Published : 28 Apr 2016 10:31 am

Updated : 28 Apr 2016 10:31 am

 

Published : 28 Apr 2016 10:31 AM
Last Updated : 28 Apr 2016 10:31 AM

திருவனந்தபுரம் டு குவஹாட்டி: அள்ளிவீசப்படும் வாக்குறுதிகள்!

தேர்தல் மாநிலங்களில் ஒரு கழுகுப் பார்வை

குண்டர்களை வைத்து தேர்தலில் வெல்லலாம் என்ற கருத்து பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. வெல்லலாம். ஒரு தொகுதியில் வெல்லலாம். இரண்டு தொகுதிகளில் வெல்லலாம். முப்பது, நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு மாநிலம் முழுவதையும்கூட வன்முறையாலும் ஓட்டுப் பெட்டிகளைக் கள்ள ஓட்டுகளால் நிரப்புவதாலும் வெல்லக்கூடிய வாய்ப்புகள் இருந்தன. மேற்கு வங்கத்தில் 1972-ல் நடந்த தேர்தலிலும் காஷ்மீரில் நடைபெற்ற பல தேர்தல்களிலும் இவ்வாறே வெற்றிகள் கிட்டின. ஆனால், இன்று ஒரு மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபடுவது என்பது முடியாத காரியம்.

இடதுசாரிகளைப் பற்றிச் சொல்லும்போது அவர்கள் தேர்தல் வன்முறையை ஒரு கலையாகவே ஆக்கிச் செயல்பட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. அந்தக் 'கலைஞர்கள்' கட்சி மாறியதால்தான் திரிணமூல் வெல்ல முடிந்தது என்றும் சொல்லப்படுகிறது. இதில் ஓரளவு உண்மையிருக்கலாம். ஆனால், மக்களின் ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் பல ஆண்டுகள் ஆட்சி செய்திருக்க முடியாது.


மக்களின் ஆதரவை இழந்ததால் இடதுசாரியினர் தூக்கி எறியப்பட்டனர். அதே ஆதரவை இழந்தால் திரிணமூல் கட்சியும் தூக்கியெறியப்படும் இதை மம்தா நன்கு உணர்ந்திருக்கிறார். "டண்டா டண்டா கூல் கூல் அபர் ஜிட்பே திரிணமூல்" (திரிணமூல் கூலாக வெல்லும்) என்று தொலைக்காட்சிகள் அலறிக்கொண்டிருந்தாலும், போட்டி கடினம் என்பது அவருக்குத் தெரியும். அதனாலேயே மிகவும் திறமையுடன் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் தொகுதிகளில் முழுவதும் வெற்றி பெற முயன்றுகொண்டிருக்கிறார்.

முஸ்லிம் வாக்குகள் தீர்மானிக்கும்

வங்காளத்தின் 294 தொகுதிகளில் 218 தொகுதிகள் தெற்கு வங்காளத்தில் இருக்கின்றன. 76 தொகுதிகள் வடக்கில் இருக்கின்றன. வடக்கு வங்காளத்தில்தான் டார்ஜிலிங், கூச் பிஹார் போன்ற கூர்க்காக்கள் அதிகம் உள்ள இடங்கள் இருக்கின்றன. முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் முர்ஷிதாபாத், மால்டா, வடக்கு தினாஜ்பூர் மாவட்டங்களும் அங்கு இருக்கின்றன.

வாரி வழங்கப்படும் வாக்குறுதிகள்

2011-ல் திரிணமூல் - காங்கிரஸ் கூட்டணி தெற்கு வங்காளத்தில் 191 இடங்களை வென்றது. ஆனால், வடக்கில் 20 இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. எனவேதான் திரிணமூல் தெற்கில் அதிக கவனத்தைச் செலுத்துகிறது. முஸ்லிம்கள் மேற்கு வங்காளத்தில் 28% இருக்கிறார்கள். குறைந்தது 100 தொகுதிகளிலாவது யார் வெற்றி பெறுவார்கள் என்பதை முஸ்லிம் வாக்குகள் தீர்மானிக்கும். எனவே, அவர்களது ஆதரவு பெறாமல் மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைப்பது கடினம். முஸ்லிம்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள். 43% படிப்பறிவு இல்லாதவர்கள். கிராமங்களில் இருக்கும் 80% முஸ்லிம் குடும்பங்களின் மாத வருவாய் சுமார் 5,000 ரூபாய். எனவே, வாக்குறுதிகளை மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற தைரியத்தில் எல்லாக் கட்சிகளும் உறுதிமொழிகளை வாரி வழங்குகின்றன. மம்தாவும் அதையே செய்கிறார். மேலும், அவர் அடிக்கடி இன்ஷா அல்லா என்று சொல்வதும், முஸ்லிம் சகோதர சகோதரிகளே... என்று கூட்டத்தை ஆரம்பிப்பதும் அவர்களைக் கவரும் ஒரு முயற்சி.

முஸ்லிம்கள் என்ன நினைக்கிறார்கள்?

'ஓபன்' பத்திரிகையின் உலேக் சிங்குர் விவசாயிகளைச் சமீபத்தில் நேர்காணல் செய்தார். திரிணமூல் 2011-ல் மகத்தான வெற்றியடைந்ததற்கு அடித்தளம் அமைத்துக்கொடுத்த இடம் அது. அங்கு விவசாயிகள் பெரும் கோபத்தில் இருப்பதைக் கண்டேன் என்கிறார் அவர். அக்பர் அலி மண்டல் என்ற விவசாயி தனது நிலங்களை டாடாவுக்கு ஒரு ஏக்கர் 6 லட்சம் ரூபாய் (சந்தை விலை 90 லட்சம் ரூபாய்) என்ற வீதத்தில் 7 ஏக்கர் நிலத்தை விற்றவர். இன்று வரை அவரது நிலத்தைத் திரும்பப் பெற முடியவில்லை. மம்தா திரும்பிப் பெறுவேன் என்று வாக்குறுதி மேல் வாக்குறுதி கொடுக்கிறார். ஆனால், எல்லாம் நீதிமன்றங்களின் பிடியில் இருக்கின்றன. 'நானோ கார் தொழிற்சாலை வந்திருந்தால் இங்குள்ள இளைய தலைமுறையினருக்கு வேலை கிடைத்திருக்கும். இது ஒரு பயங்கரக் கனவுபோல இருக்கிறது. படித்தவர்கள்கூட இப்போது விவசாயத்தில் இறங்கிவிட்டார்கள். வேலை கிடைப்பது மிகவும் கடினம்' என்கிறார் அக்பர் அலி. 'நான் நிச்சயம் சிபிஎம்முக்குத்தான் ஓட்டுப் போடுவேன்' என்றும் சொல்கிறார். சிபிஎம் வேட்பாளர் ஓட்டுக் கேட்டு வருவது நானோ காரில் - எதை இழந்து விட்டோம் என்பதை மக்களுக்கு நினைவுபடுத்துவதற்காக.

மம்தாவின் நக்சல் நண்பர்களும் அவர் மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறார்கள். 'சிங்குர் நந்திகிராம் வெற்றி எங்களால்தான். மம்தா நன்றி கெட்டவர். எங்களிடமிருந்து எந்த உதவியையும் அவர் எதிர்பார்க்க முடியாது' என்கிறார்களாம் நக்சல்வாதிகள்.

ஆனால், ஜமாத் உலேமா ஹிந்த், திரிணமூல் கட்சியுடன் இணந்து கட்சியின் சின்னத்தில் போட்டியிடுகிறது. சுமார் 1,000 மதரஸாக்கள் இந்த நிறுவனத்தின் கீழ் வருவதால் கணிசமான முஸ்லிம் மாணவ - மாணவிகளின் ஆதரவு மம்தாவுக்குக் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. மொத்தத்தில், முஸ்லிம்கள் ஒரு அணிக்கே வாக்களிப்பார்கள் என்று கூற முடியாத நிலை.

இந்தக் குட்டையில் எந்த மீனைப் பிடிக்க பாஜக முயல்கிறது?

(தொடரும்)

- பி.ஏ.கிருஷ்ணன், மூத்த எழுத்தாளர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com


தேர்தல் 2016மேற்கு வங்கம்திரிணமூல் காங்கிரஸ்மம்தா பானர்ஜி

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x