Published : 09 Sep 2021 03:14 AM
Last Updated : 09 Sep 2021 03:14 AM

கற்றல் திறன் குறைபாடும் தமிழ்வழிக் கல்வியும்

இந்தியாவில் ஆரம்பக் கல்வி பயிலும் குழந்தைகளில் பத்திலிருந்து பதினைந்து சதவீதம் பேருக்குக் ‘கற்றல் திறன் குறைபாடு’ இருக்கிறது என்கின்றன சமீபத்திய ஆய்வுகள். தோராயமாக ஒரு வகுப்பில் நான்கிலிருந்து ஐந்து குழந்தைகள். இந்தக் குழந்தைகளை ஆரம்பத்திலேயே கண்டறிவதிலும், அவர்களுக்குப் பயிற்சியளிப்பதிலும் இந்தியா மிகவும் பின்தங்கியிருப்பதாக சர்வதேசக் குழந்தைகள் அமைப்புகள் வருத்தம் தெரிவித்திருக்கின்றன. குறிப்பாக, ஆசிரியர்களும் பெற்றோர்களும் இது தொடர்பாக எதிர்மறையான பார்வையையும், அலட்சியப் போக்கைக் கொண்டிருப்பதும் இந்த நிலைக்கு முக்கியமான காரணம்.

சராசரி இந்திய மனநிலையின்படி ஒரு குழந்தையின் அறிவு என்பது மதிப்பெண்களுடன் நேரடித் தொடர்புடையது. “என் பையன் எல்லாப் பாடத்துலயும் நூறு வாங்குற அளவுக்குக் கெட்டிக்காரன்” என்னும் வகையில்தான் நாம் அறிவைப் புரிந்துவைத்திருக்கிறோம். ஆனால், தேர்வில் வாங்கும் மதிப்பெண் ஒரு குழந்தையின் கவனத் திறன், மனப்பாடம் செய்யும் திறன், அதைத் தேவையான நேரத்தில் வெளிப்படுத்தும் திறன் ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. இதில் ஏதாவது ஒரு திறன் பாதிக்கப்படும்போது மதிப்பெண்கள் குறையலாம். இந்த மூன்று திறன்களுக்கும் அடிப்படையானது மொழியைக் கையாளும் திறன். இடது மூளை இந்த மொழித் திறன் செயல்பாட்டை நிர்ணயிக்கிறது.

ஏதேனும், சில காரணங்களால் இந்தப் பகுதி மூளையின் செயல்திறன் பாதிக்கப்படும்போது மொழி அறிவும் பாதிப்படைகிறது. அதனால் கற்றலும் பாதிக்கப்படுகிறது. இங்கே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், மொழி சார்ந்த கற்றல் மட்டுமே அவர்களுக்குப் பாதிக்கப்படுகிறது. ஆனால், மற்ற திறன்களில் அவர்கள் சராசரியைவிட சிறப்பாகவே செயல்படுவார்கள். ஓவியம், வண்ணங்கள், இயற்கையைப் புரிந்துகொள்வது, சக மனித உறவு, தொழில்நுட்ப அறிவு போன்ற மொழி சாராத அறிவில் மிகுந்த திறனுடன் இருப்பார்கள். ஐன்ஸ்டைன், எடிசன் போன்ற அறிவியலர்களுக்குக்கூடக் கற்றல் திறன் குறைபாடு இருந்திருக்கிறது. ஆனால், அவர்களின் அறிவு சராசரியைவிட அதிகம். அதனால் கற்றல் திறன் குறைபாடு என்பது அறிவுத் திறன் குறைபாடு கிடையாது. அதே போல அவர்கள் தாமதமாகக் கற்றுக்கொள்பவர்களும் அல்ல, கற்கும் முறை மொழியை அதிகமாகச் சார்ந்திருக்கும் வழக்கமான முறையிலிருந்து வேறுபட்டு, மொழியை மிகக் குறைவான அளவுக்கு மட்டுமே சார்ந்திருக்கும் வகையில் இருக்கும் அவ்வளவே.

பேச்சு மொழியைப் போல எழுத்துகளைப் படிப்பதும், படித்தவற்றைப் புரிந்துகொள்வதும், சுயமாக வாக்கியங்கள் அமைத்து எழுதுவதும் மூளைக்கு இயற்கையாக வருவது அல்ல. அது திரும்பத் திரும்பப் பயிற்சி செய்வதனால் ஏற்படுவது. ஒவ்வொரு முறையும் மொழி தொடர்பான தகவல்களைக் குழந்தைகள் எதிர்கொள்ளும்போது மொழியறிவு கூர்மையாகிக்கொண்டே வரும். ஒரு குழந்தைக்குச் சரியான வயதில், சரியான முறையில், சரியான மொழியை அறிமுகப்படுத்தும்போது, அது அந்தக் குழந்தையின் மொழியறிவைச் சிறப்பானதாக மாற்றும்.

மொழிகளைப் பொறுத்தவரை உச்சரிப்புக்கும் எழுத்துக்கும் இடையே பெரிய வித்தியாசமில்லாத மொழிகள் (வெளிப்படைத்தன்மையுள்ள மொழிகள்), வித்தியாசமுள்ள மொழிகள் (வெளிப்படைத்தன்மையற்ற மொழிகள்) என்று பிரிக்கப்பட்டிருக்கின்றன. ‘மரம்’ என்ற வார்த்தை உச்சரிப்பிலும் எழுத்திலும் ஒரே மாதிரியாக வெளிப்படுகிறது. அதனால், தமிழ் வெளிப்படைத்தன்மையுள்ள மொழி. ஆனால் ‘Know’ என்ற வார்த்தை உச்சரிப்பில் ஒன்றாகவும், எழுத்தில் வேறாகவும் இருக்கிறது. இப்படிப்பட்ட மொழிகள் வெளிப்படைத்தன்மையற்ற, பெரும்பாலும் எழுத்துகளை மையப்படுத்திய மொழிகளாக இருக்கின்றன.

ஆங்கிலம் போன்ற உச்சரிப்புக்கும் எழுத்துகளுக்கும் இடையே அதிக வித்தியாசத்தைக் கொண்டிருக்கும் மொழியில் கற்றல் திறன் குறைபாடு மிக அதிகமாக இருக்கின்றன என்கின்றன சர்வதேச ஆய்வுகள். அதே நேரத்தில் ஃபின்னிஷ், ஸ்பானிஷ், கிரேக்கம் போன்ற மிகவும் வெளிப்படையான, எளிமையான, வடிவத்தைச் சார்ந்து இருக்கும் மொழிகளில் கற்றல் திறன் குறைபாடு குறைவாக இருக்கிறது. மொழியின் பண்புகளுக்கும் அதைக் கற்கும் திறனுக்கும் நேரடித் தொடர்பு இருக்கிறது என்பதுதான் மொழியியல் ஆய்வாளர்களின் கருத்து. ஜப்பானிய, சீன மொழிகள் சித்திர வடிவில் இருப்பதால் அவற்றின் எழுத்துக்கும் உச்சரிப்புக்கும் இடையே பெரிய வித்தியாசங்கள் இல்லாமல் வெளிப்படைத்தன்மையாக இருக்கின்றன. அதனால், அந்த மொழிகளைக் கையாள்வது எளிமையாக இருக்கிறது. ஆகவேதான் ஆங்கிலத்தில் 15% அளவுக்கு இருக்கும் கற்றல் குறைபாடு ஜப்பானிய, சீன மொழிக் கல்வியில் 5%-க்கும் குறைவாகவே இருக்கிறது. தமிழும் அவற்றைப் போலவே வெளிப்படைத்தன்மையுடைய, எளிமையான மொழியே. அதனால், தமிழ்மொழிக் கல்வியிலும் கற்றல் குறைபாடு குறைவாகவே இருக்க முடியும்.

கற்றல்திறன் குறைபாடு தொடர்பான ஆய்வுகள் உலகெங்கும் முன்பைவிட அதிகமாக முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. ஆங்கிலம் சாராத நாடுகளில் அவர்களின் தாய்மொழியில் கல்வி பயிலும்போது, கற்றல் திறன் குறைபாடு எந்த அளவுக்கு இருக்கிறது என்ற ஆராய்ச்சிகள் சமீபத்தில் பெருமளவு நடந்துவருகின்றன. அதே போல, கற்றல் திறன் குறைபாடு உள்ள குழந்தைகள் தாய்மொழி வழிக் கல்விக்குத் திரும்பும் போக்கும் நடந்துவருகிறது.

ஏனைய மொழிகளுடன் ஒப்பிடும்போது, பல்வேறு வகைகளில் சிறப்பான மொழி தமிழ். வெளிப்படைத்தன்மை நிறைந்த மொழியாக இருப்பதால், ஆங்கிலத்தைவிடத் தமிழைக் கற்றுக்கொள்வது எளிதான ஒன்றாகவும், மொழியறிவு என்பது தமிழ் மொழியில் சுலபமாகக் கைக்கொள்ளக் கூடிய ஒன்றாகவும் இருக்கும். அதனால், கற்றல் திறன் குறைபாடு தமிழைப் பொறுத்தவரையில் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைக் கண்டறிவதற்கான ஆராய்ச்சிகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம். அதே போலக் கற்றல் திறன் குறைபாடுடைய குழந்தைகள், தமிழ்வழிக் கல்விக்குத் திரும்பும்போது அதன் தாக்கம் எப்படி இருக்கிறது என்பதையும் நாம் கண்டறிந்தாக வேண்டும்.

கல்வி, மருத்துவத் துறையில் ஏனைய மாநிலங்களுக்கு முன்னோடியாக இருக்கும் தமிழ்நாடு, கற்றல் திறன் குறைபாடு தொடர்பான ஆராய்ச்சிகளிலும், செயல்பாட்டிலும் முன்னோடியாக இருந்து, மாநிலம் முழுவதும் இது தொடர்பான தரவுகளைப் பெற வேண்டும். அதற்கென்று கல்வியாளர்கள், மனநல மருத்துவர்கள், மொழியியல் வல்லுநர்கள், ஆராய்ச்சியாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பெற்றோர்கள் போன்றோரை ஒருங்கிணைத்து, அரசாங்கம் இந்த ஆராய்ச்சி தொடர்பான திட்டங்களை விரைவாக வகுத்துச் செயல்படுத்த வேண்டும். தமிழ்வழிக் கல்வி பயிலும் மாணவர்களிடம் இருக்கும் கற்றல் திறன் குறைபாடு தொடர்பான முழுமையான தரவுகள் தொகுக்கப்படும்போது அதில் நாம் இந்த உலகத்துக்குச் சொல்ல வேண்டிய முக்கியமான செய்தி ஒன்று அடங்கியிருக்கும்.

- சிவபாலன் இளங்கோவன், மனநல மருத்துவர். தொடர்புக்கு: sivababalanela@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x