Published : 16 Dec 2021 03:05 AM
Last Updated : 16 Dec 2021 03:05 AM

வங்கதேச விடுதலைக்கு இந்தியாவின் ஆதரவு: பெருமைமிகு வரலாறு

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் அன்றைய பாகிஸ்தான் ஆட்சியாளர்களுக்கும் கிழக்கு வங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் எழுந்த முரண்பாடுகள், அப்போதைய இந்திய - பாகிஸ்தான் போருக்குக் காரணமானது. வங்கதேச விடுதலைக்குப் போராடியவர்கள், பாகிஸ்தான் ராணுவத்துக்குச் சமபலம் இல்லாத நிலையில், அந்தப் போராட்டத்தை நடத்திக்கொண்டிருந்தனர். விடுதலைக்குப் போராடியவர்கள் மட்டுமின்றி, அங்கு நிராயுதபாணிகளாக இருந்த மக்களும் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதலுக்கு ஆளாயினர். அந்நிலை தொடரும்பட்சத்தில், அது இந்தியாவின் நலனுக்கும் பாதுகாப்புக்கும் ஏற்றுக்கொண்டுள்ள அடிப்படைகளுக்கும் எதிரானது மட்டுமின்றி அச்சுறுத்தலும் ஆகும் என்று மாநிலங்களவை விவாதத்தின்போது குறிப்பிட்டார், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி. நாடாளுமன்றத்திலேயே வங்கதேச விடுதலை வீரர்களுக்குத் தன் வாழ்த்துகளை முன்கூட்டியே அவர் தெரிவித்துக்கொண்டார்.

சுதந்திரத்துக்குக் குறைவான எதையும் வங்க மக்கள் ஏற்க மாட்டார்கள் என்ற நிலையில்தான், அவர்களை இந்தியா ஆதரித்தது. இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றநிலை உருவானபோது, இந்தியா தனது படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற யோசனைகளையும் சில நாடுகள் முன்வைத்தன. இந்தியப் படைகள் திரும்பப் பெற்றால், அது பாகிஸ்தானுக்குச் சாதகமாகிவிடும், அதற்கு அனுமதிக்கமாட்டோம் என்பதில் பிரதமர் இந்திரா காந்தி உறுதிகாட்டினார்.

கிழக்கு பாகிஸ்தானில் தாக்குதல் நடத்துவதற்காக இந்தியப் படைகள் உள்ளே புகுந்தன என்ற புகாரை முகாந்திரமாகக் கொண்டு, இந்தியாவுடனான ஆயுத ஒப்பந்தங்களை முறித்துக்கொண்டது அமெரிக்கா. ஆக்கிரமிப்பாளர்கள் என்று இந்தியாவை அடையாளப்படுத்துவதன் மூலமாக, தேசிய நலன்களை மறந்துவிடும்படி எங்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது என்று தனது நிலைப்பாட்டைத் தெளிவுபட உணர்த்தினார் இந்திரா காந்தி. வங்கதேசத்திலிருந்து பாகிஸ்தான் ராணுவத்தைத் திரும்பப் பெறுவதே அமைதிக்கான ஒரே வழி என்று உறுதிபட அவர் கூறினார். 1971 போருக்கு முன்பாக பாகிஸ்தான் இந்தியாவை மூன்று தடவைகள் தாக்கியது.

அதற்காக, ஐக்கிய நாடுகள் அவையோ வல்லரசு நாடுகளோ பாகிஸ்தானைக் கண்டிக்கவில்லை என்பதை நினைவுபடுத்திய இந்திரா காந்தி, இந்த முறை அப்படி இந்தியா ஏமாற்றத்துக்கு உள்ளாகாது என்று எச்சரித்தார். வங்கதேச விடுதலை வீரர்கள் (முக்தி வாஹினி) இந்திய மண்ணிலிருந்து செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டுக்கு, இந்திய-வங்கதேச எல்லை மிக நீளமானது, இந்திய ராணுவத்தை முழுமையாக நிறுத்தினாலும்கூட இத்தகைய செயல்பாடுகளை எங்களால் நிறுத்த முடியாது என்று துணிச்சலான பதிலைச் சொன்னார். மேலும், வங்கதேச அகதிகளை இந்தியாவுக்குள் அனுமதிக்கவும் அவர் தவறவில்லை.

பாகிஸ்தான் உள்விவகாரத்தில் இந்தியா தலையிடுகிறது என்று கூச்சலிட்ட நாடுகளுக்கு இந்திரா காந்தியின் பதில், நீங்கள் மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட்டதில்லையா என்பதுதான். பாகிஸ்தான் போரை அறிவித்து, விமானத் தாக்குதலைத் தொடங்கிய பின்பே இந்தியா எதிர்த் தாக்குதலைத் தொடங்கியது. நாடு பிடிக்கும் எண்ணம் எப்போதும் இந்தியாவுக்கு இல்லை. என்றுமே அமைதியை விரும்பும் நாடு இது. அந்த அமைதிக்கு ஒரு எல்லை உண்டு என்பதே 1971 யுத்தம் உணர்த்தும் செய்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x