத்துவப் படிப்புகளைத் தொடங்க அனுமதிப்பதிலும் ஒரேயொரு முகமையை அனுமதிப்பதில் உள்ள ஆபத்தையும் அறிக்கை உணர்த்துகிறது.

மருத்துவக் கல்வி அமைப்பையும் மருத்துவமனைகளின் நிர்வாகத்தையும் நீண்ட காலமாகச் சீரமைக்காமல் அப்படியே நீடிக்கவிட்டது தவறு. இனியும் இதில் சமரசத்துக்கு இடமில்லை. மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் நல்ல தரத்தில் நிர்வகிக்கப்பட வேண்டும். அதற்கான நிர்வாகம் வெளிப்படையாக இருக்க வேண்டும். அது மக்களுடைய நலனையும் பொது நலனையும் மட்டுமே கருதிச் செயல்பட வேண்டும். இதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருந்தால் மருத்துவ சேவை தனிப் பிரிவாகவும் மருத்துவக் கல்வி தனிப் பிரிவாகவும் பிரிக்கப்பட வேண்டும். மருத்துவக் கல்லூரிகளுக்கான பாடத்திட்டம், மாணவர்களுக்கான குறைந்தபட்சத் தகுதிகள், பாடத்திட்டம், பயிற்சிகள் போன்றவை நல்ல தரத்தில் முறையாக நிர்ணயிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசு நியமித்த ரஞ்சித் ராய் சவுத்ரி தலைமையிலான நிபுணர் குழுவின் பரிந்துரைப்படி 2 தனித்தனி வாரியங்களை இதற்காக ஏற்படுத்த வேண்டும். பட்ட வகுப்பு, முதுநிலைப் பட்ட வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சிகளை மேற்பார்வையிடுவது, நிறுவனங்களை மதிப்பிடுவது போன்றவற்றை அந்த வாரியங்கள் மூலம் மேற்கொள்ள வேண்டும் என்று சவுத்ரி குழு பரிந்துரை செய்திருந்தது. மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்தத் தவறியது மட்டுமல்லாமல் ஊழலுக்கும் வழிவகுத்துவிட்ட இப்போதைய மருத்துவ உயர் கல்வி நிர்வாக அமைப்பை இனியும் இப்படியே நீடிக்கவிடுவது சரியல்ல. இது ஆதிக்க சக்திகள் பலனடைய மட்டுமே வழிவகுக்கும். ஒருபுறம் மருத்துவத்தில் உயர் படிப்பு படிக்க உண்மையான ஆர்வத்தோடு காத்துக் கிடக்கும் தகுதியாளர்கள் ஏராளமாக இருக்க, ஒரு சில இடங்களை மட்டுமே வைத்துக்கொண்டு நல்ல விலைக்கு விற்கும் இந்த வியாபாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மருத்துவக் கவுன்சிலுக்கே இப்போது சிகிச்சை தேவைப்படுகிறது. அரசு தயங்கக் கூடாது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x